Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தமிழர்க்கு இருவர் "

 




" தவத்துக்கு ஒருவர்

தமிழுக்கு இருவர் " 

என்று ஒரு பழமொழி உண்டு. 

தவம் புரிய விரும்புபவர்கள் தனியாகத்தான் இருக்க வேண்டும். அருகில் யாரேனும் இருந்தால் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதனால் அமைதி கெடும். தவம் செய்ய முடியாது. 

தமிழ் அறிய  விரும்பினால் அங்கே இருவர்  இருக்க வேண்டும். ஒருவர் விளக்கம் கேட்கவும் , ஒருவர் விளக்கம் சொல்லவும் பொருத்தமாக இருக்கும். தமிழின் அருமைகளை பேசவும் கேட்கவும் இருவர் இருக்க வேண்டும். இப்படி தமிழைக் காக்க இருவர் தேவைப்படுவது போல, தமிழர்களைக் காக்க இருவர் வேண்டுமல்லவா?  அந்த இருவரைத்தான்  இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.


வள்ளுவரும், வள்ளலாரும்தான் தமிழினத்தைக் காத்த, காக்கின்ற, காக்கப் போகின்ற தன்னிகரற்ற வழிகாட்டிகள். யார் யாரையோ பார்த்து " பகுத்தறிவு பகலவன் " என்றும், " தமிழினத்தின் தலைவர் " என்றும் உளறிக் கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள்.  இந்த உலகத்தைப் பொறுத்தவரை   "பகுத்தறிவு பகலவன் " என்றால் அது வள்ளுவரை மட்டுமே குறிக்கும். "உலகப் பொதுமறை" மூலம் உலக மக்கள் அனைவரும் பகுத்தறிவோடு வாழ வழிகாட்டியவர் வள்ளுவர் மட்டுமே. 


 தமிழர்களின் வயிற்றுப்பசியைப் போக்க " தருமச்சாலையையும் " அறிவுப்பசியைப் போக்க " ஞான சபையையும் " ஏற்படுத்தி தமிழினத்தைக் காத்த பெருமைக்கு உரியவர் வள்ளலார் மட்டுமே.  "தமிழே இறவாத நிலை தரும் " என்று தமிழைப் போற்றினார். 

" உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் " என்று சொல்லி தமிழர்கள் அனைவரும் " மரணமில்லாப் பெருவாழ்வு வாழ  நல்வழியைக் காட்டினார். அதனால் " தமிழினத் தலைவர் " என்ற சொல் என்றென்றும் வள்ளலாரையே குறிக்கும்.  காலந்தோறும் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் வள்ளுவரும் , வள்ளலாரும் மட்டுமே. அது ஏன் என்பதை ஒரு கதையின் மூலமாக விளக்குகிறேன். 


ஒரு குருவிடம் சென்ற மாணவன் ஒருவன் " குருவே, கடவுள் இருப்பது உண்மையா? உண்மையென்றால் கடவுளைக் கண்ணால் காண முடியுமா?  என்று கேட்டான். " நீ கடவுளைப் பார்க்க வேண்டுமா?  நீ கடவுளாக ஆக வேண்டுமா? " என்று கேட்டார் குரு. "நான் எப்படி கடவுள் ஆக முடியும் " என்று கேட்டான் மாணவன். 

" ஒருவன் சாலையில் அடிபட்டுக் கிடக்கிறான். சாலையில் செல்கின்ற  எல்லோருமே அவனை வேடிக்கை பார்க்கிறார்கள். ஒருவன் மட்டும் ஓடிச் சென்று அவனைத் தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து அவன் உயிரைக் காப்பாற்றுகிறான். ஒரு உயிரைக் காப்பாற்றியவன்தான் உண்மையான கடவுள். அதனால் ஓடிச் சென்று உயிரைக் காப்பாற்றியவன் கடவுள் ஆகிவிட்டான். அதை வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் கடவுளைப் பார்த்தவர்கள் ஆகிவிட்டார்கள். இப்போது சொல் நீ கடவுளாக விரும்புகிறாயா?  கடவுளைப் பார்க்க விரும்புகிறாயா? " என்று கேட்டார் குரு. 


இந்தக் கதையில் வரும் குருவைப் போன்றவர்கள்தான் வள்ளுவரும் , வள்ளலாரும். இதுவரை உலகில் தோன்றிய சமயங்களும், ஞானிகளும் யார் யாரை கைகாட்டி இவர்தான் கடவுள் என்றார்கள் . ஆனால், "வள்ளுவரும், வள்ளலாரும்தான்  'உயிர்க்கொலை'  செய்யாதவர்களும்,  பசித்தோர்க்கு  'உணவுக்கொடை '  தருபவர்களும்தான் உண்மையான கடவுள்" என்றார்கள். மனிதன் கடவுள் ஆவதற்கான வழியைச் சொன்னார்கள்.


"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும். " 

( குறள் - 50)


"உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்,  வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான் " என்றார் வள்ளுவர். வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இறவாநிலை அடைந்தவர் வள்ளலார். " யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பதற்கேற்ப தான் பெற்ற மரணமில்லாப்  பெருவாழ்வை இந்த வையகமும் பெற வழிகாட்டினார் வள்ளலார்.  


ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்வை வகுத்துச் சொன்னார் வள்ளுவர். அதன்படி வாழ்ந்து காட்டினார் வள்ளலார். வாழ்வாங்கு வாழ்ந்தால் "இறைநிலை " அடையலாம் என்றார் வள்ளுவர்.  வாழ்வாங்கு வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இந்த வையகத்தையே வாழ்வாங்கு (வாழ வழி சொல்லி ) வாழ வைத்தவர் வள்ளலார்.


"குருவை மிஞ்சிய மாணவனால்தான் குருவுக்கு பெருமை ஏற்படும் " என்பார்கள்.  அதுபோலவே , வள்ளுவரைப் பின்பற்றி வாழ்ந்த வள்ளலாரும் குருவை மிஞ்சிய மாணவனாக இருந்து தன் குருவுக்குப் பெருமை சேர்த்தார். 


"புலவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த திருக்குறளை பொதுமக்கள் அனைவருமே படிக்க வேண்டும். கற்றறியும் வாய்ப்பு இல்லையென்றாலும் கேட்டறியும்  வாய்ப்பையாவது தரவேண்டும் "என்று வள்ளல் பெருமான் எண்ணினார் .பொது மக்களுக்காகத் திருக்குறள் வகுப்பை நாட்டிலேயே முதன்முதலில் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்காக முதன்முதலில் திருக்குறள் வகுப்பை நடத்தத் தொடங்கியவர் வள்ளலார்தான். அதன்பின்புதான் ஊர் அறிந்த நூலாக,  உலகம் அறிந்த நூலாக திருக்குறள் புகழ்பெற்றது. வள்ளுவத்தை வையம் எங்கும் கொண்டு சென்ற வள்ளலார்,  வள்ளுவர் நெறியை ஒட்டியே தன் சன்மார்க்கக் கொள்கைகளை வகுத்தார். கொல்லாமை,  பசியாற்றுவித்தல் இவை இரண்டுமே வள்ளுவத்தின் உயர்நெறி. அதுவே வள்ளலார் காட்டிய சன்மார்க்கத்தின் உயிர்நெறி. வள்ளுவம் என்ற இருப்புப்பாதையில்தான் சன்மார்க்கம் என்ற தொடர்வண்டியை இயக்கினார் வள்ளலார். 


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்றார் வள்ளுவர். 

" ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் 

ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும் " என்றார் வள்ளலார்.


சாதி, சமயம், மதம் இம்மூன்றுமே தமிழர் இதயத்திலும் , தமிழர் இல்லத்திலும், தமிழர் இலக்கியத்திலும் ஒருபோதும் இருந்ததில்லை.


" சாதியும் சமயமும் மதமும் பொய்யென 

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி " 

என்ற உண்மையை உலகிற்கு எடுத்துரைக்கிறார் வள்ளலார்.


தமிழர்களே! இதுவரை நீங்கள் சாதியால் , சமயத்தால், பிரிந்ததும்  போதும். உயர்நிலையில் இருந்து சரிந்ததும் போதும். வேற்று மதங்களுக்கு வால் பிடித்ததும் போதும். சாதி சண்டைகளுக்கு வாள் பிடித்ததும் போதும். இனி தமிழினத்தின் தன்னிகரற்ற மார்க்கமான சமரச சுத்த சன்மார்க்கத்தில் இணைவோம். தமிழையும் , தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ் இனத்தையும் காப்போம். 


உலகிற்கு ஒளிகொடுக்க ஞாயிறும் , திங்களும் இருப்பதைப் போல, தமிழர்களின் வாழ்க்கைக்கு ஒளி கொடுக்க வள்ளுவரும் , வள்ளலாரும் போதும். இறக்குமதி கடவுள்களும், ஞானிகளும் இனி இங்கு தேவையில்லை. 


தன்மான உணர்வும்,  

தற்சார்பு வாழ்வுமே தமிழர்களின் அடையாளம் ! 

அதை அடையவே  

வள்ளுவரும் , வள்ளலாரும் வழிகாட்டினார்கள். 


" தமிழர்க்கு இருவர் 

வள்ளுவரும் , வள்ளலாரும்! 

தமிழர்க்கு இருகண்கள் 

குறட்பாவும்,  அருட்பாவும்! 

தமிழா!

இனி உன் வாழ்க்கை அமையட்டும் 

வள்ளுவர் மொழியில்

வள்ளலார் வழியில்!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .



கருத்துரையிடுக

0 கருத்துகள்