Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " புரட்சிக் காப்பியம்"

 



மிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில் "புரட்சிக் காப்பியம்"  என்று போற்றப்படுவது " சிலப்பதிகாரம் ".  

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்  புரட்டடிப் பார்க்கக் கூட தகுதியற்ற காப்பியம்தான் " சிலப்பதிகாரம் " . மணிமேகலை, குண்டலகேசி, , வளையாபதி ஆகிய மூன்று காப்பியங்கள்தான் உண்மையிலேயே "புரட்சிக் காப்பியம் " என்ற சொல்லத் தகுதி உடையவை.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த நூல்களில் குண்டலகேசியும் , வளையாபதியும்  19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அழிந்துவிட்டன. இல்லை, இல்லை. அழிக்கப்பட்டு விட்டன. உண்மையிலேயே மக்கள் செல்வாக்குப் பெற்ற நூல்களான குண்டலகேசியும் , வளையாபதியும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் காணாமல் போனதன்  காரணத்தையும் , அதற்குப்பின் உள்ள  அரசியலையும் இப்போது ஆராய்வோம்.


18 ஆம் நூற்றாண்டு வரை முழுமையாக இருந்ததால்தான் திருத்தணிகை உலா பட்டியலிட்ட ஐம்பெருங் காப்பியங்களில் அவை இடம் பெற்றன. தகுதி உடைய  நூல்கள்  எப்படி காணாமல் போகும்? . காரணம் ஒன்றுதான்.  குண்டலகேசியும் , வளையாபதியும் ஆண் இனத்திற்கு எதிரான நூல்கள் என்பதால்தான் அவை வேண்டுமென்றே  அழிக்கப்பட்டன. வந்தேறிகளால் நம் பண்பாடுகள் சிதைக்கப்பட்டன. நம் அடையாளங்கள் அழிக்கப்பட்டன. ஆணாதிக்க சிந்தனை மலர்ந்தது . பெண்ணுரிமை மறைந்தது. பெண் அடிமையாக்கப்பட்டாள். நம் இலக்கியங்கள் பல  தீயிட்டுக் கொளுத்தப் பட்டன. அதிலும் பெண்களைப் போற்றும் இலக்கியங்கள் யாவும் அழித்தொழிக்கப் பட்டன. அவற்றில் குண்டலகேசியும் , வளையாபதியும் அடங்கும். 


தன் கணவனைத் திருத்த முடியாததாலும் , தன்னையே அவன் கொல்லப் பார்க்கிறான் என்பதாலும்,  அவனை மலையுச்சியில் இருந்து கீழே தள்ளி கொன்று " கொலையும் செய்வாள் பத்தினி " என்பதை எல்லோர்க்கும் எடுத்துக் காட்டினாள் பத்திரை  ( குண்டலகேசி).  ஆண்கள் ஆயிரம் செய்வார்கள். அதற்காக அவனைக் கொல்வதா? என்ன செய்தாலும் அவன் ஓர் ஆண். அதைத் தட்டிக் கேட்கவோ, அவனுக்குத்  தண்டனை தரவோ பெண்ணுக்கு என்ன தகுதி  இருக்கிறது?  பெண்ணென்றால் ஆணுக்கு அடங்கி இருக்க வேண்டும். வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டும். குண்டலகேசி போல கொதித்தெழுந்து தாலி கட்டிய  கணவனைக் கொலை செய்யத் தொடங்கினால் ஆண்களின் நிலைமை என்னாவது? பெண்களின் வீரம் கணவனைக் காக்கப் பயன்பட வேண்டுமே தவிர  கணவனைப் பழிதீர்க்கப் பயன்படக் கூடாது. இந்த மண்ணில் இன்னொரு குண்டலகேசி உருவாகி ஆண்களின் உயிரை எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே குண்டலகேசி காப்பியம் அழிக்கப்பட்டது. 


நவகோடி நாராயணன் வைர வணிகன். செல்வந்தன். அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி செல்வந்தர்கள் வைப்பது தானே  சட்டம்.  செல்வம் இருக்கும் செருக்கில்,  தனக்கொரு குழந்தை வேண்டும் என்பதற்காக ஓர் ஏழைப் பெண்ணை மணமுடிப்பான். பின் ஊர் பெரியோர்கள் சொன்னார்கள் என்று சொல்லி கட்டியவளைக் கழற்றி விடுவான். இதையெல்லாம் அறிவுடைய பெரியோர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண் தன் மகனின் உரிமைக்காக,  ஊர் பெண்களை ஒன்று திரட்டி வந்து நீதி கேட்டாள். வேறு வழியில்லாமல் தன் மனைவியையும் தன் மகனையும் ஏற்றுக் கொண்டான். 


மாலை நேரம் வந்தாலே ஆண்களில் சிலர் , கோவலன் போல மாதவியைத் தேடிச் செல்வது  வழக்கம். நாளைக்கு அவள் வயிற்றில் ஒரு குழந்தை உருவாகி, பிறந்து வளர்ந்து அவன் ஒரு கூட்டத்தைக் கூட்டி  வந்து நீ தான் எனக்கு அப்பா என்று சொல்லி போராடி, சொத்தில் பங்கு கேட்டாள் என்ன செய்வது? நவகோடி நாராயணன் கதைதான் நம் கதையும் என்று ஆண்களில் சிலர் சிந்தித்தார்கள். அதனால் வளையாபதி காப்பியத்தைச் சிதைத்தார்கள்.


காந்தியடிகள்  அறவழிப் போராட்டத்தைத் தொடங்கி வெற்றி காண்பதற்கு முன்னர் , அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறவழிப் போராட்டத்தை நடத்தி அதில்  வெற்றி கண்டவள்தான்  பத்தினி. பெண்கள் அனைவரும் ஒன்று கூடினால் ஆண்கள் அடங்கிப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நவகோடி நாராயணன் வழியாக உலகிற்கே எடுத்துக் காட்டினாள். நவகோடி நாராயணன் நிலைமை நாளை தங்களுக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சியே வளையாபதி காப்பியத்தை அழித்துவிட்டார்கள்  ஆணாதிக்கச் சிந்தனையாளர்கள். 


 ஆணாதிக்கத் சிந்தனையின் ஆணிவேர்தான் சிலப்பதிகாரம்.

"ஒருவனுக்கு ஒருத்திதான் தமிழ்ப் பண்பாடு " அதை மீறி தன் மனைவியைக் கழற்றி விட்டுவிட்டு மாதவியோடு போய் குடும்பம் நடத்தி ஒரு குழந்தையையும் பெற்று ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி மாதவியை புறக்கணித்துவிட்டு,   மீண்டும் கண்ணகியைத் தேடி வருகிறான் கோவலன்.   கண்ணகியும் கணவனை ஏற்றுக் கொண்டு அடங்கிக் கிடக்கிறாள். மதுரையில்  கோவலன் கொல்லப் பட்டதும், அதுவரை சோறு பொங்கிக் கொண்டிருந்தவள்,  உலை கொதிப்பது போல உள்ளம் கொதித்துப்  பொங்கியெழுந்தாள்.  பாண்டிய  மன்னனை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவன் கதையை முடிக்கிறாள். மதுரையைத் தீ வைத்துக் கொளுத்துகிறாள். உடனே அவளுக்குக் கற்புக்கரசி பட்டம் கொடுத்து சிலை வைத்து வழிபாடு செய்து விட்டார்கள் ஆணாதிக்கச் சிந்தனையாளர்கள்.   தப்பு தப்பாக கதையைச் சொல்லி உலகத்தைத் தப்பான வழியில் போக வைப்பதெல்லாம் ஒரு காப்பியமா? உலகிற்கு உயர்நெறியைக் காட்டுவதே உண்மையானக் காப்பியம். ஒரு காப்பியத்தைப் படித்தால் மக்கள் திருந்த வேண்டும். செய்த தவறுக்கு மனம் வருந்த வேண்டும். அதுவே நல்ல காப்பியம். 


அறத்தின்வழி பார்த்தால், கண்ணகி   கோவலனை அல்லவா கொளுத்தியிருக்க வேண்டும். மதுரை மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? .  கண்ணகி அறிவுள்ள பெண்ணாக இருந்திருந்தால்  கோவலன் மாதவியைத் தேடிச்  சென்றதும் , மறுநாளே மாதவி வீட்டுக்குச் சென்று கோவலனின்  கன்னத்தில் நான்கு அறை விட்டு அவனை  இழுத்து வந்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாட்டில் நிறைய கோவலன்கள்  உருவாகியிருக்க மாட்டார்கள்.


கோவலன் மாதவியோடு இருந்த போது, வளையாபதி கதையின் தலைவி பத்தினியைப் போல ஊரைக் கூட்டிச் சென்று, கோவலன் செய்தக் குற்றத்தைச் சொல்லி  அவனைக் கூண்டில் நிறுத்தியிருக்க வேண்டும். இல்லையேல், குற்றம் செய்த கணவனைக் கொன்ற  குண்டலகேசியைப்   போல கோவலனைக் கொன்றிருக்க வேண்டும். ஏன் இதையெல்லாம் கண்ணகி  செய்யவில்லை?  காப்பியத்தை எழுதிய  ஆண் அப்படித்தான் கண்ணகியைக் கட்டமைத்திருக்கிறான். அவள் என்ன செய்வாள்? பாவம் .  காலந்தோறும் பெண் அடிமையாகவே இருக்க வேண்டும். அதுதான் சிலப்பதிகாரம் உணர்த்தும் முழு உண்மை. 


கோவலன்,  முதலில் கண்ணகி வாழ்க்கையைக் கெடுத்தான். பின்பு மாதவி வாழ்க்கையைக் கெடுத்தான் . அதன் பின்பு செத்தான். செத்த பின்பாவது சும்மா இருந்தானா? பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்க்கையைக் கெடுத்தான். மதுரை மக்கள் வாழ்க்கையைக் கெடுத்தான். " செத்தும் கெடுத்தான் சீதக்காதி " என்பதைப் போல " செத்தும் கெடுத்தான்  கோவலன் " என்று புதுமொழியையே  உருவாக்கலாம் . இவ்வளவு செய்த கோவலனை  நல்லவன் என்று சொல்வதன்  காரணம்? அவன் ஓர் ஆண். அதுவும் பணம்படைத்த ஆண். அவன் எது செய்தாலும், சரியென்று சொல்லி " தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போல " தலையாட்ட வேண்டும். அதுவே தமிழ் மக்களின் தலைவிதி. 


இப்போது புரிகிறதா ஏன் சிலப்பதிகாரம் கொண்டாடப்படுகிறது என்று? ஆண்கள் மட்டுமே இந்த உலகை ஆள வேண்டும். அவனுக்கு அடிமையாகவே  பெண்கள் எப்போதும் வாழ வேண்டும். இதுதான் அரசியல். 


கோவலனுக்கும், கண்ணகிக்கும் திருமணம் நடக்கும்போது கோவலனுக்கு அகவை 16 என்றும், கண்ணகிக்கு அகவை 12 என்றும் சொல்கிறார் இளங்கோவடிகள். இரண்டு குழந்தைகளைப் பிடித்து, அவர்களுக்கு  மணம் முடித்துவிட்டு, அவர்களுக்கென்று ஒரு கதையை உருவாக்கிவிட்டு அதை " குடிமக்கள் காப்பியம் " என்பதா?  உண்மையில் அது " குழந்தைகள் காப்பியம் " 

கோவலன் மாதவியைத் தேடிப் போகும் போது மாதவிக்கு அகவை 12.  என்ன கொடுமை இது?  போக்சோவால் ( அந்தக் காலத்தில் அந்தச் சட்டம் இருந்திருந்தால்)  உள்ளே போயிருக்க வேண்டியவன்,  பொற்கொல்லனால் மேலே போய்விட்டான். 


சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று ( உண்மையான) உண்மைகள் : 

1.பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு ( கோவலன் - கண்ணகி)  அறிவும் ( கண்ணகி),  ஒழுக்கமும் ( கோவலன்)  இருக்காது. 

2.அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் அறிவோடும் ( மணிமேகலை - சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றினாள் )  , ஒழுக்கத்தோடும் ( மாதவி - கணிகையர் குலத்தில் பிறந்திருந்தாலும் கடைசிவரை கோவலனோடு மட்டுமே வாழ்ந்த உண்மையான கற்புக்கரசி)  இருப்பார்கள். 

3.பிள்ளைகள் பெற்றுக் கொள்வது பெருமை அல்ல. பிள்ளைகளை நன்முறையில் வளர்ப்பதே உண்மையான பெருமை. மாசாத்துவன் ( கோவலனின் தந்தை ) , மாநாய்கன் ( கண்ணகி) போல பிள்ளைகளைப் பெற்று நாட்டுக்குத் ( பாண்டிய நாட்டுக்கு) துன்பம் தராமல் , மாதவியைப் போல பிள்ளையைப் பெற்று ,  நன்முறையில் வளர்த்து,  நாட்டுக்கு ( மணிமேகலை - சோழ நாட்டுக்குப் பெருமை சேர்த்தாள்)  இன்பம் தரவேண்டும். அதுதான் பெற்றோர்களின் கடமை.

 

 சீவகன் எட்டுப் பெண்களை மணம் முடிப்பதே சீவக சிந்தாமணியின் கதை. ஆண்களில்  சிலருக்கு  இந்தக் கதை எல்லாக் காலத்திலும் பொருந்தும் என்பதால் " சீவக சீந்தாமணியை "  பாதுகாத்து  வைத்திருக்கிறார்கள்.  பாடத்திட்டத்திலும் வைத்திருக்கிறார்கள். 

சிலப்பதிகாரமும் , சீவக சிந்தாமணியும் ஆணாதிக்கம் பேசுகின்றன. அதனால்தான் , உலகம் அவற்றைப்  பெருமையாகப் பேசுகின்றன.  ஆண் துணையில்லாமல்  பெண்ணால் வாழ முடியும் என்று புரட்சி செய்தாள்  மணிமேகலை. ஆனால், ஆண்களை எதிர்த்துப் பெண்ணால் வாழ முடியும் என்று புரட்சி செய்யவில்லை. அதனால் மணிமேகலை தப்பித்தாள்.  குண்டலகேசியும், வளையாபதியும் ஆண்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். அதனால், அவர்களின் குரல்வளை நசுக்கப்பட்டது. ஆம். அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டது. மூல ஓலைச்சுவடிகளை அழித்தார்கள். ஆனால் மூலை முடுக்கெல்லாம் அவை ஏற்படுத்திய தாக்கத்தை யாரால் தடுக்க முடியும்? அங்கும் இங்குமாய் பேசப்படும் அவற்றின் கதையும்,  அங்கும் இங்குமாய் கிடைத்த அவற்றின் சில பாடல்களும்,  குண்டலகேசி,  வளையாபதி காப்பியத்தின் பெருமையைக் காலம் கடந்தும் நம் நெஞ்சில் நிலை நிறுத்தியுள்ளன. "விதி வலியது " என்பார்கள்.  அது உண்மைதான். 


வந்தேறிகளின் நஞ்சேற்றப்பட்ட சிந்தனைகள் எல்லாம் நம் இலக்கியங்களில் இடைச்செருகலாக  சேர்க்கப்பட்டுள்ளன. நம் தமிழ் இலக்கியங்களில் சிலவற்றை  மறு ஆய்வு செய்ய வேண்டும். 


"பெண்மையைப் போற்றுவதுதான் நம் தமிழர் பண்பாடு. இதைச் சிந்திப்போம் நல் அறிவோடு " 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்