Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " சோழநாடு சோறுடைத்து "



சங்க காலத்தில் பசிப்பிணி போக்குதல் தலையாய அறங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. வேற்றூரில் இருந்து வருகின்ற மக்கள் தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் பல தருமச்சத்திரங்கள் இருந்ததாகப் பட்டினப்பாலை கூறுகிறது. 


கல்லணையைக் கட்டிய கரிகால் பெருவளத்தானின் சிறப்புகளைப் பாடும் நூலே பட்டினப்பாலை.  அவன் ஆட்சியில் காவிரிப்பூம்பட்டினம் பல்லாயிரம் மக்களுக்குச் சோறுபோடும் இடமாக  இருந்தது என்பதை பட்டினப் பாலையில்  உள்ள ஒரு பாடல்வழியாகக்  காண்போம்.


" சோறு ஆக்கிய கொழும்கஞ்சி 

ஆறு போலப் பரந்தொழுகி 

ஏறு பொரச் சேறாகித் 

தேரோட்டத் துகள் கெழுமி 

நீராடிய களிறு போல 

வேறுபட்ட வினை ஓவத்து 

வெண்கோவில் மாசு ஊட்டும் " 


( பட்டினப் பாலை :  44 -  50 அடிகள்)    


"காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள சத்திரங்களில் சோறு பொங்குகிறார்கள். அப்போது வடிக்கப்படும் கஞ்சி வீதிகளில் ஆறுபோல ஓடி வருகிறது. அங்கே காளைகள் ஒன்றோடொன்று சண்டையிட சோற்றுக்கஞ்சி சேறானாது. அந்தச் சேற்றின் மீது ஞாயிற்றின் ஒளிபட்டு     காய்ந்தது. அந்தக் காய்ந்துபோன சேற்றின் மீது தேர்கள் ஓட சேறு புழுதியாகி எங்கும் பரவியது. அப்புழுதி படிந்ததால், பல்வேறு வண்ணங்களால் வேலைப்பாடமைய ஓவியம் தீட்டப்பட்டு வெண்ணிறமாக இருந்த அரண்மனை, புழுதியினைத் தன்மேல் வாரி இறைத்துக் கொண்ட யானையைப் போல  மாசு படிந்து காட்சியளித்தது " என்கிறது பட்டினப் பாலை.


சோழ வளநாட்டில்

 " வான் பொய்ப்பினும் தான் பொய்யாக்காவிரி உண்டு. கழனி வளம் உண்டு. அதனால் சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி ஆறு போல வழிந்தோடியது " என்று போற்றுகிறது பட்டினப் பாலை. 


எத்தனை ஆயிரம் பேருக்குச் சோறு வடித்திருந்தால் அந்தச் சோறு வடித்த கஞ்சி தெருவில் ஆறுபோல் ஓடும். சிந்தித்துப் பார்க்கவே தலை சுற்றுகிறது. "சோழநாடு சோறுடைத்து " என்பது பழமொழி. சோழநாடு சோறுடைத்த நாடு மட்டுமல்ல. பல்லாயிரம் மக்களுக்குச் சோறு போட்ட நாடு என்பதை இப்பாடலால் அறிய முடிகிறது. 


" ஆற்றில் போட்டாலும்  அளந்து போட வேண்டும் " என்பது பழமொழி. ஆனால்,  சோழ நாட்டிலோ அளக்காமல் போட்ட அரிசி,  சோறாகி அதன் கஞ்சி ஆறாகி தெருவெங்கும் ஓடியது போலும்.


குணத்தால் வேறுபட்ட இனங்கள் உலகில் பல இருந்தாலும்,  எல்லோர்க்கும் சோறு போட்ட ஒரே இனம் நம் தமிழ் இனம் மட்டுமே. 


இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்