Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்!" நாராய் நாராய் செங்கால் நாராய் "

 




சத்திமுத்தப் புலவர்  தன் வறுமையைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு , பாண்டிய மன்னன் மாறன் வழுதியைச்  சந்திக்கச் சென்றார். பாண்டியன் தமிழ்மீது பற்று கொண்டவன் . தன் தமிழ் புலமைக்கேற்ற பரிசு தந்து தன் வறுமையைப் போக்குவான் என்று எண்ணினார் . நெடுந்தூரம் பயணம் செய்து மதுரை சென்றார். 


மன்னனைச் சந்திப்பதற்குள் இருண்டு விட்டதால்   வழியில் இருந்த சத்திரத்தில் தங்குகிறார். உடம்பை மூட போர்வையின்றிக் குளிரால் வாடினார். தம் நிலையையும், தன் குடும்ப நிலையையும் எண்ணி வருந்தினார்.  வறுமையும், வயிற்றுப் பசியும் வாட்டியதால் உடல் மெலிந்த தோற்றத்தில் இருந்த அந்த ஏழைப் புலவர், கவலையோடும், கண்ணீரோடும் வானத்தைப் பார்க்கிறார். அப்போது வானத்தில் நாரைகள் பறந்து செல்கின்றன. வானத்தில் பறந்து செல்லும் நாரைகளிடம் தன் மனக்குமுறலை எல்லாம் சொல்லி  தன் மனைவிக்குத் தூது அனுப்புகிறார். அந்தப் பாடலை இங்குக் காண்போம்.


" நாராய் நாராய் செங்கால் நாராய் 

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 

பவளக் கூர்வாய் செங்கால் நாராய் 

நீயும்நின் பெடையும் தென்திசைக் குமரியாடி 

வடதிசைக்கு ஏகுவீராயின் 

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி 

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி 

பாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் 

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு  மெய்யது பொத்தி 

காலது கொண்டு மேலது தழீஇப் 

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் 

 ஏழையாளனைக் கண்டனம் எனுமே "

( நாரை விடு தூது)


நாரையே நாரையே சிவந்த கால்களையுடைய நாரையே,  நன்கு முற்றிய பனங்கிழங்கைப் போல் வாய்பிளந்த நாரையே, பவளம்போல் சிவந்த கூர்மையான அலகைக் கொண்ட செங்கால் நாரையே .

நீயும், உன் மனைவியும் தென்திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடியபின் வடக்கே சென்றால் , எங்கள் ஊர் சத்தி முற்றம் வரும். அந்த  ஊரில் உள்ள குளத்தில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள்.


 அங்கே என் மனைவியைப் பார்த்து  ஒரு செய்தி சொல்லுங்கள். எங்கள் வீட்டின் சுவர் மழையில் நனைந்து சிதைந்திருக்கும். அங்கே ஓர் ஏழைப்பெண், பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என்று ஏக்கத்தோடு காத்திருப்பாள். தலைவன் வரும் நற்செய்தியை அறிவிக்கும் முகமாக வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லி பலன் சொல்லுமா?  என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். அவள்தான் என் மனைவி. 


அவளை நீங்கள் பார்த்தவுடன் "எங்கள் தலைவனாகிய பாண்டிய மன்னன் மாறன் வழுதி  ஆளும் மதுரையில்,  கடுமையான வாடைக்காற்று,  குளிர் அடிக்கிறது. அங்கே உள்ள ஒரு சத்திரத்தின் மூலையில் சரியான ஆடைகூட இல்லாமல் நடுங்கியபடி,  கைகளைக் கொண்டு  உடம்பைப் பொத்திக் கொண்டும், கால்களைக் கொண்டு உடலைத் தழுவிக் கொண்டும்,, பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பைப்போல தன் உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனைக் கண்டோம் " என்று சொல்லுங்கள் .


இப்படி வானில் பறந்து  செல்லும் நாரைகளைப் பார்த்துத் தன் நிலைமையை எடுத்துக் கூறியதை,  நகர சோதனைக்காக அவ்வழியே சென்ற பாண்டிய மன்னன் கேட்கிறான். இவ்வளவு காலமாக நாரையின் மூக்கிற்குப் பல அறிஞர்களிடமும், நூல்களிடத்திலும் உவமை காணாது தேடிக் கொண்டிருந்த பாண்டிய மன்னனுக்கு, பனங்கிழங்கின் உவமையைக் கேட்டு மகிழ்ந்தான். உடனே தன்மீது போர்த்தியிருந்த விலைமதிப்பற்ற மேலாடையை அப்புலவர் மீது போர்த்துவிட்டுச் சென்றான் பாண்டிய மன்னன். 


இரக்கப்பட்டு யாரோ தன்மீது போர்வை போர்த்திவிட்டுச் சென்றதாக நினைத்துக் கொண்டு  உறங்கிவிடுகிறார் சத்திமுத்தப் புலவர். பாண்டிய மன்னன் தன் அரசவைக்குச் சென்றதும் உரிய  மரியாதையுடன் அப்புலவரை அழைத்து வரும்படி தன் காவலர்களுக்கு ஆணை பிறப்பித்தான். அரசவைக்கு அழைத்து வரப்பட்ட சத்திமுத்தப் புலவரின் புலமையைப் பாராட்டிப் பேசினான் பாண்டிய மன்னன். அளவற்ற பரிசுகளை வழங்கினான். தன் வறுமையைப் போக்கிய பாண்டிய மன்னனை வணங்கி நன்றி கூறி விடை பெற்றார் சத்திமுத்தப் புலவர்.


பாண்டியன் மாறன் வழுதியிடம் பரிசு பெற்ற பின்னர் தன் வாழ்க்கை நிலை எவ்வாறு உயர்வடைந்தது என்பதை இன்னொரு பாடலில் விளக்குகிறார் சத்திமுத்தப் புலவர்.


" வெறும்புற் கையும்அரி தாம்கிள்ளை சோறும்என் வீட்டில் வரும்  

எறும்புக்கும் ஆர்ப்பதம் இல்லை முன்னாள் என்னரும் கலியாம் 

குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின் 

தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமல் தெவிட்டியதே " 


" பாண்டியன் மாறன் வழுதி தனக்கு பரிசு கொடுத்து ஆதரிப்பதற்கு முன், என் வீட்டில்  வெறுஞ்சோறு பெறுவதுகூட அரிதாகும்.  கிளியும்  பசிப்பிணியால் வாடி மிகவும் தளர்வினை அடையும். எறும்புக்குக் கூட சோறு கிடைக்காது. அத்தகைய வறுமையின் பிடியில் இருந்தேன். எனக்குக் குடிதாங்கியாய் இருந்த பாண்டியன் மாறன் வழுதியிடம் பரிசு பெற்ற பின்னர் ,  கொல்லும் செயலினை உடைத்தான புலியையும் கொல்லா நின்ற யானையானது  வாய் கொள்ளாமல் கரும்புக் கழிகளை  உமிழ்ந்து சிதறியது போல தன்வாழ்வில் செல்வநிலை உயர்ந்துவிட்டதாக நன்றியுணர்வோடு பாடியுள்ளார் சத்திமுத்தப் புலவர். 


"பகலவனைக் கண்ட பனி போல " பாண்டியன் மாறன் வழுதியைக் கண்டதும் சத்திமுத்தப் புலவரின் வறுமை ஓடியது. 


தமிழ்ப்புலவர்களின் வாழ்க்கையில் வறுமை என்னவோ முயல் வேகத்தில் வரும்!

பெருமையோ  ஆமை வேகத்தில் வரும்!

இறுதியில் என்னவோ பெருமை என்ற ஆமையே வெற்றி பெறுகிறது!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்