" ஊழ் அம்பு வீழா நிலத்து "
" உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனையை அனுபவக்க வேண்டும் " என்ற பழமொழியை அறிந்தவர்கள் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்கள். அப்படியே அவர்கள் தவறு செய்திருந்தாலும் அதற்கான தண்டனையை எதிர்கொள்ளத் தயங்கமாட்டார்கள். ஆனால், இந்தப் பழமொழி உணர்த்தும் உண்மையை உணராதவர்களோ , " எல்லாம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். என்ன ஆகிவிடப் போகிறது? இங்கு யார்தான் குற்றம் செய்யவில்லை? என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். குற்றங்கள் ஆயிரம் புரிவார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் உணர்வதற்காகவும், அவர்கள் உள்ளத்தில் உரைப்பதற்காகவும் பழமொழி நானூறு என்னும் நூலில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை இங்குக் காண்போம்.
" நனியஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண்
துனியஞ்சார் செய்வது உணர்வார் - பனியஞ்சி
வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
ஊழ்அம்பு வீழா நிலத்து."
( முன்றுறை அரையனார், பழமொழி நானூறு - 94)
ஆண் யானையானது பனியால்வரும் துயருக்கு அஞ்சித் தன் பிடியினைத் ( பெண் யானை) தழுவிக் கிடக்கும் மூங்கில்கள் சூழ்ந்த மலைநாடனே! தன் ஊழ்வினைப் பயனால் தன்னை நோக்கி வரும் அம்பு ஒருபோதும் குறிதவறி நிலத்தில் வீழ்வதில்லை. அதுபோலவே , செய்யத் தக்கது இதுவென உணரும் சான்றோர்கள் தம்மால் மிகவும் பயப்படத் தக்கதான துன்பங்கள் வந்தாலும் , தம்மிடத்தே உண்டாகும் துன்பத்துக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள். "ஊழ்வினை என்னும் அம்பு தன் இலக்கைக் குறி வைத்துத் தாக்காமல் நிலத்தில் வீழாது " என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் தனக்கு நேரும் துன்பமெல்லாம் முற்காலத்தில் செய்த குற்றத்திற்கான பயன் எனக் கருதி, மனம் தளராமல் நல்வினைகளையே தொடர்ந்து செய்து வருவார்கள்.
நாம் செய்த குற்றத்தை மற்றவர்கள் அறியாது மறைக்க முடியும். ஆனால், அதில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. அந்தக் குற்றம் ஒருபோதும் நம்மை மறக்காது. அது என்றாவது ஒருநாள் நம்மைக்
குறிவைத்துத் தாக்கும். இதை அனைவருமே உணர வேண்டும்.
" குற்றம் செய்வதைத் தவிர்ப்போம்!
குறையாத இன்பத்தில் திளைப்போம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்