அறிவிலார் செய்யும் குற்றங்களை எல்லாம் அறிவுடைய பெரியோர் பொறுப்பர்.
அறிவுடையோரின் பொறுமையைக் கண்டு " இவர்களால் நம்மை என்ன செய்ய முடியும்? என்று எள்ளி நகையாடுவர் அறிவிலார். அறிவிலார் செய்யும் செயலுக்குத் தக்க பாடம் புகட்டத் தகுந்த காலம் வரும்வரை அறிவுடையோர் பொறுத்திருப்பர் என்பதை அவர்கள் அறிந்திலர் என்பதே உண்மை.
அறிவுடையோர் பொறுமை நல்லதன்று. தனக்கான நஞ்சென்பதை அறிவிலார் உணர வேண்டும் என்பதை உரைக்கும் அழகானப் பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
" வில்லது வளைந்தது என்றும்,
வேழம்அது உறங்கிற்று என்றும்,
வல்லியம் பதுங்கிற்று என்றும்,
வளர்கிடா பிந்திற்று என்றும்,
புல்லர்தம் சொல்லுக்கு அஞ்சிப்
பொறுத்தனர் பெரியோர் என்றும்
நல்லதுஎன்று இருக்க வேண்டா
நஞ்சுஎனக் கருத லாமே "
( விவேக சிந்தாமணி - 110)
உலகத்தவர்களே!
பகைவர்களைக் கொல்வதற்கு வளைக்கப்பட்டு இருக்கும் வில்லைப் பார்த்து, இந்த வில் வளைந்துள்ளது இது நமக்குத் தீங்கு செய்யாது என்று நினைக்க வேண்டாம்.
காலம் பார்த்துத் தனது பகையை முடிக்கக் கருதி உறங்குவதுபோல் நடிக்கின்ற யானையைப் பார்த்து , இந்த யானை ( வேழம் ) உறங்கிவிட்டது . அதனால் இது தீங்கு செய்யாது என்று நினைக்க வேண்டாம்.
தன் இரையைக் காலம் பார்த்துக் கொல்வதற்காகப் பதுங்கிக் கிடக்கும் புலியைப் பார்த்து, இந்தப் புலி ( வல்லியம்) பதுங்கிவிட்டது. அதனால் இது தீங்கு செய்யாது என்று நினைக்க வேண்டாம்.
தன் பகையையின் மேல் பாய்வதற்காக ஓடிவந்து பின்னிடுகின்ற ஆட்டுக் கடாவைப் பார்த்து, இந்த வளர்கடா பாய்வதை விடுத்து பின்னே சென்று விட்டது. இது மீண்டும் ஓடி வந்து நமக்குத் தீங்கு செய்யாது என்று நினைக்க வேண்டாம்.
தமக்குத் தீங்கு செய்வோர் தாமாகவே கெட்டழிவர் என்பதை அறிந்து கீழ்மக்கள் செய்யும் தீங்கினைப் பொறுத்துக் கொள்வர் பெரியோர். தங்கள் சொல்லுக்குப் பயந்தே இவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். இனிமேல் இவர்கள் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்.
இத்தகையச் செயல்கள் எல்லாம் நமக்கு நன்மையே என்று முடிவு கட்ட வேண்டாம். இவையெல்லாம் நம்மைக் கொல்லக் காத்திருக்கும் நஞ்சு என்பதை நாம் உணர வேண்டும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்