Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " உணவு உண்ணும் முறை "|ஆசாரக்கோவை உணவு உண்ணும் முறை



நம் முன்னோர்கள் இதை இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எல்லாவற்றையும்  முறைப்படுத்தி வைத்தார்கள். அவர்கள் அறிவோடு சொன்னது எல்லாம் இன்றைய அறிவியலோடு ஒத்துப்போகிறது. மண் பாண்டங்களில் சமைத்தார்கள். வாழை இலைகளில் உணவு உண்டார்கள். நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார்கள். இன்று அதையெல்லாம் மறந்தோம்.  வாழ்வில் பாதி காலத்தையும்,  வருமானத்தில் பாதி காசையும் மருத்துவமனைகளில்  செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். 


உணவு நம் உயிரைக் காப்பதால் "உணவே மருந்து " என்றார்கள்.  " உணவே கடவுள் " என்றார்கள். உண்ணும்போது உண்ணும் உணவுக்கு உரிய மரியாதை தரச் சொன்னார்கள். எப்படி உண்ண வேண்டும். எப்படி உண்ணக் கூடாது என்று வரையறை செய்தார்கள். " ஆசாரக்கோவை " என்னும் நூலில் உணவு உண்ணும் முறையைப் பற்றி பல பாடல்களில் பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் இரு பாடல்களை மட்டும் இங்குக் காண்போம்.


" உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்அமர்ந்து,

தூங்கான், துளங்காமை, நன்குஇரீஇ, யாண்டும் 

 பிறிதுயாதும் நோக்கான், உரையான், தொழுதுகொண்டு, 

உண்க , உகாஅமை நன்கு.


( ஆசாரக்கோவை - 20) 


கதிரவன் மேலேறும் திசையான கிழக்குத் திசையை நோக்கியே எப்போதும் உணவு உண்ண வேண்டும். " "கிழக்குத் திசை அமர்ந்து உணவு உண்டால் ஆயுள் பெருகும்" என்பார்கள். ஏன் தெரியுமா? நாம் உண்ணும் உணவின் உற்பத்திக்க்கு காரணமாக இருப்பது கதிரவன்தான் . கதிரவன் ஒளி தந்தால்தான்  உணவுப் பொருட்கள் விளையும். அதனால்தான் பொங்கல் விழாவில் புது அரிசியில் பொங்கல் வைத்து முதலில் கதிரவனுக்குப் படைக்கிறோம். நம் நன்றிக்கடனை வெளிப்படுத்துகிறோம். அதுபோல, ஒவ்வொரு முறையும் நாம் உணவு உண்ணும் போது கதிரவன் மேலேறும் திசையான கிழக்குத் திசை நோக்கி அமர்ந்து கதிரவனுக்கு நன்றி கூறிய பின்னரே உணவு உண்ண வேண்டும். இதை நாம் மறக்கக் கூடாது என்பதற்காகவே கிழக்குத் திசை நோக்கி அமர்ந்து உண்ண சொன்னார்கள். நன்றியோடு இருப்பவர்களுக்குத்தான் நல்ல வாழ்க்கை கிடைக்கும். அவர்கள்தான் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள். அதைத்தான், " கிழக்குத் திசை நோக்கி உணவு உண்டால் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள் " என்று சொல்லி வைத்தார்கள்.


உணவு உண்ணும் போது விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். தூக்க நிலையில் இருக்கக் கூடாது. உணவு உண்ணாமல் சில குழந்தைகள் தூங்கிவிடும். அப்படி தூங்குகின்ற குழந்தைகளை எழுப்பி உணவை ஊட்டக் கூடாது. ஆடாமல் அசையாமல்  இயல்பு நிலையில் இருக்கும் போது உண்ண வேண்டும். அசைந்தாடிக் கொண்டு உண்ணக் கூடாது. 


நன்றாக அமர்ந்து கொண்டு உணவு உண்ண வேண்டும். நடந்து  கொண்டோ, ஆடிக் கொண்டோ, நின்று கொண்டோ உண்ணக் கூடாது.  இப்போதைய காலகட்டத்தில் " விரைவு உணவகம் " " கையேந்தி உணவகம் "  என்ற பெயரில் நின்று கொண்டே உணவு உண்ணும் வழக்கம் உருவாகியுள்ளது. இது உடல்நலத்திற்கு முற்றிலும் கேடானது. 


தொலைக்காட்சி திரைப்படம், அலைபேசி உள்ளிட்டவற்றைப் பார்த்துக் கொண்டு உண்ணக் கூடாது. வேறெதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் உண்ணக் கூடாது. உண்ணும் போது நம் கவனம் உணவில் மட்டுமே இருக்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது. பேசிக் கொண்டே உணவு உண்டால் அந்த உணவு மூச்சுக்குழல் உள்ளே செல்லும் வாய்ப்பு ஏற்படும். அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே, உண்ணும்போது யாரிடமும்  எதுவும் பேசாமல் உண்ண வேண்டும்.


உணவுக்கு உரிய மரியாதை கொடுத்து உண்ண வேண்டும். மற்றவர்கள் மீதுள்ள வெறுப்பை உணவின் மீது காட்டக் கூடாது. உயர்ந்தோரைத் தொழும்போது எவ்வளவு அன்பையும்,  அமைதியையும், அக்கறையையும்  காட்டுவோமோ அதையெல்லாம் உணவின் மீதும் காட்ட வேண்டும். எந்த ஒரு உணவையும் சுவையில்லை என்று சொல்லி புறக்கணிக்கக் கூடாது. நாம் உணவுக்காக காத்திருக்கலாம். ஒருபோதும் உணவு நமக்காகக் காத்திருக்கக் கூடாது. இப்போதெல்லாம் திருமண மண்டபத்தில் நடைபெறும் விருந்துகளில், விருந்தினர் வருவதற்கு முன்பே உணவை வைத்து விடுகிறார்கள். அரைமணி நேரத்திற்கும் மேலாக உணவுக் காத்துக் கொண்டிருக்கும் அவல நிலையைக் காண்கிறோம். இது மாபெரும் குற்றமாகும். 


உணவைச் சிந்தாமல் உண்ண வேண்டும். உயிர்க்கொலையை விட கொடியது "உணவு விரயம் " என்பதை உள்ளத்தில் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு பருக்கையிலும் உழவனின் உழைப்பு உள்ளதை நாம் உணர வேண்டும். அரைகுறையாக உண்டுவிட்டு அதைக் கொட்டக் கூடாது. 


" நொறுங்கத் தின்றால் நூறு வயது " என்பார்கள். அதனால் உணவை நன்றாக மென்று தின்ன வேண்டும். வேகவேகமாக உண்ணக் கூடாது. உணவை முழுங்கக் கூடாது. இயல்பு நிலையில் இருந்து கொண்டு பொறுமையாக உண்ண வேண்டும்.


" கிடந்துண்ணார் ; நின்றுண்ணார் ;  வெள்ளிடையும் உண்ணார் ;

சிறந்து மிகவுண்ணார் ; கட்டில்மேல் உண்ணார் ; 

இறந்தொன்றும் தின்னற்க நின்று. "


( ஆசாரக்கோவை - 23) 


படுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. நின்று கொண்டு உண்ணக் கூடாது. திறந்த வெளியில் உண்ணக் கூடாது. திறந்த வெளியில் உணவு உண்ணும் போது, வீசுகின்ற காற்றில் உள்ள தூசுகளோ, நுண்ணுயிர்களோ உணவில் வந்து விழும். அதனால்தான் திறந்த வெளியில் உண்ணக் கூடாது என்றார்கள். 


பொதுவாகவே வெளி உணவு உடலுக்குக் கேடு என்பார்கள் நம் முன்னோர்கள். வெளி  உணவை ( கடைகளில் வாங்கி) உண்பதும், வெளியில் அமர்ந்து உணவை உண்பதும் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும். பிடித்த உணவு என்பதற்காக அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது. 


கட்டில்மேல் அமர்ந்து உண்ணக் கூடாது. உணவகங்களிலும்,  செல்வந்தர் வீடுகளிலும் நாற்காலிகளில் உணவு உண்ணும் முறை உள்ளது. அது முற்றிலும் தவறான பழக்கமாகும். எப்போதுமே தரையில் அமர்ந்துதான் உண்ண வேண்டும். நெறி இல்லாமல் அளவு கடந்து உண்ணக் கூடாது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த உணவையும் உண்ணக் கூடாது.


மனமகிழ்ச்சியோடு உணவை உண்ண வேண்டும். அதுதான் உடலுக்கு நலம் சேர்க்கும். மனக்கவலையோடு உணவு உண்ணக் கூடாது. அது உடல்நலத்தைப் பாதிக்கும். உணவைச் சமைக்கும் போதும், உணவைப் பரிமாறும் போதும், உணவை உண்ணும் போதும் நற்சிந்தனை இருக்க வேண்டும். அதுதான் நல்ல உணவாக உடலுக்கு அமையும். 

உணவு உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும்,  உணவு உண்டபின் அரைமணி நேரம் பின்பும் நீர் குடிக்கக் கூடாது. அப்படி நீர்  குடித்தால் உணவு செரிமானம் தடைபடும். உணவை உண்பதற்கு முன்பும்,  பின்பும் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும். 


உணவு உண்பதற்கு முன், உணவுப் பொருட்கள் விளைய காரணமாக இருந்த கதிரவனுக்கும் , உணவுப் பொருளை உண்டாக்கிய உழவனுக்கும் , உணவைச் சமைத்தவருக்கும்,  உணவைப் பரிமாறுபவருக்கும் கைகூப்பி  நன்றி சொல்லிவிட்டு உணவை உண்ணுங்கள். எல்லாவற்றிற்கும் நன்றி சொல்வது நம் பண்பாடு அல்லவா?


உணவை  உண்ணும் முன்பு கண்களை மூடி, கைகூப்பி இந்தத் திருக்குறளைக் கூறிவிட்டு உண்ணுங்கள்.


" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. " 


( குறள் - 322) 


கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். 


பசியாற உண்ணும் முன் . 

பசியை ஆற்றிவிட்டு உண்ணுங்கள்.


" அடுத்தவர் பசியை 

ஆற்றிவிட்டு உண்ணுங்கள்!

உங்களுக்குக் கிடைத்த 

அரைவயிறு உணவும்  

அறுசுவை உணவாய்  மாறும்! 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்