Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தேரா மன்னா! செப்புவது உடையேன் "




உயிர்க் கொல்லாமையை உயர்நெறியாகப் போற்றிய ஒரே இனம் நம் தமிழினம். இந்த உலகில்  எவ்வுயிரையும் தன்னுயிராய் எண்ணுபவர்கள் தமிழர்கள் மட்டுமே.


" தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் 

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? 

( சிலப்பதிகாரம்)


நடுவுநிலைமை தவறிய பாண்டிய மன்னனின் வாளுக்குத் தன் கணவனாகிய கோவலனின் உயிர் போனதை எண்ணி வருந்திய கண்ணகி " இந்த ஊரில் தெய்வம் என்ற ஒன்று இருக்கிறதா? எப்படி இருக்கும்? நெறி தவறிய ஊரில் தெய்வம் எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்புகிறாள்.  தன் கணவனைக் கொன்றதற்கே இந்த ஊரில் தெய்வம் இல்லை என்று கண்ணகி சொல்கிறாள் என்றால், கண்ணில் படும் உயிர்களை எல்லாம் கொல்லும் இந்த உலகில் எப்படி தெய்வம் என்ற ஒன்று இருக்க முடியும்?

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? என்று கண்ணகி மதுரை மக்களைப் பார்த்து கேட்பது போல, நாள்தோறும்  கொல்லப்படும் கோடிக்கணக்கான உயிர்கள் இந்த உலகைப் பார்த்து இவ்வாறு கேட்கிறது. 


" தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

வைவாள் தவறும் மக்கள் உலகில்

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?" 


உயிரைக் கொல்லும் "அரம் "இருக்கும் உலகில் உயிரைக் காக்கும் "அறம் " எப்படி இருக்கும்?  "மனிதர்களைப் போலவே மற்ற உயிர்களும் " என்ற அறம் தவறும் உலகில்,  நடுவுநிலைமை இல்லாத உலகில் தெய்வம் என்ற ஒன்று எப்படி இருக்கும்? "உயிர்க்கொலை செய்யாதவனே உண்மையான தெய்வம் ".

உயிர்களைக் கொன்று தின்று வாழும் மனிதர்களைக் கண்டும் காணாமல் இருப்பதை எல்லாம் எப்படி தெய்வம் என்று சொல்ல முடியும்?


தன் கணவனாகிய கோவலன் மீது  பொய்க்குற்றம் சுமத்தி, அவனைக்   கொன்ற பாண்டிய மன்னன்  நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டு பாண்டியனின் அரசவைக்கு சென்றாள் கண்ணகி. அப்போது பாண்டிய மன்னனைப் பார்த்து தான் வாழ்ந்த சோழ நாட்டின் பெருமையைக் கூறும்  பாடலை இங்குக் காண்போம்.


" தேரா மன்னா! செப்புவது உடையேன் ; 

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப,

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்,

வாயில் கடைமணி நடுநா நடுங்க 

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் 

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் 

பெரும்பெயர்ப் புகார்என் பதியே " 

( சிலப்பதிகாரம்)


" ஆராய்ச்சித் திறம்  அற்ற அரசனே! நான்  சொல்வதைக் கேட்பாயாக, இகழ்ச்சியற்ற சிறப்பினை உடைய தேவர்களே வியக்குமாறு தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்கு தன் உடல் தசைகளை அரிந்து துலாத்தட்டில் வைத்து, அது போதவில்லை என்பதை அறிந்து தன்னையே அந்தத் துலாத்தட்டில் நிறுத்தி அந்தப் புறாவின் துன்பத்தை நீக்கிய சிபி என்னும் செங்கோல் மன்னனும்,  தன் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்துக் கொண்டிருந்த ஒரு பசுவின் துன்பத்தைக் கேட்டறிந்து, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக்  கொன்று நீதியை நிலைநாட்டிய மனுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரமே என்னுடைய ஊராகும் " என்று தன் நாட்டை அறிமுகம் செய்கிறாள் கண்ணகி. 


கண்ணகி பாண்டிய மன்னனைப் பார்த்துச்  சொன்ன  அந்தப் பாடலைக் கொஞ்சம் மாற்றி ஒட்டுமொத்த தமிழினமும் இந்தப் பாரினைப் பார்த்துச் சொல்வதுபோல் இங்குக் காண்போம்.


" தேரா மக்களே! செப்புவது உடையேன் ; 

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப ,

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் , அன்றியும்,

வாயில் கடைமணி நடுநா நடுங்க ,

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் 

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் 

" பெரும்பெயர்த் தமிழ்நாடு என்நாடே " 


" ஆராய்ச்சித் திறம் அற்ற உலக மக்களே! நாங்கள் சொல்வதைக் கேட்பீர்களாக, 

ஒரு புறாவுக்காக தன் உடல் தசைகளை அறுத்துக் கொடுத்தான். அது போதவில்லை என்று அறிந்து தன்னையே துலாக்கோலில் நிறுத்திய சோழன் சிபி சக்கரவர்த்தியும் ,  ஒரு கன்றின் உயிருக்கு ஈடாக தன் மகனின் உயிரைக் கொன்று , " நீதி"  என்பது இதுதான் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மனுநீதிச் சோழனும் , தங்கள் வாழ்க்கையின் மூலமாக 

"  உயர்திணையும் , அஃறிணையும் உணர்வால் உருவத்தால் வேறுபட்டாலும் உயிரால் அனைவரும் சமமே " என்பதை எடுத்துக் காட்டினார்கள்.


 "இவர்களைப் போன்ற  நல்லோர் பலர் வாழ்ந்த  பெரும் புகழ் உடைய நாடு எங்கள் தமிழ்நாடு .   எவ்வுயிரையும் தன்னுயிராய் நேசித்த உயர்குடியில் பிறந்த தமிழர்கள் நாங்கள் என்று பெருமையோடு இந்த  உலகிற்கு நம்மை நாமே இனி அறிமுகம் செய்து கொள்வோம்.


உயிர்க்கொலை செய்யாதவர்களே உண்மையான தமிழர்கள். உண்மையான மனிதர்கள்.


" தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் 

எங்ஙனம் ஆளும் அருள். " 

( குறள் - 251) 


தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர்  உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?

எவ்வாறு அறிவுடையவனாக இருக்க முடியும்?

இதையெல்லாம் தடுத்து நிறுத்தாதவன் எல்லாம் எப்படி ஆண்டவனாக இருக்க முடியும்?


" கொன்று தின்பது 

விலங்கின் குணம்!

கொடுத்து மகிழ்வது 

மனிதனின் குணம்!

இங்கு 

யார் விலங்குகள்?

யார் மனிதர்கள்?


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்