பாம்பன் பாலம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கடல் வழி தொடர்வண்டி பாலமாகும். இந்திய பெருநிலப்பரப்பையும் இராமேஸ்வரம் தீவையும் இணைக்கின்றது. இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம்.ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது. இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலம் வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் பாலம் ஆகும்.
பாம்பன் பாலம் வரலாறு
பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவு படுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இதன் கட்டுமானம் 1911 ஆம் ஆண்டு தொடங்கியது.இந்த பாம்பன் பாலம் பிப்ரவரி 24,1914அன்று இரயில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. சுமார் 2.2 கிலோ மீட்டர் வரை நீண்டு143தூண்களுடன் மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்புக்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும் . பாம்பன் ரயில் பாலம் 90 டிகிரி கோணத்தில் மேல் நோக்கி திறக்கும் படகு இயக்கத்தை அனுமதிக்க ஷெர்சர் ரோலிங் லிப்ட் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.
1964 ஆம் ஆண்டில் பாம்பன் தீவை தாக்கிய பெரும்புயல் மற்றும் சூறாவளியின் போது இந்த பாம்பன் பாலம் பலத்த சேதமடைந்தது. இதனை சரி செய்ய விரிவான பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2009 ஆம் ஆண்டில் அதிக எடை உள்ள சரக்கு ரயில்களை தாங்கும் வகையில் பாலத்தை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 13, 2013 அன்று ஒரு கடற்படை படகு பாம்பன் பாலத்தில் மோதியதால் ஏற்பட்ட சேதத்தால் பாலத்தின் சில தூண்களை சரி செய்ய வேண்டி இருந்தது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 2016ஆம் ஆண்டு இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம் ரூபாய் 25 கோடி செலவில் பாம்பன் பாலத்தை நவீன மாக்கும் திட்டத்தை அறிவித்தது. 2018 டிசம்பரில் பாலத்தின் தூண்களில் பிளவு ஏற்பட்டதையடுத்து. பழுது பார்ப்பதற்காக இரயில் போங நிறுத்தப்பட்டது. பின்னர் பாலம் சரி செய்யப்பட்ட பிறகு மார்ச் 2019-ல் ரயில்வே போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
பாம்பன் பாலம் சிறப்புகள்
பாம்பன் பாலம் ஆனது கடல் மட்டத்திலிருந்து 41 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மற்றும் 6776 அடி நீளமானது. இந்தப் பாலம் 143 தூண்களைக் கொண்டுள்ளது. இக்கடல் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன.பாலத்தின் இரண்டு தூக்குகளும் நெம்புகோல்களைப் பயன்படுத்தி கையினால் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 பெரிய கப்பல்கள் இக்காலத்தின் கீழே செல்கின்றன.
பாம்பன் பாலம் உலகின் மிகவும் அதிக அளவில் துருபிடிக்கத்தக்க மற்றும் கடல் அரிப்பால் வெகுவாக பாதிக்கப்படும் ஒரு சூழலில் அமைந்துள்ளது. இதனால் இதற்கான கட்டுமான பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே நடைபெற்றன. மேலும் இந்த இடம் அதிவேக காற்று மற்றும் சூறாவளிகளை எதிர்கொள்ளும் மண்டலமாகவும் உள்ளது. இதன் பராமரிப்பு ஒரு சவாலான வேலையாக உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்ட போது இதன் மீது ஒரு குறுகிய அகலம் கொண்ட ரயில் பாதை அமைக்கப்பட்டது.2007 ஆம் ஆண்டு இந்த பாதை அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டது.
பாம்பன் பாலம் இனைக்கும் தீவு
பாம்பன் ரயில் பாதை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தீபகற்பத்தையும் ராமேஸ்வரம் தீவியும் இந்த பாலம் வழியாக இணைக்கின்றது. முன்னதாக இந்த ரயில் பாதை பாம்பனை அடைந்ததும் இரு பாதைகளாக பிரிந்து ஒன்று இராமேஸ்வரம் நோக்கி சென்றது. மற்றொரு கிளை பாதை தனுஷ்கோடியில் முடிவடைந்து. 1964 ஆம் ஆண்டு சூறாவளியின் போது தனுஷ்கோடிக்கான ரயில் பாதை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
புதிய பாம்பன் பாலம்
கடந்த 100ஆண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்த பழைய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் பலவீனமாக உள்ளதால் கப்பல் செல்வதற்கான திறப்பு பாலத்தின் கட்டுமானத்தில் மாற்றம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் நூற்றாண்டுகளாக பல்வேறு காலநிலையையும் கடலின் உப்பு தன்மையும் தாங்கி நிற்கும் பழைய பாலத்திற்கு அருகே நவீன வடிவமைப்பில் புதிய பாம்பன் பாலம் ஒன்றைக் கட்ட தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஐஐடி கட்டுமான பேராசிரியர்கள் மூலம் நவீன பாம்பன் பாலத்தை எவ்வாறான தொழில்நுட்பத்தில் கட்டலாம் என்னும் சாத்தியக் கூறு அறிக்கை ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்டது. புதிய பாம்பன் பாலத்தை கட்டி முடிப்பதற்கு 545 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அகமதாபாத்தைச் சேர்ந்த மூன்று தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்த புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து பழைய பாம்பன் பாலத்திற்கு இடதுபுறம் புதிய பாம்பன் பாலம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதாவது புதிய பாம்பன் பாலம் நடுவில் இருக்க அடுத்த பழைய பாம்பன் பாலம் அதற்கு அடுத்து இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் என்ன மூன்று பாலங்களும் 40 மீட்டர் இடைவெளியில் அமையுமாறு திட்டம் வடிவமைக்கப்பட்டது. புதிய பாம்பன் பாலத்தின் நீளம் 2.08 கிலோமீட்டர். புதிய பாம்பன் பாலத்தில் மொத்தம் 333 தூண்கள் கடலில் இறக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு. தூணும் கடலுக்கு அடியில் 36 மீட்டர் வரை கான்கிரீட் கலவைகளால் பூசப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தூண்களுக்கு மேல் 99 ரயில் இணைப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன கப்பல் செல்லும் தூக்கு பாலத்தையும் சேர்த்தால் மொத்தம் 100 இணைப்புகள் பாலத்திற்கு வலு சேர்க்கின்றன.கப்பல் செல்லும் தூக்கு பாலத்தின் நீளம் 72.5 மீட்டர்.இதற்கு முன் இருந்த பழைய பாம்பன் பாலத்தில் கப்பல் செல்லும்போது பாலம் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய புதிய பாலத்தில் லிப்ட் போன்ற தூக்கும் வகையில் தூக்கு பாலமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தூக்கு பாலத்தின் மொத்த எடை 640 டன். கப்பல் செல்லும்போது அதிகப்பட்சம் 17 மீட்டர் உயரம் வரை ரயில் பாலம் தூக்கப்படும்.பழைய பாம்பன் பாலத்தில் பத்து கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் பயணிக்கும் நிலையில் புதிய பாலத்தில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.அதாவது பழைய பாலத்தை ஒரு ரயில் கடக்க 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும் என்றால் புதிய பாலத்தில் இரண்டு முதல் மூன்று நிமிடத்தில் கடந்து விட முடியும் என்று ரயில்வே பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பங்கேற்பு
கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகளை கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வுசெய்து, சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, அவர் சுட்டிக்காட்டிய பணிகள் சரி செய்யப்பட்டன.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள், பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2025 ஏப்.6-ம் தேதி ராமநவமியன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. மேலும், அன்று ராமேசுவரத்திலிருந்து புதிய ரயில் சேவையைத் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்காக ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே விழாவுக்கான மேடை அமைக்கப்படும்.
0 கருத்துகள்