சுந்தர கவிராயர் ஒருநாள் ஒரு புதுமையானக் காட்சியைக் கண்டார். வியப்பில் ஆழ்ந்தார். தான் கண்ட காட்சியை விடுகதைபோல் அமைத்து ஒரு பாடலை உருவாக்கினார். அந்தப் பாடலை இங்குக் காண்போம்.
" பத்துக்கால் மூன்றுதலை பார்க்கும்கண்
ஆறுமுகம் இத்தரையில் ஆறுவாய்
ஈரிரண்டாம் - இத்தனையும்
ஓரிடத்தில் கண்டேன் உகந்தேன் களிகூர்ந்தேன்
பாரிடத்தில் கண்டே பகர் "
( சுந்தரகவிராயர் தனிப்பாடல் திரட்டு)
பத்துக்கால்கள் , மூன்று தலைகள் , பார்க்கின்ற ஆறுகண்கள், ஆறு முகங்கள், நான்கு வாய்கள் ஆகிய இத்தனையும் கொண்ட ஒன்றை இந்த உலகில் ஒரே இடத்திலேயே பார்த்தேன். அதன்மீது விருப்பம் கொண்டேன். மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் புதுமையானக் காட்சியைக் கண்டு என்னவென்று கூறுங்கள்? " என்கிறார் சுந்தர கவிராயர்.
அவர் கண்ட காட்சி என்ன தெரியுமா?
உழவன் ஒருவன் இரண்டு காளைகளைக் கொண்டு ஏர்கலப்பையினால் நிலத்தினை உழும் காட்சியையே அவர் கண்டிருக்கிறார். அந்தக் காட்சியை வைத்தே இப்பாடலைப் பாடியுள்ளார்.
பத்துக்கால்கள்.
இரு காளைகளின் கால்கள் + உழவனின் கால்கள்.
8 + 2 = 10.
மூன்று தலைகள்.
இரு காளைகளின் தலைகள் + உழவனின் தலை.
2 + 1 = 3 .
ஆறுகண்கள்.
இரு காளைகளின் கண்கள் + உழவனின் கண்கள்.
4 + 2 = 6 .
ஆறு முகங்கள்.
இரு காளைகளின் முகங்கள் + உழவனின் முகம் + ஏர் கலப்பையில் உள்ள மூன்று கொழு முகங்கள் .
2 + 1 + 3 = 6 .
நான்கு வாய்கள்.
( ஈரிரண்டு - 2 × 2 = 4 )
இருகாளைகளின் வாய்கள் + உழவனின் வாய் + ,ஏர்கலப்பையின் நாழிவாய்.
2 + 1+1 = 4 .
இப்போது அந்தப் பாடலை மீண்டும் வாசித்துப் பாருங்கள். சுந்தர கவிராயரின் கவிநயம் விளங்கும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்