Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " கற்றோரைக் கண்டறியும் வழி "




கற்றவர் யார்? கல்லாதவர் யார்? தோற்றத்தை வைத்துக் கண்டறிய முடியாது. பழகிப் பார்த்துக் கண்டறியலாம் என்றால் அது பலநாள் ஆகும். பின்பு எப்படித்தான் கண்டறிவது?  கற்றவர்களைக் கண்டறியும்  எளிய வழியை  நீதி வெண்பா பாடல் மூலம் காண்போம்.


"வாக்குநயத் தால்அன்றிக் கற்றவரை மற்றவரை 

ஆக்கைநயத் தால்அறியல் ஆகாதே - காக்கையொடு 

நீலச்சிறு குயிலை நீடுஇசையால் அன்றியே 

கோலத்து அறிவருமோ கூறு. "

( நீதி வெண்பா - 87) 


காக்கையையும்,  அதனைப் போலவே இருக்கும் கரிய சிறிய குயிலையும் இனிமை மிகுந்த இசைக் குரலாய் அல்லாமல் உருவத்தினால் அவற்றின் வேறுபாட்டை அறிய முடியுமோ? நீ சொல்.

எப்படி உருவத்தால் அறிய முடியாதோ அதுபோலவே , கற்ற பெரியோர்களையும்,  அங்ஙனம் கல்லாத மற்றவர்களையும் , அவரவர்கள் பேசும் பேச்சின் இனிமையினால் அல்லாமல் உடல் அழகினைக் கொண்டு அறிய முடியாது. 


குயிலுக்கும்,  காகத்திற்கும் வேறுபாடே அவற்றின் குரல்தான்.  அதன் உருவம் அன்று.   அதுபோல,  கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் வேறுபாடே அவர்களின் பேச்சுதான். தோற்றம்  அன்று.


அடக்கமான பேச்சுதான் ஒருவர் கற்றவர் என்பதையும் , சான்றோர் என்பதையும் மற்றவர்களுக்கு அடையாளப் படுத்தும். உரிமையில் பேசுகிறோம் என்று சொல்லி,  யாரிடமும் ஒருமையில் பேசாதீர்கள். எல்லோரிடமும் அன்பாகப் பேசுங்கள். 


" நீங்கள்

கற்ற கல்வியின் ஆழத்தை , 

உங்களின் அன்பான பேச்சை வைத்தே இந்த உலகம் அளவிடுகிறது!  


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்