Ad Code

Ticker

6/recent/ticker-posts

பெய்யெனப் பெய்யும் மழை

 தமிழ் அறிவோம்!



" பெய்யெனப் பெய்யும் மழை " 


திருமணமான பெண்ணுக்கு கணவனே வழித்துணை, வழிகாட்டி ஆவான். 

 

கண் + அவன் = கணவன்.

இல்வாழ்க்கையில் ஈடுபடும் பெண்ணுக்குக்  கண்ணாக இருந்து  வாழ்நாள் முழுவதும் அவளை வழி நடத்துவதால்தான் அவன் ' கணவன் ' என்று அழைக்கப்படுகிறான். 

"ணவனே கண்கண்ட தெய்வம் " என்பார்கள்.  ஏன் தெரியுமா?  தெய்வம் என்ற ஒன்று இருப்பதை இதுவரை  யாரும் கண்டதில்லை. அதுவொரு நம்பிக்கையே. ஒரு பெண் தன்னுடைய  கண்ணால் கண்டு உணரக்கூடியவற்றுள் தெய்வம் என்று யாரையாவது சுட்டிக்காட்ட வேண்டுமென்றால்,  அவள்  கணவனையே அவள் சுட்டிக்காட்ட வேண்டும். ஏனென்றால், தெய்வத்தின் குணநலன்கள் என்று எதையெல்லாம் குறிப்பிடுகிறார்களோ அதையெல்லாம் பெற்றவனாக கணவனே விளங்குகிறான். அதனால்தான் ,  " கணவனே கண்கண்ட தெய்வம் " என்கிறார்கள்.  கணவன் என்பவன் தெய்வம் என்றால்,  மனைவி என்பவள் யார்? மனைவியின் சிறப்பு என்ன? என்று நீங்கள் கேட்கலாம். வாருங்கள் விடைகாண்போம். 


" தெய்வம் தொழாஅள்   கொழுநன் தொழுதெழுவாள் 

பெய்யெனப் பெய்யும் மழை " .

( குறள் - 55)


வேறு தெய்வத்தைத் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயில் எழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.  வழக்கமாக  எல்லோரும் சொல்லுகின்ற  கருத்து இதுவேயாகும். உண்மையில் வள்ளுவர்  கூற வந்த கருத்து இதுமட்டுமன்று. வேறொரு கருத்தும் உள்ளது. அதையும் இப்போது ஆராய்ந்து அறிவோம்.


ணவன் தெய்வம் என்றால், அந்தத் தெய்வத்தை ( கணவனை)ப் படைத்தது யார்? இயற்கைதானே. அந்த இயற்கையின் பல்வேறு வடிவங்களில் ஒன்றுதான் மழை.  

"கொழுநன் ( கணவன்) தொழுதெழுவாள் " என்பதற்கு கணவனின் காலில் விழுந்து வணங்கி எழுதல் என்பது பொருளன்று . 'வணங்குதல்' என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் " அன்பொழுகல் " என்பதாகும். அளவில்லா அன்பை வெளிப்படுத்துவதே  'அன்பொழுகல்"  என்பர்.  'எழுதல் ' என்ற சொல்லுக்குத் தோன்றுதல் என்ற பொருள் உண்டு. 

' கொழுநன் தொழுதெழுவாள் " என்பதற்குக் 'கணவன்மீது அளவற்ற அன்புகொண்டு அவன்வழியில்  நடக்கும் பெண்ணாகத் தோன்றுபவள் ' என்பதே பொருளாகும். 


ன்னை  வழிநடத்தக் கூடியவர்களின்மீது அளவற்ற அன்புகொண்டு, அவர்கள் காட்டுகின்ற வழியை யார் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்களிடம் இயற்கையே அடங்கி நிற்கும்.   தன்னை வழிநடத்தும் கணவனின் அன்புக்குக் கட்டுண்டு கிடக்கும் பெண்ணொருத்தி மழையைப் பார்த்து, மழையே நீ பெய்"  என்றால் அது பெய்யுமாம். அதைத்தான் " பெய்யெனப் பெய்யும் மழை " என்கிறார் வள்ளுவர்.  

ணவன் தெய்வம் என்றால், அந்தத் தெய்வத்தைப் படைத்தது யார்? இயற்கை தானே. 'அந்த இயற்கையையே அடக்கி ஆளும் வலிமை பெற்றவள் பெண் மட்டுமே ' என்கிறார் வள்ளுவர்.


"ணவனின் காலில் விழுந்து எழு "  என்று ஆணாதிக்கம் பேசவில்லை . " பெண்ணொருத்தி  பெய்யெனச் சொல்ல பெய்யும் மழை " என்பதன் வாயிலாக  ஒரு பெண் நினைத்தால் அந்த இயற்கையின் மீதே தன் ஆதிக்கத்தைச் செலுத்துவாள் என்று பெண்ணாதிக்கம் பேசுகிறார் வள்ளுவர்." இயற்கையே இங்கு எல்லாவற்றையும் விட பெரியது. அந்த இயற்கையையே  கட்டுப்படுத்துபவள் பெண்  " என்று பெண்ணின் பெருமையைப் போற்றுகிறார் வள்ளுவர். இனியாவது இதையுணர்ந்து பெண்ணினத்தைப் போற்றுவோம். 


ஒருமுறை தமிழ்ப் பாடவேளையில் ,என் தமிழாசிரியர் இந்தத் திருக்குறளையும் , அதன் விளக்கத்தையும் கூறினார்.  அப்போது என் தமிழாசிரியரிடம் ,  " ஐயா,  ஒரு பெண் மழையைப் பார்த்து  பெய்யென்று சொன்னால் மழை பெய்யுமா? அப்படி அந்தப் பெண்  சொல்லியும் மழை பெய்யவில்லை என்றால்,  அவள் கணவனைத் தொழுது எழாத பெண் என்று எண்ணலாமா? "  என்று கேட்டேன். அதற்கு அவர்,  " அப்படி இல்லை.  கணவனைத் தொழுது எழக் கூடிய  பெண்கள் இருவர்  இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பெண்,  " நான் வேளாண்தொழில் செய்யவேண்டும் . ஆகையால் , மழையே நீ பெய் " என்கிறாள்.  அதே நேரத்தில் இன்னொரு பெண்,  " நான்  நெல்லினைக்  காய வைத்திருக்கிறேன் . ஆகையால்,  மழையே நீ பெய்யாதே " என்கிறாள்.  இப்போது மழை என்ன செய்யும்? என்று கேட்டார். " செய்வது அறியாது  மழை குழம்பி நிற்கும் " என்றேன் நான். " அந்தச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பத்காகவே  தனக்கு எப்போது பெய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மழை பெய்யும்.ஆதலால்,   மழையை வைத்தெல்லாம் யாரையும் சோதிக்க வேண்டாம். அன்புக்கு அடங்கி வாழும் பெண்ணின் சொல்லுக்கு  , அந்த  இயற்கையே அடங்கி நிற்கும்  என்ற பொருளில்தான் வள்ளுவர் இந்தக் குறட்பாவை எழுதியுள்ளார்  " என்று விளக்கம் அளித்தார் என் தமிழாசிரியர்.  


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்