Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " ஆசான் வழிபாடு "




"தமிழ்த் தாத்தா " உ.வே.சா. அவர்கள் தன் வீட்டில் உள்ள ஊஞ்சலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஓர் இளைஞர், உ.வே.சா. அவர்களை வணங்கி,  " ஐயா, நான் உங்களிடம் ஒரு வாரத்தில் படித்துவிட்டு திருப்பி தருவதாகச் சொல்லி ஒரு புத்தகத்தை இரவல் வாங்கிக் கொண்டு சென்றிருந்தேன். ஆனால்,  திருப்பிக் கொடுக்க இரண்டு மாத காலம் ஆகிவிட்டது. என் பிழையைப் பொறுத்துக் கொள்ளுங்கள் " என்று பணிவோடு கூறினார்.


அப்போது உ.வே.சா. அவர்கள் வருத்தத்தோடு, " என்ன தம்பி இப்படி செய்துவிட்டீர்களே?  இந்த இரண்டு மாத காலத்தில் எத்தனை பேர் இந்த நூலைப் படித்துப் பயன்பெற்று இருப்பார்கள். ஐயம் தெளிந்திருப்பார்கள் என்று கேட்டுவிட்டு உமது பெயர் என்ன?  என்று வந்த இளைஞரைப் பார்த்துக் கேட்டார்.


அதற்கு அந்த இளைஞர் சற்று அச்சத்தோடு அருகில் சென்று, " என் பெயர் மீனாட்சி சுந்தரம் " என்றார்.


உடனே ஊஞ்சலில் இருந்து எழுந்த ஊ.வே.சா அவர்கள், " எங்கள் ஆசிரியர் ( மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்)  பெயரையா வைத்திருக்கிறீர்கள்?  இதை முதலிலேயே சொல்லி இருக்கக் கூடாதா?  " என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர் தன்னிடத்தில் கொடுக்க வந்த அந்தப் புத்தகத்தை வாங்கி தன் கையொப்பமிட்டு மகிழ்வோடு அவரை வாழ்த்தி அவருக்கே அந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார் .தனக்கு வழிகாட்டிய  ஆசிரியரைப் போற்றியதால்தான் உலகம் போற்றும் தமிழறிஞராய் உருவெடுத்தார் உ.வே.சா.


உ.வே.சா. அவர்களிடம் புத்தகத்தை அன்பளிப்பாகப் பெற்ற அந்த இளைஞர் யாரென்று தெரியுமா?


"தெ.பொ.மீ " என்று தமிழுலகம் போற்றும் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள்தான். இந்த நிகழ்வுக்குப்பின் உ.வே.சா அவர்களை அடிக்கடி சந்தித்தார் தெ.பொ.மீ. 

தனக்கு ஏற்பட்ட  தமிழ் தொடர்பான ஐயங்களைப் போக்கிக் கொண்டார். 


மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தன் தமிழால் உ.வே.சா. அவர்களை உருவாக்கினார். உ.வே.சா அவர்களோ தன் ஆசிரியர் பெயரை வைத்திருந்தார் என்பதற்காக தெ.பொ.மீ அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டு அவரை நல்ல தமிழறிஞராய் உருவாக்கினார். ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் , ஒரு மாணவன் ஆசிரியரை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற்கும்  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மீது  உ.வே.சா. அவர்கள் கொண்ட அன்பே  மிகச்சிறந்த சான்றாகும்.. 


மாணவர்கள் தங்கள் ஆசான்களை வழிபடும் முறை  எவ்வாறு  இருக்க வேண்டும் நன்னூல் கூறுவதை இங்குக் காண்போம்.


" அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி 

நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு

எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம் 

அறத்தில் திரியாப் படர்ச்சி வழிபாடே " 


( நன்னூல் - 46)


குளிர்காலத்தில் நெருப்பின் முன் அமர்ந்து குளிர் காய்பவர்கள், நெருப்புக்கு அஞ்சி அதன் அருகில் நெருங்காமலும், குளிருக்கு அஞ்சி நெருப்பை விட்டு விலகாமலும் அமர்ந்து குளிர் காய்வர். அதுபோல,  மாணவனும் ஆசிரியர்க்கு அஞ்சி அவரை அகலாமலும், அவர் நம்மோடு இனிமையாகப் பழகுகிறாரே என்று எண்ணி   மிக நெருங்காமலும் இருக்க வேண்டும். ஆசிரியரின் நிழல் அவரைவிட்டு நீங்காமல் செல்வதைப் போல, மாணவனும் ஆசிரியரைவிட்டு நீங்காமல் அவரைத் தொடர்ந்து சென்று அவரிடம் உள்ள கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும். 


ஆசிரியர்பால் அன்பு மிகக்கொண்டு அவர் எவ்வகையால் எல்லாம் மகிழ்வாரோ அவ்வகையால் எல்லாம் அவரை மகிழ்வித்து , அறநெறி மாறா நடத்தை உடையவனாய் வாழ்ந்து , தனக்கு கல்வியைக் கற்றுத்தந்த ஆசானுக்குப் பெருமை சேர்ப்பதே உண்மையான " ஆசான் வழிபாடு " ஆகும்.


'ஆசான் ' என்ற சொல் நமக்குக் கல்வி கற்றுத்தரும்  ஆசிரியர்களை மட்டுமே குறிப்பதல்ல. நம் வாழ்க்கை நல்ல நிலையை அடைய நமக்கு  நல்லதைக் கற்றுத்தருகின்ற  எல்லோருமே நமக்கு ஆசான்கள்தான். நமக்கு ஒரு தொழிலைக் கற்றுக் கொடுப்பவரும் நமக்கு ஆசான்தான். நமக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்த பறவைகளும், நீந்தக் கற்றுக் கொடுத்த மீன்களும் நமக்கு ஆசான்கள்தான். 


ஆம். நமக்குப் புதிதாக எந்தவொன்றையும் கற்றுக் கொடுப்பவர்கள் அனைவருமே நமக்கு ஆசான்கள்தான். 


அந்த வகையில் நமக்கு முதல் ஆசான் நம் பெற்றோர்களே!


நாம் உயர்நிலை அடைய நல்வழி காட்டும் ஆசான்களுக்கு நன்றி செலுத்த,  நாம் நல்வழியில் வாழ்ந்து, நல்லநிலை  அடைந்து அவர்களைப் பெருமைப்படுத்துவதே சிறந்த " ஆசான் வழிபாடு " ஆகும்.


கற்றுக் கொடுப்பவர்களே இங்கு உண்மையான கடவுள். அவர்களை வணங்குவதே உண்மையான வழிபாடு. அறிவுடையோர் யாவரும் தமக்கு அறிவுதந்த ஆசான்களையே வழிபடுபவர். 


" எழுத படிக்கக் 

கற்றுக் கொடுப்பவர்கள் மட்டும் நம் ஆசான்கள் இல்லை!

நாம் விழுகின்ற போதெல்லாம் எழுந்து நடக்கக் கற்றுக் கொடுக்கின்ற நல்ல உள்ளங்கள் அனைவரும் 

நமக்கு ஆசான்களே! " 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்