Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " கல்லைக் கண்டால் நாயைக் காணோம் "




உண்மையானப் பொருளைப் புரிந்து கொள்ளாதக் காரணத்தால் பல பழமொழிகள் தவறானப் பொருளில் உலா வருகின்றன. அப்படிப்பட்ட பழமொழிகளுள் ஒன்றினை இங்குக் காண்போம்.


" மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை 

ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து 

நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை 

நாய்காணின் கல்காணா வாறு.


( பழமொழி நானூறு - 261) 


நல்வினை என்னும் நற்செயல் செய்ய வேண்டிய ஒன்றாக வகைப்பட்டுக் கிடக்கிறது .அந்த நற்செயல்களை எல்லாம் ஒருவன் இறப்பதற்கு முன்னர் செய்தாக வேண்டும். அதனால் தனக்கு பயன் கிட்டுமா கிட்டாதா என்று ஆராயாமல் அதைச் செய்ய வேண்டும். நோயால் வருந்தும் காலத்தில் அறம் செய்வாரைக் காண முடியாது.  நோய் இல்லாமல் இருக்கும்போதே செய்திருக்கலாமே என்று வருந்துவோரைக் காண்கிறோம். இது எப்படி இருக்கிறது என்றால் , "கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் " என்பது போல இருக்கிறது.  


இவ்வாறாக இப்பழமொழி பல்வேறு இடங்களில் பயன்பட்டு வருகிறது.  ஆனால்  இப்பழமொழியின் முழு வடிவம் இதுவல்ல. அதன் முழு வடிவத்தை இங்குக் காண்போம்.


" கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்.

 நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம் "


வீரக்கல் என்று அழைக்கப்படும் " நடுகல் " வழிபாடுதான் தமிழர்களின் முதல் உருவ வழிபாடு. போர் வீரர்களின் நினைவாக எடுக்கப்படும் அந்த நினைவுக் கல்லில் உள்ள நாயகனின் ( வீரனின்)  உருவம் இருக்கும். அதை வெறும் கல்லாகப் பார்த்தால் அங்கே நாயகனைப் பார்க்க மாட்டீர்கள். கல்லால் செதுக்கப்பட்ட சிலையில் உள்ள  நாயகனைப் பார்த்தால் கல்லைப் பார்க்க மாட்டீர்கள். 


நாயகனைப் பார்ப்பவர்களின் கண்ணுக்குக்  கல் தெரியாது. கல்லைப் பார்ப்பவர்களின் கண்ணுக்கு நாயகனின் உருவம்  தெரியாது. வெறும் கல் மட்டுமே தெரியும். இதில் உள்ள " நாயகன் " என்ற சொல்லே மருவி " நாய் " என்றாகிவிட்டது. 

கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் " என்று பழமொழியும் மாறியது. அதன் பொருளும் மாறியது. 


இனியாவது, 

உண்மையான வடிவம் அறிந்து  

உண்மையானப் பொருள் அறிந்து பழமொழிகளைப் பயன்படுத்துவோம் .


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்