Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்!தனித்தமிழ் இயக்கம்

 


சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் பணிக்கான நேர்காணல் ஒன்று  பரிதிமாற் கலைஞர் தலைமையில்  நடைபெற்றது. அந்த நேர்காணலில் " குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு  சொல்லுங்கள் " என்று பரிதிமாற் கலைஞர் கேட்டார். அந்த நேர்காணலில் பங்கேற்ற   வேதாசலம் என்பவர் 

 " அஃது எனக்கு தெரியாது " என்றார்.  "நீங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள் " என்றார் பரிதிமாற் கலைஞர். கேட்ட கேள்விக்கு  " தெரியாது " என்று பதில் சொல்பவரை எப்படி தேர்வு செய்யலாம்?  "தமிழ் உருப்பட்டாப் போலத்தான் " என்று மற்ற உறுப்பினர்கள் கூறினர் .


"அஃது" என்பது ஆய்தத்தொடர் குற்றியலுகரம்.

"எனக்கு " என்பது வன்தொடர் குற்றியலுகரம்.

" தெரியாது " என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் " என்று விளக்கமளித்து,  சரியாக விடையளித்த வேதாசலத்திற்கு வேலையும் அளித்தார் பரிதிமாற் கலைஞர்.


"தமிழ் உருப்பட்டாப் போலத்தான் " என்று யாரைப் பார்த்துச் சொன்னார்களோ, அவரால்தான்  பின்னாளில் " தனித்தமிழ் இயக்கம் " தோன்றி " தமிழே  உருப்பட்டது " . பரிதிமாற் கலைஞர் மீது கொண்ட நட்பின் காரணமாக  தனித்தமிழின்பால் பற்று ஏற்பட்டு, வேதாசலம் என்ற  தன் பெயரை மறைமலையடிகள்  ( வேதம் - மறை, அசலம் - மலை , சுவாமிகள் - அடிகள் ) என்று தனித்தமிழில் மாற்றிக் கொண்டார். இப்படித்தான்  'வேதாசலம் ' என்பவர் " மறைமலையடிகளாய் " உருவானார்.


" பெற்றதாய்தனை மகமறந்தாலும் 

பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்; 

 உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 

உயிரைமேவிய உடல் மறந்தாலும் ; 

கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்

கண்கள்  நின்றுஇமைப்பது மறந்தாலும் ; 

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் 

நமச்சிவாயத்தை நான் மறவேனே " 

( திருவருட்பா )


இந்த இனிமையான பாடலை மறைமலையடிகளின் 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை பாடினாள். கேட்டுக் கொண்டிருந்த தந்தை மறைமலையடிகள் தன் மகளைப் பார்த்து,  " நீலா, இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு வடமொழிச் சொல் உள்ளது.  " உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் " என்ற இடத்தில் " தேகம் " என்பதை நீக்கிவிட்டு, உடம்பாகிய யாக்கையை உயிர் மறந்தாலும் " என்று மாற்றினால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள்  கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது " என்றார்.


"அப்படியானால் இனிநாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும் " என்று மகள் நீலாம்பிகை சொன்னாள். சிறுமியாக இருந்தாலும் அவளது பேச்சு மறைமலையடிகளைச் சிந்திக்க வைத்தது. அன்றுமுதல் " தனித்தமிழ் இயக்கத்துக்கான " விதையை மண்ணில் விதைத்தார் மறைமலையடிகள்.


"ஆங்கிலமும் , வடமொழியும் கட்டாயம் படிக்க வேண்டும் . தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்றால் போதும்"  என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது  அதை எதிர்த்துத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் துறந்தார். பிறமொழிச் சொற்கள் தமிழில் விரவிக் கிடந்ததைக் கண்டு வருந்திய மறைமலையடிகள் , அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார் . வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்று எண்ணினார். அதனால் 1916 ஆம் ஆண்டு " தனித்தமிழ் இயக்கத்தைத் " தொடங்கினார்.


" தனித்தமிழ் இயக்கம் " என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் பேசுவதும், எழுதுவதும் ஆகும். தமிழ் மொழி இயற்கையாகவே தனித்து இயங்கக்கூடியது. அதற்குப் பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பதே  இந்த இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இடைக்காலத்தில் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு ஒன்று தோன்றியது. அது மணிப்பவளம் எழுத்துமுறை  ( மணிப்பிரவாளம்)  எனப்படும். மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்றும்,  வடசொல் ஒன்றென அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவதே " மணிப்பவளம் " என்னும் கலப்படத் தமிழ் நடையாகும். இது தமிழுக்குப் பெருந்தீமை ஏற்படுத்தும் என்பதை  எல்லோர்க்கும் எடுத்துச் சொல்வதே " தனித்தமிழ் இயக்கம் " ஆகும்.


" எல்லா உறுப்புகளும்  அமைந்த அழகான ஓர் உடம்பில்  சில உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து, அவற்றை அதன்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாக இருக்கிறது , தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது " என்று தனித்தமிழுக்கு விளக்கம் அளித்தார் மறைமலையடிகள்.


" என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்,  ஒருவர் தமிழின் சுவையை அறியலாம் " என்று துணிச்சலாகச் சொன்னவர் மறைமலையடிகள். பிறமொழிகள் மீதான வெறுப்பால் , அறியாமையால் உருவானது அல்ல , அவருடைய "தனித்தமிழ் இயக்கம் ". தமிழ்மீது அவர்கொண்ட தணியாதக் காதலால் மலர்ந்ததே " தனித்தமிழ் இயக்கம் " 


தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கியபின் தன் பெயரையும், தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரையும் தனித்தமிழில் மாற்றினார். அவரைப் பின்பற்றியே தமிழ்நாட்டில் பலரும் தங்கள் பெயரைத் தனித்தமிழில் சூட்டிக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் வழக்கில் இருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்து போயின. தமிழர்த் திருமண முறை, திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் நான்மறை முதலியக் கோட்பாடுகள் தமிழ் நிலத்தில் முதன்முதலில் அவரால் அறிமுகப்படுத்தப் பட்டன. மரக்கறி ( சைவம்) உணவுமுறையே "தமிழர் உணவுமுறை " என்று வலியுறுத்தினார் ." தனித்தமிழ் இயக்கத்தால்தான் " தமிழ்  இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இல்லையேல் நம் தமிழை ஆவணக் காப்பகத்தில்தான் தேடி அலைந்திருப்போம்.


" தனிப்புகழோடு தமிழ் விளங்கத் 

தனித்தமிழைக் காப்போம் " 


"தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை " மறைமலையடிகள் பிறந்தநாள் இன்று.


இவண் 

ஆதி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்