Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " உடன்பிறப்பு "

 



பத்து வயது சிறுவன் ஒருவன் மூன்று  வயதாகும் தன் தங்கையை இடுப்பில்  தூக்கி வைத்துக் கொண்டு கடைக்குச் சென்றான். 


அவன் தங்கையோ கொழுகொழுவென்று கொஞ்சம் குண்டாக இருந்தாள். அவளை இடுப்பில் தூக்கி வைக்க அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு கடைக்குச் சென்றான். 


கடையில் தன் தங்கை ஆசையோடு கைகாட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான். கடைக்காரர் நீண்ட நேரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். 


"நீண்ட நேரமாக உன் தங்கையைத் தூக்க முடியாமல் தூக்கி வைத்திருக்கிறாயே உனக்குச் சுமையாக இல்லையா? " என்று அந்தச் சிறுவனைப் பார்த்துக் கேட்டார் கடைக்காரர். 


அதற்கு அந்தச் சிறுவன் " இவள் என் தங்கை . என் அன்புக்கு உரியவள். இவளை அன்போடு பார்த்தால் சுமை தெரியாது. இவளைச் சுமையாக பார்த்தால் அங்கு  அன்பு  இருக்காது. அன்பு கொண்ட இதயம் எதையும் சுமக்கும். அது இமயமாக இருந்தாலும் கூட " என்றான். விடையேதும் சொல்ல முடியாமல் வியப்போடு பார்த்தார் கடைக்காரர் .


இந்தக் கதையில் வரும் சிறுவனைப்போல,  தன் உடன்பிறப்புகளுக்காக எதையும் சுமக்கின்ற, எந்நாளும் உழைக்கின்ற நல்ல அண்ணன்கள் நாட்டில் பலர் உண்டு. அண்ணன் என்பவன் உடன்பிறப்பு மட்டுமல்ல. அன்னையின் மறு உருவம். 


உடன்பிறப்புகளுக்காக உழைப்பது சுமை அல்ல. அது ஒரு வரம். தனக்குக் கீழே அமர்ந்து இருப்பவர்களுக்கே நிழல் தராத மரம் வேறு யாருக்குத்தான் நிழல் தரும்.


தன்னுடன் பிறந்த  உடன்பிறப்புகளையே நேசிக்காதவர்கள் இந்த உலகத்தை எப்படி நேசிப்பார்கள்?  அண்ணனோ தம்பியோ , அக்காவோ தங்கையோ அவர்களுக்காக கொடுப்பதில் கணக்குப் பார்க்காதீர்கள். கணக்குப் பார்த்து உதவி செய்ய அவர்கள் ஒன்றும் கடன்காரர்கள் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும் நேசிக்க வேண்டிய உண்மையான உறவுகள். 


அவர்களின் கண்ணீரைக் கண்டு கடந்து போவதல்ல வாழ்க்கை. அவர்களுக்காக கடைசிவரை கரைந்து போவதுதான் வாழ்க்கை. 


கண்களை  இழந்தவனுக்குத்தான் கண்களின் அருமை தெரியும். உடன்பிறப்பு இல்லாதவனுக்குத்தான் உடன்பிறப்பின் அருமை தெரியும். உங்கள் உடன்பிறப்புகளை அன்போடு பாருங்கள்.  அவர்கள் சுமையாக தெரியமாட்டார்கள். 


இந்த உலகத்தில் நீங்கள்  இன்பமாக வாழ வேண்டுமெனில்,   அனைவர்மீதும்  அன்பு காட்டுங்கள். அதுவே  எளிய வழி. 


" அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 

இன்புற்றார் எய்தும் சிறப்பு.


( குறள் - 75) 


இந்த உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அவர்  அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன்தான் என்பர்.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்