Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " புலி தங்கிய குகை "

 


 வயதான பாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் ஒரு கோழி தன் இருபது குஞ்சுகளுடன்  மேய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அந்தப் பாட்டிக்குப் பொறாமையாக இருந்தது.


அந்தக் கோழியின் அருகில் சென்ற பாட்டி,  " நீ மட்டும் எப்படி உன் குஞ்சுகளை இவ்வளவு அழகாக வழிநடத்துகிறாய்"  என்று கேட்டார். 

அதற்கு அந்த கோழி " நான் என் குரல் ஓசையின் வேறுபாடுகள் கொண்டே என் குஞ்சுகளுக்குக் கட்டளையிடுவேன். இந்த ஓசையில் குரல் எழுப்பினால் இரை தேட போகிறோம். இந்த ஓசையில் குரல் எழுப்பினால் நம் எதிரிகள் ( பருந்து, கீரி) நம்மை தாக்க வருகிறார்கள் . உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த ஓசையில் குரல் எழுப்பினால் நாம் நம் இருப்பிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. வாருங்கள் போகலாம் என்று அறிவுறுத்தி வைத்துள்ளேன். அதன்படி அவை நடந்து கொள்கின்றன.  நாங்கள் இப்படி ஒன்றுபட்டு இருப்பதால்தான் பாதுகாப்பாக வாழ்கிறோம் " என்றது கோழி.


கோழி சொன்னதை வியப்போடு கேட்டார் பாட்டி. " உன்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. உன் இருபது குஞ்சுகளையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாய். ஆனால் நான் இரண்டே இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு படாதபாடு படுகிறேன். ஒருவருமே என் பேச்சைக் கேட்பதில்லை. எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? "என்று கோழியிடம் கேட்டார்  பாட்டி.


அதற்கு கோழி என்ன சொன்னது தெரியுமா?

" உன் வளர்ப்பு அப்படி.  வேறென்ன சொல்ல முடியும்? வளர்ப்பு சரியாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை சரியாக இருக்கும். இல்லையென்றால் இப்படித்தான் சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள் " என்றது கோழி.


கோழி அந்தப் பாட்டிக்கு மட்டும் அப்படி சொல்லவில்லை. இந்தப் பாருக்கே சொல்லியிருக்கிறது. 

பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை ஒரு பட்டப் படிப்பாகவே வைத்து இன்றைய பெற்றோர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளுக்கு இருவரி திருக்குறளைக் கற்றுத்தர மாட்டார்கள். இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுத்தருவார்கள். அவன் ஓட்டத் தெரியாமல் ஓட்டி எதிரே வருபவர்களை எல்லாம்  ஏற்றிக்கொல்லுவான்.


இன்று யார் வீட்டுக்காவது சென்று உங்கள் மகன் எங்கே என்று கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? 

அந்த தண்டச்சோறு எங்கு போனதோ, அது எங்கேயாவது பொறுக்க போயிருக்கும். அது எங்கேயாவது ஊர் சுற்ற போயிருக்கும் என்றுதான் விடையளிப்பார்கள்.

உங்கள் மகன் எங்கே?  என்ற  வினாவை   சங்க கால தாயிடம் கேட்டால் என்ன சொல்வாள் தெரியுமா?


" சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் 

யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் 

யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும் 

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்கள தானே " 


( புறநானூறு - 86)


"இந்த சிறிய வீட்டின் வலிமையான தூணைப் பற்றிக் கொண்டு , " உன் மகன் எங்கே இருக்கிறான் " எனக் கேட்கிறீர்கள். என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை யான் அறியேன். புலி குகையை விட்டு புறப்பட்ட பின் அது எங்கு சென்றுள்ளது என்பதை யாரும் அறிய முடிவதில்லை. 


ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல  அவனை ஈன்ற வயிறோ இங்கே இருக்கிறது. அவன் இங்கு இல்லையெனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும் . அவனைக் காண விரும்பின்  போர்க்களத்திற்குச் சென்று காண்பாயாக " என்று அந்த வீரத்தாய் விடையளித்தார் . நாட்டைக் காக்க போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர் சங்க கால மக்கள்.  அதனால்தான் அந்த வீரத்தாய் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறுகிறாள். 


"அந்தக் கால ஆண்பிள்ளைகள்  போர்க்களம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்!

இந்தக் கால

ஆண்பிள்ளைகள் 

இருக்கின்ற இடத்தையே போர்க்களமாக மாற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்!

வளர்ப்பு அப்படி!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்