வடநாட்டில் பண்டரிபுரம் இருப்பது போலவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம், 'தென் பண்டரிபுரம்' என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் வடபண்டரிபுரத்தில் சென்று நிறைவேற்ற முடியாத காரியங்களை, இவ்விடத்தில் வந்து வணங்கி வழிபட்டால் பெறலாம் என்கிறார்கள்.
தல வரலாறு
விஜயநகரப் பேரரசில் விட்டலராயர் என்ற மன்னன் முறப்ப நாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தார். பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்க விட்டலர் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்த மன்னர், அவருக்கு தாமிரபரணியில் ஒரு கோவிலை கட்டவேண்டும் என நினைத்தார்.
இதற்காக பாண்டுரங்கரை நோக்கி தவமிருந்தார். கனவில் தோன்றிய பாண்டுரங்கர், "மன்னா தாமிர பரணி ஆற்றங்கரையில் எலுமிச்சம் பழம் மிதக்கும். அந்த பழம் சுழலும் தண்ணீரில் அப்படியே நிற்கும். அவ்விடத்தில் தோண்டி பார்த்தால் என்னுடைய விக்ரகம் கிடைக்கும். அப்போது தலைக்கு மேலே ஒரு கருடன் சுற்றுவார். அவர் வழிகாட்டுதலின்படி மேற்கு பகுதிக்கு சென்று, கருடன் அடையாளம் காட்டும் இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு" என்று கூறினார்.
உடனே விழித்தெழுந்த மன்னர், குதூகலமடைந்தார். அந்தச் சமயத்தில் தாமிரபரணி ஆற்றில் ஒரு எலுமிச்சம் பழம் மிதந்து செல்வது தெரிந்தது. மன்னன் தன் படைகளுடன் ஆற்றில் மிதந்து செல்லும் பழத்தைப் பின்தொடர்ந்தான். சிறிது தூரத்தில் முத்தாலங்குறிச்சி சென்றதும் எலுமிச்சம் பழம் நின்றுவிட்டது. மன்னன் அந்த இடத்தை தன் படைவீரர்கள் மூலம் தோண்டினார். அவ்விடத் தில் பண்டரிபுரம் பாண்டுரங்கரின் உற்சவர் விக்ரகம் கிடைத்தது. அகம் மகிழ்ந்தார் மன்னர், அவர் எதிர்பார்த்த படியே கருடன் வட்டமிட்டு மேற்கு நோக்கி பறந்தது. தன் படை சூழ பாண்டுரங்கரை நெஞ்சோடு அணைத்தபடி மேற்கு நோக்கி நகர்ந்தார், மன்னர். அங்கு நாட்டார்குளம் என்ற இடத்தினை கருடன் காட்டியது. அவ்விடத்தில் கோவில் கட்டி அவ்வூருக்கு 'விட்டிலாபுரம்' என பெயர் வைத்தார்.
அதன்பின் சுற்றி குடியிருப்புகளை அமைத்து, திருப்பணிகள், பூஜை ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவேற்றினார். இரவு, பகலாக இறைவன் சன்னிதியில் நின்று விட்டலரின் கருணை வேண்டி துதித்து நின்றார். காலங்கள் கடந்தது. ஒருநாள் மன்னன் முன் தோன்றிய இறைவன், "மிகப்பெரிய திருப்பணி செய்து விட்டாய். உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
மன்னரோ இறைவனை கண்டு இரு கைகூப்பி நின்றார். அதன்பின் தனக்கு ராஜ்ஜியங்கள் வேண்டும் என்றோ, தன் கஜானா விருத்தியாக வேண்டு மென்றோ. எதிரிகளை வெல்ல ஆயுதம் வேண்டும் என்றோ பகவானிடம் அவர் கேட்கவில்லை. "பாண்டுரங்க விட்டல் பெருமானே! உம்முடைய சன்னிதிக்கு வந்து தொழும் மக்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சியை அருளவேண்டும். அனைத்து ஐஸ்வரியங்களும், திருமணப்பேறும், மகப்பேறும் உடனடியாக நடக்க வேண்டும்" என்று கோரினார்.
அதுமட்டுமல்லாமல், "இந்த பகுதியில் காலங்கால மாக சத்தியம், நியாயம், நீதி தழைத்தோங்க அருள் வாக்கு அளிக்கவேண்டும். அதுவே நான் கேட்கும் வரம் "என்றார் மன்னர்.இறைவன் கோடி சூரியப்பிரகாசத்துடன் பன்னகைத்து " உன்தன்னலமற்ற கோரிக்கை இந்த மண்ணில் ஒரு தர்மமாகவே நிலைத்திருக்கும். இந்த தலத்துக்கு வந்து என்னை பணிந்தோர் எல்லோர் வாழ்விலும் நலம் பெருகும். பல பெருமைகளை பெறுவர்" என்று அருள் புரிந்தார். இவ்விடம் 'தென்பண்டரிபுரம் 'என்று அழைக்கப்பட்டது. பண்டரிபுரம் சென்று யாம் வேண்டுபவர்கள் இங்கு வந்து நின்றாலே போதும் வேண்டும் வரம் கிடைக்கிறது என்கிறார்கள்.
கோவில் அமைப்பு
மூலவர் பாண்டுரங்க விட்டலர் என்ற திருநாமத்துடன் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அருகில் ருக்மணி தாயார், சத்தியபாமா தாயார் ஆகியோரும் காட்சி அருள்கிறார்கள். மன்னன் கண்டெடுத்த உற்சவ மூர்த்தி பாண்டுரங்கள் என்ற திருநாமத்தில், நான்கு திருக்கரத்துடனும் அருள் வழங்குகிறார். இரண்டு திருக்காங்களை இடுப்பிலும், மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும் உள்ளார். அருகில் ருக்மணி, சத்தியபாமா, பூமாதேவி, ஸ்ரீ தேவி, நீலாதேவி ஆகியோரும் அருள்பாலிக் கிறார்கள்.
கோவிலில் முதலில் இருப்பது 16 தூண்களைக் கொண்ட மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம் காணப்படுகிறது. மிக உயரமாக காட்சி தரும் இக்கொடிமரம் மூலவரின் அனுக்கிரகத்தை வெளிப்படுத்துகிறது. அடுத்து கருடாழ்வார் சன்னிதி மேற்கு நோக்கி உள்ளது. கோவிலுக்கு உள்ளே ருக்மணி தாயார், சத்யபாமா தாயார், சேனை முதல்வர், உடையவர் சன்னிதி தனித்தனியாக உள்ளது. இக்கோவிலில் சிறுசிறு சிற்பங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இவை நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்களுக்கு முன்னோடி என கூறப்படுகிறது. கோவில் வெளிப்பிரகாரத்தில் யானை வலம் வந்ததால், 'ஹஸ்தகிரி' எனப் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
0 கருத்துகள்