சூரியன் இறைவனையும், இறைவியையும் ஏழு நாட்கள் ஒருசேர வழிபடும் அபூர்வத் தலம், கட்டிடக்கலையில் உலக அதிசயத்திற்கு இணை யான கோவில், தக்கன் பேறு பெற்ற ஆலயம், சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம், தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம், முதலாம் ராஜேந்திர சோழன் தன் காதலி பரவைநங்கைக்காக கட்டி எழுப்பிய திருத்தலம் சோழ மன்னனின் குறு நாட்டு தலைநகரம், கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பனையபுரம் மெய்யம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில்
தல வரலாறு
சோழவள நாட்டின் துணை கூட்டங்களில் ஒன்றான பனையூர் நாட்டின் உட்பகுதி நாடான புரையூர் நாட்டின் பரவைபுரமாக விளங்கியதே. இன்றைய பனையபுரம். இவ்வூரில் வாழ்ந்த நாட்டியப் பேரொளி பரவை நங்கையின் மீது அளவுகடந்த காதல் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன். இவள் பெயரால் பல்வேறு கொடைகளையும், தான தர்மங்களையும் வழங்கினான். ஓர் அரசிக்கு இணையாக அவளை மதித்து வந்தான். இதற்கு ஆதாரமாக கோவிலின் பின்புறச் சுவரில் இரண்டாம் ராஜேந்திர சோழனின் ஆட்சியாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு விளங்குகின்றது.
அதில் இவ்வூர் பரவைபுரம் என காணப்படுகிறது. இவளைப் பற்றிய குறிப்பு திருவாரூர் தியாகராஜர் கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இவள் பெயரால் பரவைபுரம் என்ற ஊரை உருவாக்கி, ஆலயம் எழுப்பப்பட்ட செய்தி காணப்படுகிறது. திருவாரூர் ஆலய மேற்கு கோபுரவாசல் அருகேயுள்ள ஒரு சன்னிதியில் இருவரின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. பரவைபுரம் என்ற பெயரே பனையபுரமாக மருவியுள்ளது.
வேடனால் வேட்டையாடப்பட்ட புறாவின் உயிர்காக்க, தன் தசையை அறுத்து உயிரையும் விடத் துணிந்த சிபி மன்னனை தடுத்தாட்கொண்டு தடுத்தாட் இடம் இது என புராணம் கூறுகின்றது. இதற்கு சான்றாக வாகன மண்டபத் தூணில் புடைப்பு சிற்பம் அமைந்துள்ளது.
தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன், வீரபத்திரனால் தாக்கப்பட்டு பற்களையும், பயத்தையும் இழந்தான். தன் சாபம் நீங்கி பழைய நிலையை அடைய, இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றதாக, தல புராணம் கூறுகிறது. மேலும் சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்த தக்கன், தன் பழி பாவம் தீர வழிபட்ட தலங்களுள் ஒன்று பனையபுரம். ராஜகோபுரம் உள்வாசலில் தக்கனின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது.
பனங்காட்டீசன் கண்ணமர்ந்த நாயனார் நேத்தோதாரனேஸ்வரர் சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். இதன் பொருள் கண் கொடுத்த கடவுள்வுள் என்பதாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.'
இத்தலத்தினை திருஞானசம்பந்தர் தமது "புறவார்ப் பனங்காட்டூர் பதிகம்" வாயிலாக புகழ்ந்துள்ளார். சோழர்கள் காலத்தில் இக் கோவில் மிகப் பெரிய பண்பாட்டு மையமாக திகழ்ந்தது. அதேபோல் பசிப்பிணி போக்கும் வகையில் சிவனடியார்கள் மற்றும் சில பிராமணர்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வந்துள்ளது. கல்வி போதிக்கும் சிறுவர் பள்ளியும் இருந்துள்ளது. இக்கோவிலில் மூன்று தண்ணீர் பந்தல்கள் இருந்ததையும் அறிய முடிகின்றது.
இக்கோவிலின் முன் மண்டபத்தின் தென்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, ராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார் என்னும் வைணவ ஆலயம் இருந்ததை குறிப்பிடுகின்றது. இவ்வாலய திருவிழா நடத்த நிலக்கொடை வழங்கப்பட்ட செய்தியும் கல்வெட்டின் வாயிலாக தெரிகின்றது. ஆனால் ஆலயத்தின் இருப்பிடம் இதுநாள் வரை கண்டறியப்பட வில்லை. அம்மன் சன்னிதியின் எதிர்புறம் மூன்று வைணவ ஆலயங்களின் தூண்கள் மட்டுமே இதற்கு சாட்சிகளாக நிற்கின்றன.
கோவில் அமைப்பு
இக்கோவில் கிழக்கு முகமாக எழிலுடன் அமைந்துள்ளது. கோவில் கருவறை சிற்பங்கள், முதலாம் ராஜேந்திர சோழன் காலத் தவையாகும். இதற்கு சான்றாக தட்சிணா மூர்த்தி, பிரம்மா, துர்க்கை இன்றும் காட்சி தருகின்றனர். நான்கு நிலை ராஜகோபுரம் சுமார் அறுபது அடி உய ரத்தில் நிமிர்ந்து நிற்கின்றது. இதுவும் இதன் அருகே உள்ள சிங்கமுக தூண்களும் விஜயநகர காலத்தை சேர்ந்தவை ஆகும்.
கருவறையில் மூலவர் பனங்காட்டீசன் வட்ட வடிவ ஆவுடையாராக, கிழக்கு முகமாக காட்சி தருகின்றார். திருஞான சம்பந்தர் இவரை புறவார் பனங்காட்டூர்' என அழைத்தாலும், கல் வெட்டுகளில் கண்ணப்ப நாயனார்" என்றும், 'பரவை ஈஸ்வரம் உடைய மகாதேவர்" என்றும், 'திருப்பனங்காடு உடைய மகாதேவர்' என்றும் பலவாறு கூறப்பட்டுள்ளது.
சிவனின் இடதுபுறத்தில் சற்று தொலை வில் அம்பிகைக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் மெய்யாம்பிகை, புறவம்மை, சத்யாம்பிகை, அன்னை கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகள் கொண்டு, நான்கு கரங்களுடன் எழிலான கோலத்தில் அருள்காட்சி தருகின்றாள். அலங்காரத்தில் அன்னையின் வடிவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
இது தவிர, கொடிமரம் அருகே பல்லவர் கால கற்பலகை விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் சன்னிதிகள், அறுபத்து மூன்று நாயன்மார் சிலைகள் மற்றும் சூரிய பகவானின் தனிக்கோலம் அமைந்துள்ளன.
இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில் முடிவாக, அன்னை சத்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய் சத்தியம் செய்பவர்கள், அடுத்த எட்டு நாட்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பதால் எவரும் பொய் சத்தியம் செய்ய முன்வருவதில்லை.
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்தில் பனையபுரம் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது. விக்கிர வாண்டி சுங்கச்சாவடி அடுத்து இடதுபுறம் செல்லும் விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் முதல் ஊராக பனையபுரம் அமைந்துள்ளது.
ஈசனை சூரியக்கதிர்கள் வணங்கும் அதிசயம்
ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களால் ராஜ கோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி, மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் ஈசனின் சிரசில் பட்டு வணங்குகின்றது.
அதன்பின் அது மெல்லக் கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகின்றது. பாதத்தைத் தொடும் அதேவேளையில், சற்றுத் தொலைவில் உள்ள மெய்யாம்பிகை அம்மன் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. பின்பு அந்த ஒளி மெல்ல கீழிறங்கி அன்னையின் பாதத்தில் அடைவதுடன் அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகின்றது. இப்படி தொடர்ந்து ஏழு நாட்கள் ஆண்டுதோறும் நிகழ்கின்றது.
மகப்பேறு தரும் பனை மரம்
ஆலயத்தின் தல மரமாக பனை மரமும், தல தீர்த்தமாக பத்ம தீர்த்தமும் உள்ளன. தல மர மான பனை மரத்தில் ஆண் பனை உயரமாகவும், பெண் பனை சற்று குள்ளமாக காலங்காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையில் இருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்ப தும் நம்பிக்கையாக உள்ளது.
கோல்தாங்கி நிற்கும் திருநீலகண்டர்
அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரிசையில் இக்கோவிலில் அமைந்துள்ள திருநீலகண்டரின் சிலா வடிவம் தனித்துவமானது. இறைவனின் திருவிளையாடல்படி, திரு நீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி, ஒருவரை ஒருவர் தொடாமல் நிற்கும் கோலம் கண்டு வணங்கத்தக்கது.
Source
தினத்தந்தி அருள்தரும் ஆன்மீகம்
0 கருத்துகள்