Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " இழிந்தோர் ஆயினும் இடர்தீர்ப்போம் "



துறவி ஒருவர் தன் மாணவர்களுக்கு அறநெறிகளைக் கற்பித்துக்  கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு சிறிய நீர்த்தொட்டி  இருந்தது. அதன்மீது  தேள் ஒன்று  செல்வதைக் கவனித்தார். சிறிது நேரத்தில் அந்தத் தேளானது நீர்த்தொட்டிக்குள் தவறி விழுந்தது. அதைப்பார்த்த துறவி, உடனே    எழுந்துசென்று அந்தத் தேளினைத்  தன் கையால் பிடித்துத் தூக்கி வெளியே விட்டு அதன் உயிரைக்  காப்பாற்றினார். அப்போது அந்தத் தேள் துறவியின் கையில் கொட்டிவிட்டு மீண்டும் அந்த நீர்த்தொட்டிக்குள் விழுந்தது. மீண்டும் அந்தத் தேளினைத் தன் கையால் பிடித்து காப்பாற்றி வெளியே விட்டார். மீண்டும் அந்தத் தேள், அந்தத் துறவியின் கையில்   கொட்டிவிட்டு நீர்த்தொட்டிக்குள் விழுந்தது. இவ்வாறாக , அந்தத் தேள் துறவியைக் கொட்டிவிட்டு நீர்த்தொட்டியில் விழுவதும், அந்தத் துறவி  அந்தத் தேளை மீண்டும் மீண்டும்  காப்பாற்றுவதுமாக தொடர்ந்து கொண்டே இருந்தது. 


இதை நீண்ட நேரமாக பார்த்துக்  கொண்டிருந்த  மாணவர்கள், அந்தத் துறவியிடம் சென்று,  ஐயா நீங்கள்  அந்தத் தேளைப் பலமுறை  காப்பாற்றினீர்கள். நன்றி கெட்ட அந்தத் தேளோ ,  மீண்டும் மீண்டும் உங்களைக்  கொட்டிவிட்டு  நீர்த்தொட்டிக்குள் விழுகிறது. நீங்கள் ஏன் அந்தத் தேளைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்? அது இறந்து போகட்டும் என்று விட்டுவிட வேண்டியது தானே?  என்று கேட்டனர். அதற்கு அந்தத் துறவி என்ன சொன்னார் தெரியுமா?  கொட்டுவது என்பது தேளின் குணம். அதன் குணத்தை அது  மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து  கொட்டிக் கொண்டே இருக்கிறது. இன்னா செய்தார்க்கும் இனியவை செய்தலே  மனிதனின் உயர்ந்த குணம். நான் மனிதனல்லவா?  அதனால்தான் நான்  என் குணத்தை  மாற்றிக் கொள்ளாமல் ,  அந்தத் தேளினைத் தொடர்ந்து   காப்பாற்றிக் கொண்டே இருக்கிறேன் " என்றார். இழிந்தோர் ஆயினும் அவர் பிழை பொறுத்து, அவர் இடர்தீர்ப்பதே நல்லோர்க்கு அழகு என்பதை நாம் உணர வேண்டும். 


ஒருவர் கெட்டவராக இருந்தாலும் சரி, நம் வாழ்வைக் கெடுத்தவராக இருந்தாலும் சரி,  அவர்களுக்கு நாம் கெடுதல் செய்யாமல் இருப்பதே அறிவுடைமை ஆகும்.


" தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துஉயர்ந்தோர் 

தம்மை மதியார் தமைஅடைந்தோர் - தம்மின் 

இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு 

கழியினும் செல்லாதோ கடல்.

( நன்னெறி - 16)


பெரிய கடலானது,  தன்னைவிட எல்லா வகையிலும்  சிறியதாக இருக்கும்  உப்பங்கழியில்  சென்று பாயுமல்லவா?  அதைப்போல,  அறிவிலிகள் தங்கள் அறியாமையால்  செய்யும் பிழைகளை எல்லாம் அறிவுடையோர்  பொறுப்பர். தம்மையும் தங்களுடைய தலைமைத் தன்மையையும் பார்த்து,  தங்களை மதிக்காத   தாழ்ந்தோர் இருக்கும்  இடம் சென்று அவர்கள் துன்பத்தை நீக்குவர் .உயர்வு தாழ்வு பார்த்து உதவி செய்வது உயர்ந்தோர்க்கு அழகில்லை என்பதையே இப்பாடல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்