Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " நின்னோடு வாழ்தல் அரிது "

 



சமூகச் சிக்கல்களை எல்லாம் தன் படைப்பின் மூலம் பதிவு செய்பவனே உண்மையானப் படைப்பாளி. 1951 ஆம் ஆண்டு வெளியான "சிங்காரி" திரைப்படத்தில் இடம்பெற்ற  பாடலைப்  பாருங்கள். அது உணர்த்தும் உணவு அரசியலையும், உலக அரசியலையும் பாருங்கள்.


" ஒரு சாண் வயிறு இல்லாட்டா 

இந்த உலகத்தில் ஏது கலாட்டா?

உணவுப் பஞ்சம் வராட்டா - நம் 

உசுரை வாங்குமா பரோட்டா? " 


கவிஞர் தஞ்சை இராமையாதாஸ் எழுதிய இப்பாடல் வரிகள் மிகப்பெரிய உண்மையை உலகிற்கு உணர்த்துகின்றன. ஒருசாண் வயிறு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்த உலகில் இன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் போயிருக்கும். உலகில் உள்ள எல்லாவித துன்பங்களுக்கும் தொடக்கமே, ஒரு சாண் வயிறுதான். அந்த ஒருசாண் வயிறு இல்லையென்றால் மனிதனுக்குத் துன்பம் ஏது? துயரம் ஏது?


அந்த ஒரு சாண் வயிற்றுக்காகத்தான் எல்லாவிதமான பாவங்களையும் செய்யத் துணிகிறது மனித சமுதாயம். எல்லோர்க்கும் உணவு இருந்தால்,  எல்லோர்க்கும் கொடுத்து உண்ண வேண்டும் என்கின்ற உணர்வு இருந்தால், இந்த மனித சமுதாயம் உணவுப் பஞ்சத்தை எப்போதோ உடைத்திருக்கும். எட்ட முடியாத உயரத்தை அடைந்திருக்கும். ஒருவன் அற வழியில் செல்ல வேண்டுமா? புற வழியில் செல்ல வேண்டுமா? என்பதை உணர்வு தீர்மானிப்பதில்லை. உணவுதான் தீர்மானிக்கிறது. 


மேலை நாட்டினரின் மண்ணாசையால் மலர்ந்த காலனி ஆதிக்க உணர்வு மனித சமுதாயத்தில் பாதி மக்களைக்  கொன்று குவித்தது. அதனால் உலகப் போர்கள் உருவாயின. 

உலகப் போரினால் உயிர்க்கொலையும் , உணவுப் பஞ்சமும் அதிகமானது. உலகப்போரில் ஈடுபட்ட போர் வீரர்களுக்குக் கூட உணவு கொடுக்க முடியாத நிலை உண்டானது. குறைந்த விலையில் வயிறு நிரம்பும் வழியைப் பற்றி ஆராய்ந்தது அறிவியல் உலகம். 


அந்த ஆராய்ச்சியில் முதலிடத்தைப் பிடித்தது மைதா மாவு.  இன்று மண்ணுலக மக்களை மண்ணோடு மண்ணாக மண்ணாக்கிக் கொண்டிருக்கிறது இந்த மைதா . 

மைதா மாவில் செய்கின்ற பரோட்டாவைச் (புரியடை)  சாப்பிட்டால் அது எளிதில் செரிமானம் ஆகாது .நீண்ட நேரம் அது வயிற்றுக்குள்ளேயே இருக்கும். அதனால் பசி எடுக்காது என்பதால் போர் வீரர்கள் அனைவருக்கும் பரோட்டா  வழங்க ஆணையிடப்பட்டது . மைதா உணவால் செலவு குறையும் என்று எதிர்பார்த்தார்கள். செலவைப் போலவே அதை உண்பவர்களின் ஆயுளும் குறையும் என்பது அடுத்து வந்த ஆய்வுகள் அறிவித்தன.


உலகப் போர்களோ உணவுப் பஞ்சத்தைக் கொடுத்தன. அந்த உணவுப் பஞ்சத்தைப் போக்க வந்த மைதாவோ இன்று உயிர்ப்பஞ்சத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது உயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டிருக்கின்றன. உலக உயிர்களை அதிகளவில் கொன்று  குவித்துக் கொண்டிருக்கும் நீரிழிவு நோயின் பிறப்பிடமே மைதா மாவுதான்.  இன்று மனிதர்களின் உயிர்க்கொல்லியாக விளங்குகிறது  மைதா மாவு. அந்த மைதா மாவும் , மைதா மாவினால் செய்யப்படும் பரோட்டாவும் மக்களுக்கு  இன்று மட்டுமல்ல, எழுபது ஆண்டுகளுக்கு முன்பே அது மக்களின்  உயிரை வாங்கியது என்பதைத்தான் " உணவுப் பஞ்சம் வராட்டா  - நம் உயிரை வாங்குமா பரோட்டா " என்று அழகாகப் பதிவு செய்துள்ளார் கவிஞர் தஞ்சை இராமையாதாஸ்.


"சிங்கத்திடம் தப்பி சிறுத்தையிடம் மாட்டிக் கொண்ட கதைபோல " பசியில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணிக் கொண்டு பரோட்டாவிடம் மாட்டிக் கொண்டுவிட்டது இந்த உலகம். 

பசிதான் எல்லாப் பாவங்களுக்கும் தாய். பசியால் மனிதன் தடுமாறுகிறான். பின்பு தடம்மாறுகிறான். இந்த உலகில்  பசி ஒன்றுதான் மனிதனைப் பாடாய் படுத்தும் பெருந்துன்பம் ஆகும்.

  

பசிக் கொடுமையின்     பாதிப்பை    முனைப்பாடியார் பதிவு செய்துள்ளதைக் காண்போம்.


" ஒருநாளும் நீதரியாய் உண்என்று சொல்லி 

இருநாளைக்கு ஈந்தாலும் ஏலாம் - திருவாளா 

உன்னோடு உறுதி பெரிதுஎனினும் இவ்வுடம்பே 

நின்னோடு வாழ்தல் அரிது."


( அறநெறிச்சாரம் - 36) 


" பசியால் வருந்தும் உடம்பே!  உணவற்ற காலத்தில் ஒருநாளும் பசி பொறுக்க மாட்டாய். நல்ல உணவு மிகுதியாகக் கிட்டும் காலத்தில் இரண்டு நாளுக்கு சேர்த்து உண்பாயாக என்று சொல்லி அளித்தாலும் நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய். 

திருவுடையவனே!  உன்னுடன் கூடி வாழ்வதால் நான் அடையும் பயன் சிறந்தது என்றாலும்,  உன்னுடன் வாழ்வது என்பது எனக்குப் பெருந்துன்பமாக இருக்கிறது " என்று வருந்துகிறார் முனைப்பாடியார். 


  ஒவ்வொரு காலத்திலும் பசித்துன்பத்தை எதிர்கொண்ட புலவர்கள் எல்லாம் அந்தப் பசி துன்பத்தைத் தங்கள் பாடலில் பதிவு செய்துள்ளனர். காலம் காலமாக பசித்துன்பத்தை மட்டுமே பதிவு செய்யும் நாம்,  இந்த உலகில் பசித்துன்பமே  இல்லை என்பதை எப்போது  பதிவு செய்யப் போகிறோம்? 


" படைத்தவன் என்று சொல்லி யார் யாருக்கோ 

சிலை வைத்து மாலை போடுவதை விட்டுவிட்டு,

பசித்தவனுக்கு 

இலை வைத்து சோறு போடுங்கள்!

அன்று 

பசியில்லா உலகை நாம் காணலாம்! 


இவண் 

ஆ.தி.பகலன்,  

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம் .

( அலைப்பேசி - 9965414583)


கருத்துரையிடுக

0 கருத்துகள்