Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " கடைசி வரை யாரோ? "

 



எது நிலையான பொருள்? எது நிலையற்ற பொருள் என்ற வேறுபாடு தெரியாமலே அரை நொடி கூட மன அமைதியோடு வாழாமல், வாழ்நாள் முழுவதும் பொருள் தேடுவதிலேயே இந்த உலகம் உழன்று கொண்டிருக்கிறது. 


" மிக்கசெல்வம் நீர்படைத்த விறகுமேவிப் பாவிகாள் 

விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர் 

மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணும் இவையெலாம் 

மறலிவந்து அழைத்தபோது வந்துகூட லாகுமோ?

( சிவ வாக்கியர் பாடல்கள் - 81 )


பாவச் செயல்கள் பலசெய்து நிறைந்த செல்வங்களைப் பெற்றும் நிம்மதி இல்லாமல் வாழ்கின்ற பாவிகளே!  நீர் இறந்துபோனால் உம் உடலைச்  சுடுகாட்டிற்குக் கொண்டுபோய் விறகுகளையும், வறட்டிகளையும் அடுக்கி வைத்து , அதன்மேல் தீவைத்து கொளுத்தி விடுவார்கள். வெந்தபின் சாம்பல் ஒன்றே மீதி.


இறுதியில் இவ்வுடம்பு ஒரு பிடி சாம்பலாவதை அறிய மறந்தீர்களே! மனைவி,  மக்கள், சுற்றம்  இவர்கள் எல்லோரும்  வெறும் மாயை என்பதை  உணருங்கள். காலன் (எமன்)   வந்து உங்கள் உயிரை எடுத்துப் போகும்போது மனைவி, மக்கள், சுற்றம் இவர்கள் எல்லோரும் உங்கள்  உடன் வருவார்களா? 

வரமாட்டார்கள். நீங்கள் செய்த நல்வினை, தீவினைகளே உடன் வரும். ஆகையால், செல்வத்தின் மீதும், உறவுகள் மீதும் நாட்டம் செலுத்தாமல்,  ஏழை எளியோர் மீது அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்யுங்கள். அந்த நல்வினைகள்தான் உங்களுடன் எப்போதும் வரும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.


இந்தப் பாடல் உணர்த்தும் கருத்தையே,   எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம்  எளிய பாடலாக்கி,  "பாத காணிக்கை " திரைப்படத்தில் பயன்படுத்தினார்  கவியரசர் கண்ணதாசன்.


வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?


என்ற பாடலே அது. 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்