Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " உடுக்கை இழந்தவன் கைபோல "

 



அழகனும், அமுதனும் நண்பர்கள்.  ஒருநாள் இருவரும் காட்டு வழியாக வெளியூர் சென்றார்கள். போகிற வழியில் ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்தார்கள். சற்று தூரத்தில் கரடி வருவதைப் பார்த்தார்கள். கரடியிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தார்கள். 


அழகனுக்கு நன்றாக மரம் ஏறத் தெரியும். ஆனால் அமுதனுக்கு மரம் ஏறத் தெரியாது. அழகனோ  தான் மட்டும்  தப்பித்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு வேகமாக மரத்தில் ஏறிக் கொண்டான். 


மரம் ஏறத் தெரியாத அமுதனோ எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தான். அவன் தந்திரமாய் செத்த பிணம்போல் அசைவில்லாமல் படுத்துக் கொண்டான். 


சிறுது நேரம் கழித்து கரடி அவ்வழியே வந்தது. அசைவின்றிப் படுத்துக் கிடந்த அமுதனின் தலை முதல் கால் வரை மோந்து பார்த்தது. அமுதனின்  கன்னத்தைச் சிறிது நேரம் நாக்கால் வருடியது.  எந்த உணர்ச்சியையும் அமுதன் காட்டாமல் இருந்ததால் பிணம் என்று நினைத்துக் கொண்ட கரடி ,  அமுதனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுப் போய்விட்டது. 


கரடி நீண்ட தூரம் சென்ற பிறகு மரத்தில் இருந்த அழகன் கீழே இறங்கி வந்தான். அமுதனைப் பார்த்து " அமுதா! கரடி உன் காது அருகே வந்து என்னவோ சொல்லியது போல் இருந்தது. என்ன சொல்லியது? என்று கேட்டான் அழகன். 


" துன்பம் வருகின்ற காலத்தில் துணைக்கு நிற்காமல் ஓடுகின்ற நண்பனை ஒருபோதும் நம்பாதே " என்று கூறியது என்றான் அமுதன். 


இதைக் கேட்டதும் தன் தவறை உணர்ந்து தலை குனிந்து நின்றான் அழகன். 


எல்லோருக்குமே நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே  நல்ல நண்பர்களாக இருக்கிறார்களா என்பது ஐயமே? துன்ப காலத்தில் துணையாக இருக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். நமக்கு வினையாக இருந்து துன்பத்தை வரவைக்கின்ற நண்பர்களும் இருக்கிறார்கள். 


" உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 

இடுக்கண் களைவதாம் நட்பு.


( குறள் - 788)


பலர் கண்முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல,  தன் நண்பனுக்குத் துன்பம் என்று தெரிந்தவுடன் அவன் அழைக்காமலேயே ஓடிச் சென்று உதவி செய்வதே உண்மையான நட்பு.


" உண்மையான நட்பு எனப்படுவது யாதெனில் 

துன்ப காலத்தில்

ஓடி வருவது.  

ஓடி விடுவது அல்ல!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை.  

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்