Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தீதும் நன்றும் பிறர்தர வாரா "




ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். செல்லும் வழியில் ஒரு ஞானியைக் கண்டார்கள். அவரிடம் சென்று " ஞானியே! வாழ்க்கையில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்? " என்று கேட்டார்கள். 


"அருகில் உள்ள காட்டிற்குச் செல்லுங்கள். ஒரு சாக்கு நிறைய பழங்களைப் பறித்து வாருங்கள். அதை ஓர் ஏழைக்கு உண்ணக் கொடுங்கள் . உங்கள் வினாவுக்கான விடையைச் சொல்கிறேன் " என்றார் ஞானி. 


இருவரும் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார்கள்.  ஒருவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களைப் பறித்து மூட்டை கட்டினான். மற்றொருவனோ சரியான சோம்பேறி. மரம் ஏறி பழம் பறிக்க விரும்பவில்லை. மரத்திலேயே பழுத்து அழுகி கீழே விழுந்த கெட்டுப்போன  பழங்களை எல்லாம் எடுத்து மூட்டை கட்டினான். யாருக்கோ கொடுக்கப்போகும் பழம் தானே எப்படி இருந்தால் என்ன? என்ற நினைப்பு அவனுக்கு இருந்தது. 


இருவரும் ஞானியிடம் வந்து நின்றார்கள். " ஞானியே! நீங்கள் சொன்னதுபோல் ஆளுக்கொரு மூட்டை பழங்களைக் கொண்டு வந்துவிட்டோம் . இந்தப் பழங்களை எந்த ஏழையிடம் கொடுக்க வேண்டும்?  " என்று கேட்டார்கள். 


அதற்கு அந்த ஞானி " அந்த ஏழைகள் வேறு யாருமில்லை.  நீங்கள்தான். நீங்கள் கொண்டு வந்த பழங்களை நீங்களே உண்ணுங்கள்.  நீங்கள் கொண்டு வந்த பழங்கள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் இருக்கும் . மற்றவர்களுக்கு நீங்கள்  எதைச் செய்ய நினைக்கிறீர்களோ அதுவே உங்களுக்கும்  வரும்"  என்று கூறினார்.  


நல்ல பழங்களை கொண்டு வந்தவன் மகிழ்ச்சி அடைந்தான். அழுகிய பழங்களைக் கொண்டு வந்தவன் மனக்கவலை அடைந்தான். 


" தீதும் நன்றும் பிறர்தர வாரா " என்பது  எவ்வளவு பெரிய உண்மை. நமக்கு வருகிற இன்பமும்  துன்பமும்  மற்றவர்களால் வருவது இல்லை. எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம் . நாம் எதைச் செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்ப வரும். 


இவரால் எனக்கு இந்த நன்மை வந்தது.  இவரால் எனக்கு இந்தத் தீமை வந்தது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள் . அனைத்திற்கும்  நாம் செய்கின்ற செயல்களே காரணம் என்பதை உணருங்கள். 


மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாம் நினைத்தால்,  நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.  மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய நினைத்தால் நம் வாழ்க்கையில் துன்பமே தொடரும். 


" நீங்கள் 

எப்போதும்  மகிழ்ச்சியாக வாழ நினைத்தால் ,

நீங்கள் 

எல்லோரையும் மகிழ்ச்சியாக வாழ வையுங்கள்!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்