Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " வளையாபதி "

 



காவிரிப்பூம்பட்டினத்தில் நவகோடி நாராயணன் என்னும் பெருவணிகன் ஒருவன் இருந்தான். அவன் வைர வணிகம் செய்து வந்தான்.  அவனிடம் ஒன்பது கோடிக்கும் மேலான மதிப்பில் சொத்துகள் இருந்ததால் அவனை நவகோடி நாராயணன் என்று எல்லோரும் அழைத்தனர். அவனுக்குத் திருமணம் நடந்து பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு இல்லை. தான் தேடி வைத்த எல்லாச்  சொத்துகளையும் கட்டி ஆள தனக்கு ஒரு  குழந்தை இல்லையே என்று ஏங்கித் தவித்தான். 


தனக்கென்று ஒரு வழித்தோன்றல் வேண்டி,  இன்னொரு திருமணம் செய்து கொள்ள  முடிவு செய்தான். தான் சார்ந்த வணிகர் குலத்தைச் சாராமல் வேறு குலத்தைச் சார்ந்த பத்தினி என்ற ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்தான். அவன் நினைத்தது போலவே திருமணமான சில திங்களிலேயே பத்தினி வயிற்றில் கரு உருவானது. தனக்கொரு வழித்தோன்றல் உருவாகிவிட்டதை எண்ணி மகிழ்ச்சி  அடைந்தான். அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. குழந்தைக்காக  என்னைத் தவிர்த்துவிட்டு, யாருக்கும் தெரியாமல்  வேறொரு பெண்ணை மணம் முடித்து, அவளோடு என் கணவர் வாழ்ந்து வருகிறார்.  என் கணவனை என்னோடு சேர்த்து வையுங்கள் " என்று சொல்லி ஊர் பெரியவர்களிடம் முறையிட்டாள் நவகோடி நாராயணனின் முதல் மனைவி. 


நவகோடி நாராயணனை அழைத்து , நீ வணிகர் குலத்தைச் சார்ந்தவன். உன் இரண்டாவது மனைவியோ வேறு குலத்தைச் சார்ந்தவள். இப்படி குலம் மாறி மணம் செய்வது ஊர் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும். ஏற்கனவே உனக்குத் திருமணம் ஆகிவிட்டது. உனக்கென்று ஒரு மனைவி இருக்கிறாள்.  அவளோடு இல்லறம் நடத்தாமல் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தது மாபெரும் குற்றமாகும். அதனால் இரண்டாவது மனைவியை விலக்கிவிட்டு , முதல் மனைவியோடுதான் இனிமேல்  நீ வாழ வேண்டும். இல்லையேல் உன்னை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம்" என்று அறிவுறுத்தினர்  ஊர் பெரியோர்கள். ஊர் கட்டுப்பாட்டுக்கு அஞ்சி கருவுற்றிருந்த தன் இரண்டாவது மனைவியை விலக்கினான். முதல் மனைவியோடு வாழத் தொடங்கினான் . 


தன் இரண்டாவது மனைவியால் ஏதேனும் இடர் வருமோ என்று அஞ்சிய நவகோடி நாராயணன்,   சிறுது காலம் கடற்பயணம்  மேற்கொண்டு பொருளீட்டச் சென்றான். பெரும்    பொருளீட்டியபின், மீண்டும் தன் ஊருக்கு வந்து முதல் மனைவியோடு வாழத் தொடங்கினான். இதற்கிடையில் கருவுற்றிருந்த பத்தினி  ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து அவனுக்கு " உத்தமன் " என்று பெயர்சூட்டி அவனை  நன்முறையில் வளர்த்து வந்தாள். காலங்கள் உருண்டோடின. 


தன் நண்பர்களுடன் உத்தமன் விளையாடிக் கொண்டிருந்த போது,  அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டையில் ," நீ அப்பா பெயர் தெரியாதவன் தானே? என்று கிண்டல் செய்தனர் அவன் நண்பர்கள்.  அதைக்கேட்டதும் மனம் வருந்திய உத்தமன்,  நடந்ததை தன் தாயிடம் சொல்லி அழுதான். என்னுடைய அப்பா யாரும்மா? அவர் எங்கே இருக்கிறார்? என்று கேட்டான். " உன் தந்தையின் பெயர் நவகோடி நாராயணன். அவர் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரிய வைர வணிகராக இருக்கிறார் " என்றாள் அவன் தாய் . 


தன் தந்தையைப் பார்க்க காவிரிப்பூம்பட்டினம் சென்றான் உத்தமன். அங்கே தன் தந்தையைச் சந்தித்து தன்னைப் பற்றியும் தன்  தாயைப் பற்றியும் கூறினான் . ஊர் கட்டுப்பாட்டுக்கு அஞ்சி, தன் மகனைத்  துரத்திவிட்டான் நவகோடி நாராயணன். தன் தாயிடம் வந்து  தந்தையின் கொடுஞ்செயலைக் கூறினான். தன் மகனின் மனக்கவலையைப் போக்கவும்,  தன் கணவனுக்குத் தக்க பாடம் புகட்டவும் முடிவு செய்தாள் பத்தினி. 


தன் மகனை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினம் சென்றாள். ஊர் பெரியோர்களிடம் தனக்கான நீதி கிடைக்காது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அதனால், அவள் வணிகக்குலப் பெண்களைச்   சந்தித்துத் தன் நிலையையும், தன் மகனின் நிலையையும், சொல்லி அழுதாள். " என்னுடைய அப்பா யாரென்று  என் மகன் என்னிடம் கேட்கிறான்.  இந்த நிலை உங்கள் மகனுக்கு வந்தால் நீங்கள்  என்ன செய்வீர்கள்? என்று எல்லோரையும் பார்த்துக் கேட்டாள். ஒரு பெண்ணின் வலி இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பார்கள். ஆம். பத்தினியின்  வலியும், துயரும் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள அனைத்துப் பத்தினிப்  பெண்களுக்கும் தெரிந்தது.  பெண்கள்  அனைவரும்  பத்தினிக்குத் துணையாய் நின்றனர். உத்தமனுக்கு உரிமை கேட்டு ஊர் பெரியோர்களையும், நவகோடி நாராயணனையும் எதிர்த்து நின்றனர். நெருக்கடி கொடுத்தனர்.  வணிகக்குலப் பெண்களின் வலிமை கண்டு ஊர் பெரியோர்களும், நவகோடி நாராயணனும் பத்தினிக்கு அடிபணிந்தனர். 


 உத்தமன் தன் மகன்தான் என்பதை  ஊரறிய ஒப்புக்கொண்டு, தன் மகனுக்கு "வீரவாணிபன்" என்று பெயர் சூட்டி,  தன் சொத்துகளையும், தன் வணிகத் தொழிலையும் அவனிடம் ஒப்படைத்தான்.  அவனுக்கு உற்ற துணையாய் உடனிருந்தான் நவகோடி நாராயணன். தன் அன்பு மகனை அவன் தந்தையோடு சேர்த்து விட்டதுமே தன் வாழ்க்கை முழுமை பெற்றதாய் எண்ணினாள் பத்தினி. அதனால் அவள் கணவனோடு சேர்ந்து வாழ விரும்பாமல் துறவறம் மேற்கொண்டுவிட்டாள். மனம் திருந்தி வாழத் தொடங்கிய நவகோடி நாராயணன் தன் மகனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து தன் காலத்தைக் கழித்தான். இந்த நவகோடி நாராயணனே  " வளையாபதி " என்று போற்றப்படுகிறான். 


இதுதான் " வளையாபதி காப்பியத்தின் " கதையென்று சூடாமணிப் புலவர் இயற்றிய " வாணிக புராணத்தில் " வருகின்ற " வைர வாணிகன் வளையாபதி பெற்ற சருக்கம் " கூறுகிறது.


"ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார் " என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார். இலக்கண, இலக்கிய உரையாசிரியர்களால்  மிகவும் போற்றப்பட்ட நூல். 19 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் செல்வாக்குடன் இருந்த நூல்தான்  "வளையாபதி " 


ஐம்பெரும்காப்பியங்கள்  என்ற சொல்லை நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதர்தான் முதன்முதலில் பயன்படுத்தினார். ஆனால்,  அந்த நூல்களின்  பெயர்களை அவர் கூறவில்லை.

18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருத்தணிகை உலாவில்தான் முதன்முதலில் ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்கள்  சுட்டிக்காட்டப் படுகின்றன. தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பிய  இலக்கண மரபைப் பின்பற்றி எழுதப்பட்டதால்தான் இவை ஐந்தும் பெருங்காப்பியங்களாகப் போற்றப் பட்டன. 


" சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்

கந்தா மணிமே கலைபுனைந்தான் -  நந்தா 

வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான் 

திளையாத குண்டலகே சிக்கும் " 


ஐம்பெருங் காப்பியங்கள் என்று வரையறை செய்யப்பட்ட 18 ஆம் நூற்றாண்டு வரை இந்த ஐந்து நூல்களும்  முழுமையாக  இருந்ததால்தான் திருத்தணிகை உலாவில் அவற்றின் பெயர்கள் இடம்பெற்றன. 


"  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரிடம் தாம்  மாணவராக  சேர்ந்த புதிதில் , திருவாவடுதுறை மடத்தில்,   வளையாபதியை  ஓலைச்சுவடி வடிவில் முழுமையாக  அங்கே கண்டதாகவும்,  அப்போது அதன்மீது ஆர்வம் இல்லாததால் அதை கண்டுகொள்ளாமல் விட்டதாகவும்,  பிற்காலத்தில் நூல்பதிப்பு பணியில் ஆர்வம் வந்தவுடன் மீண்டும்  அங்கே சென்று அந்த ஓலைச்சுவடியை   நன்கு தேடியதாகவும் , ஆனால் அந்த ஓலைச்சுவடி மட்டும்  அங்கே இல்லையென்றும்,   வேறு எங்கே தேடியும்  அது காணவில்லை  என்றும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான " என் சரித்திரம் " என்னும் நூலில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தாத்தா உ.வே.சா. 


"கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை"  தமிழ்த்தாத்தாவுக்கு மட்டுமல்ல,  தமிழுக்கும், தமிழர்க்கும்தான்.  


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்