Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " கேளிரான் ஆய பயன் "



" இந்த உலகில் எவரையும், பார்த்த உடனேயே அவர்களின் உண்மை  முகத்தை  அறிய  முடியாது. அதுவும் உறவினர்களின் உண்மை முகத்தை அறிவது மிகவும் கடினமான ஒன்றாகும். " மின்னுவது எல்லாம் பொன்னல்ல " என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?  எதையும் ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை ஆகும்.


" மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து 

ஏறிப பின்னறிப மாநலம் மாசறச் 

சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப 

கேளிரான் ஆய பயன்.  " 

( நாண்மணிக்கடிகை - 03)


" மாணிக்கம் முதலான நவமணிகளின் இயல்பை  ஆய்ந்து அறியும் வல்லுந‌ர்கள் , அவற்றை நீரால் கழுவி அறிவார்கள். 


குதிரையின் நல்லியல்பை அறிய,  அதன்மேல் சேணம் ( குதிரையின் மேல் அமர்வதற்காக அதன் முதுகில் பூட்டப்படும்  தோல் இருக்கை)  பூட்டி , அதில் ஏறி அமர்ந்து ஓட்டிப் பார்த்து அறிவார்கள். 


பொன் எவ்வளவு உயர்ந்தது என்பதை அறிய அதனைப் புடமிட்டு உருக்கிப் பார்த்து அறிவார்கள்.


ஆனால், உறவினர்களின் உண்மையான இயல்பை அறிய வேண்டுமென்றால், நாம் வறுமையுற்று துன்பமடையும் காலத்தில்தான் அறிய முடியும். 


நம் எல்லாவற்றையும் இழந்து   நிற்கும்போது , நாம் அழைக்காமலேயே , நம் நிலையறிந்து ஒடி வந்து உதவி  செய்யும் உறவினர்கள் யாரென்பதையும்,  உதவி செய்யாமல் ஓடி ஒளியும்  உறவினர்கள் யாரென்பதையும் அறிந்து கொள்ளலாம்.  நம் உறவினர்களின் உண்மை முகம் எதுவென்பது  அப்போதுதான் தெரியும். 


நாம் செல்வத்தோடும்,  செல்வாக்கோடும் இருக்கும்போது நம் உறவினர்களின் உண்மை முகம் தெரியாது. நாம் செல்லாக்காசாக இருக்கும்போதுதான் நம் உறவினர்களின் உண்மை முகம் எதுவென்று தெரியும். 


"கேளிரான் ஆய பயன்" 

பொருள் : உறவினர்களால் உண்டாகும் பயன். 


" வகுப்பில் கற்ற பாடம் 

உலகத்தை அடையாளம் காட்டும்!

வறுமையிடம் கற்ற பாடம் 

உண்மையான உறவுகளை அடையாளம் காட்டும்!


இவண் 

ஆ.தி.பகலன்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்