Ad Code

Ticker

6/recent/ticker-posts

மூன்றாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும், மூன்றாம் உலகப்போர் ஒன்று நடந்தது என்றால்.. நம்புவீர்களா? ஆம் அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே கி.பி 1955 முதல் 1975 வரை 20 ஆண்டுகளாக நடைபெற்ற போரை வரலாற்றாய்வாளர்கள் மூன்றாவது உலக யுத்தம் என்றே வர்ணிக்கிறார்கள்..இதற்கான காரணம், போர் நடைபெற்ற விதம், விளைவுகள் என பார்க்கலாம்.. 

 கைமாறி..கைமாறி வந்த தேசம்; 

காலனி ஆதிக்கம் என்றதும் நமக்கு நினைவில் வருவது இங்கிலாந்து மட்டுமே.. ஆனால் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல்..காலனி நாடுகளை காலணியாக நினைத்து நசுக்கிய தேசம் பிரான்ஸ்..1800 வரை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து, பின் 1858 ல் 3 ம் நெப்போலியனால் கைப்பற்றப்பட்ட இந்தோசீனா ( வியட்நாம், லாவோஸ், கம்போடியா, ) இரண்டாம் உலகப்போர் துவக்கம் வரை பிரான்ஸின் அராஜகத்தால் சிதைந்து போய் இருந்தது.. முற்றிலும் வளமான நிலம்.அரிசி, தேக்கு, ரப்பர், தகரம், சோளம், நறுமணப் பொருட்கள், அப்பாவி விவசாயிகள், எட்டப்பன்கள் என காலனியாதிக்கத்திற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருந்தது. பிரான்ஸ் தான் முன்னெடுக்கும் கட்டுமானப்பணிகளுக்கு.. அழைத்துச் செல்லப்படும் மக்களுக்கு அது ஒரு வழிப்பாதையாகிப் போனது.. சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை..என்ன ஆனார்கள் என்று கேள்வி கேள்வியாகவே வலம் வந்தது.. இந்த நிலையில்.. நமக்கு எப்படி ஒரு மகாத்மா காந்தியோ, அது போல வியட்நாமை வழிநடத்த வந்த ஒரு தலைவன் ஹோ சி மின்.. இது குறித்து கேள்வி எழுப்பிய இவரை தேசத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக மக்களுக்கு எதிராக இவரை சுட்டிக் காட்டி , கைது செய்ய முயற்சி செய்யவே , நாட்டைவிட்டு வெளியேறி, கப்பலில் சமையல் காரணமாக பணிபுரிய, பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கூடவே அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த சுதந்திரமான வாழ்க்கையை கண்டு, மனம் வெதும்பினார். தனது நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த நிலை? ..நம் நிலத்திற்கு சுதந்திரம் தர இவர்கள் யார்? தனது நாட்டிற்கு மீண்டும் திரும்பி, மக்களிடையே விடுதலையின் முக்கியத்துவம், ஆதிக்க சக்திகளின் நாடுகளில் சுதந்திரமான மக்களது வாழ்க்கை . குறித்து பரப்புரையாற்றினார். அவரது பேச்சில் கவரப்பட்டு சாதாரண விவசாயிகள் கூட சாரை சாரையாக வந்து இவரது புரட்சி படையில் இணைந்தனர்..

 


 உன்னை நம்பினோர் வாழ்வதில்லை : 
 
1945 ஜப்பான் மீது இரண்டு அணு குண்டுகளைப் போட்டு, அதன் ஆட்டத்தை முடித்து வைத்து, தனது ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா. ஜப்பான் தோல்வி அடைந்ததும்.. வியட்நாம் சுதந்திர கொண்டாட்டத்தை ஆரம்பித்தது.. அதெப்படி? ??அதுவரை உண்டு கொழுத்த பிரான்ஸ்... படைகளை அனுப்பி, தனது ஆதிக்கத்தை மீட்டெடுக்க ஆரம்பித்தது..கோசிமின் அமெரிக்காவிடம் உதவி கோரினார். அமெரிக்கா கள்ளத்தனமாக மௌனம் காத்தது. கம்யூனிசத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால்.. அதன் ஆதரவாளர் ஹோசிமினுக்கு எப்படி உதவுவது? அதுவும் நண்பன் பிரான்சுக்கு எதிராக?? இங்கிலாந்துக்கு எதிரான சுதந்திர போரில் தனக்கு உதவியதோடு, மிகப்பெரிய சுதந்திர தேவி சிலையை பரிசளித்தவனாயிற்றே!!! வாக்கு கொடுத்தெல்லாம் செல்லாது. செல்லாது. சுதந்திரமாவது ஒன்னாவது..இது மாதிரி எத்தனை நாடுகளுக்கு எங்கள் அணியில் வாக்கு கொடுத்திருக்கிறோம்..( நம் இந்தியாவும் தான்) அதெல்லாம் நடக்கிற காரியமா??


 வியட்நாம் படைகள் நடத்திய மூர்க்கத்தனமான கொரில்லா யுத்தத்தில் பிரான்ஸ் தோல்வியை ஒப்புக் கொண்டது. 1954 ல் ஜெனிவா ஒப்பந்தத்தில் , ஏகாதிபத்திய நாடுகளின் தந்திரத்தால் வியட்நாம் இரண்டாக பிரிக்கப்பட்டது.. வட வியட்நாம் ஹோசிமின் கையில் வந்தது.. தென் பகுதி?? தனக்கு தலையாட்டும் ஒரு பொம்மை.பாவோ டாய்.. அவருக்கு உதவ பிரெஞ்சு, அமெரிக்க ராணுவம்.. எப்படியோ பாதி வியட்நாமில் இனி கம்யூனிசம் வளராது. வடக்கு வியட்நாம்?? படிப்படியாக.. ஒடுக்கி விடலாம்.. நீயா ?நானா? பார்க்கலாமா?: இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் விஸ்வரூபம் எடுத்ததை , அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வேறு வழியில்லாமல் ஹிட்லருக்காக ஏற்றுக் கொண்டனர். தனக்கு ஒரு மிகப்பெரிய எதிரி உருவாகியிருந்ததை அமெரிக்கா உணர்ந்திருந்தது..கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளில் எல்லாம், முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சி வெடித்திருந்த நேரம் அது. நேரடியாக ரஷ்யாவுடன் மோதுவதென்பது, முட்டாள் தனமானது. எனவே கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்ட அல்லது ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகளை, அழித்தொழிக்க வேண்டும். வடக்கு வாழ்கிறது: ஹோசிமினின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் , நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, வடக்கு வியட்நாம் மக்களை நிம்மதியான சுதந்திர காற்றை சுவாசிக்கும் படி செய்தார். தெற்கு வியட்நாமில் எழுதப்படாத ராணுவ ஆட்சி. எந்த வித நன்மைகளும் மக்களுக்கு கிடைக்காமல், அமெரிக்கா , பிரான்ஸ் பார்த்துக் கொள்ள, மக்களது ஆசை , வட வியட்நாமுடன் தங்களை இணைத்துக் கொண்டு ஹோசிமின் ஆட்சியின் கீழ் வாழ வேண்டும்.. திரள் திரளாக மக்கள் ஹோசிமின் படையில் இணைய ஆரம்பித்தனர். அனைவருக்கும் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. எப்படியாவது. இரு நாடுகளையும் ஒன்றாக இணைதது, முழு வியட்நாமாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் .. என்று முடிவெடுத்தால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது..வட வியட்நாமுக்கு ரஷ்யா , சீனா உதவ, தென் வியட்நாமுக்கு அமெரிக்கா, அதன் எடுபிடிகள் தங்கள் ராணுவத்தை அனுப்பி வைத்தன.
 

 

 அண்டர் கிரவுண்ட் அட்டாக்

 சிறு நாடு தானே!! ஊதி விடலாம் என்று தவறான கணக்கை போட்டு வைத்திருந்தது அமெரிக்கா. ஹோசிமினின் படைகள் கொரில்லா யுத்தத்தை..அதுவரை உலகம் பார்த்திராத வகையில் நடத்தினர்.. மறைந்திருந்து தாக்குதல்.. எங்கே இருந்து தாக்குதல் நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அமெரிக்க ராணுவம் திணறியது.. அடர்ந்த காடுகளும் வயல்களும் நிறைந்த வளமான பூமி.. இந்த காடுகளுக்குள் பூமியின் அடியில் சுரங்கங்கள்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு மற்றும் அனைத்து வசதிகளும் நிரம்பி கிட்டத்தட்ட 400 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்தன. வடக்கு தெற்கு என பாகுபாடின்றி மக்கள் படை இதில் மறைந்து, எதிரி நாட்டு ராணுவத்தை நிலை குலைந்து போகச் செய்தனர். ஜப்பானின் இரு இடங்களில் போடப்பட்ட அணுகுண்டுகள் அமெரிக்காவின் கைங்கரியம் என்று தெரிந்தும், சிறிதும் பயமின்றி நடைபெற்ற யுத்தம் அது. 
 
கென்னடி வரார்.. பராக்: 
 
முடிவுக்கு வர இயலாது நீண்ட யுத்தம்..1960 ல் கென்னடி அமெரிக்க அதிபராகியிருந்தார்.. இவரது காலத்தில் தான் பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது.. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ விடம் அடைந்த தோல்வி..அதோடு கியூபாவில் ரஷ்ய ஏவுகணை தளத்தை அகற்ற ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்று வந்ததில் இருந்து படிப்படியாக தன் பெயரை பங்க்சர் ஆக்கி வைத்திருந்தார். எனவே இதனை ஈடுகட்ட வியட்நாமில் யுத்தத்தை தீவிரப்படுத்த ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1963 ல் படுகொலை செய்யப் பட்டார். அமெரிக்க படையினர் ஆயிரக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டனர்..எனவே அமெரிக்கா தன் நாட்டு இளைஞர்களை வியட்நாம் போரில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தியது.. அவர்களில் ஒருவர் தி கிரேட் முகமது அலி.. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்க்கெதிரான படுகொலைகள்,தாக்குதல்கள், அடக்கு முறைகள் பதிந்திருந்த காலம் அது. மிகப்பெரிய கூட்டத்தில் முகமது அலி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அறைகூவல் விடுத்தார்."வியட்நாமைச் சேர்ந்த எவரும் என்னை கறுப்பினத்தவன் என்று கூறி பாரபட்சமாக நடத்தியதில்லை. அவர்களோடு எனக்கு எந்த முரண்பாடும் இல்லாத போது, நான் ஏன் அவர்களை எதிர்த்து சண்டை போட வேண்டும். அது மட்டுமல்ல போர் நான் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்திற்கு எதிரானது" இதற்காக 5 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 
 

 
 
 
 நிலத்தடி சுரங்கங்களில் மறைந்திருந்த ( வியட் காங்) கொரில்லா வீரர்களும், அவர்கள் மறைந்திருக்கும் சுரங்க வழிகளும் காடுகள் முழுவதும் சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் பரவியிருந்தது.. இக்காடுகளையும் வயல் வெளிகளையும் சீரழித்து, மிகப் பெரிய உளவியல் ரீதியான தாக்குதலைத் தொடுக்க முடிவெடுத்த அமெரிக்கா, அதற்காக தேர்ந்தெடுத்த ரசாயனம் ஏஜென்ட் ஆரஞ்சு. பயிர்களை அளிக்கக் கூடிய வீரியமிக்க கொடிய ரசாயனம்..2,4,5-T மற்றும் 2,4-D ( டைகுளோரோ பெனாக்ஸியாசெடிக் அமிலம், ட்ரைகுளோரோ) இரண்டையும் சம அளவில் கலந்தால் கிடைப்பது. அதிக டையாக்சினை உற்பத்தி செய்யக் கூடியது..பல ஆண்டுகள் நீடித்து பாதிப்பை தரக் கூடியது. 1961 முதல் 1971 வரை சுமார் 20 மில்லியன் காலன்.. காடுகளில், வயல் வெளிகளில் விமானங்கள் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.. நிலம், நீர் நிலைகள், ஆறுகள் என அனைத்திலும் அடியில் படிந்து விஷமாகியது. இவற்றை உறைவிடமாகக் கொண்ட பறவைகள், மீன்கள், விலங்குகள் லட்சக்கணக்கில் உயிரிழந்தன.. இதில் கலந்திருக்கும் டிஃபோலியண்ட் தாவர இலைகளை சுத்தமாக உதிர்த்து விடும் தன்மை கொண்டது. சுமார் 4 லட்சம் மக்கள் உயிரிந்தனர்.. உண்ணும் உணவு, குடிக்கும் நீர் அனைத்தும் விஷம். வேறு வழியில்லாமல் இதை உண்டதால் 2 லட்சம் மக்கள் பாதிப்பிலிருந்து நீண்ட காலம் வெளியேறவில்லை. சுமார் 5 லட்சம் குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறந்தனர். இந்த டையாக்சின் உடலுக்குள் சென்றதால், புற்றுநோய், தோல் நோய்கள், கருச்சிதைவு, அசாதாரணமான கருவளர்ச்சி, ஹார்மோன் பிரச்னை, தசை செயலிழப்பு என ஒரு நாட்டையே இடுகாடாக்கி மண்ணில் புதைத்தது.. சுமார் 4.5 மில்லியன் ஏக்கர் பாழ் நிலமாக மாறியது. ஃபீனிக்ஸ் புரோகிராம் 1968 ல் ஒவ்வொரு கிராமங்களிலும் அமெரிக்க ராணுவம்..நுழைந்து அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்தது. இதில் மை லாய் என்ற இடத்தில் மட்டும் விசாரணை இன்றி 400 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
 நாசகார நாபாம்: 
 
 இத்தனையும் அழித்த பின்னும் 1972 ம் ஆண்டு விமானங்கள் மூலம் நாபாம் என்ற ஒருவகை பெட்ரோலிய குண்டுகளை பல இடங்களில் வீசியது. நாப்தெனிக் அமிலம், அலுமினியம் மற்றும் சில வகை அமிலங்கள் கலந்து தயாரிக்கப்படும் இந்த வகை குண்டுகள், வெடித்து சிதறும் போது, எரிந்து கொண்டே ஒரு வகை ஜெல் போல உடலில் விழுந்து, ஒட்டி எரிந்து, உடல் தோல் மற்றும் திசுக்களை வெடித்து எரியச் செய்யக்கூடியது.. இதில் தரங் பாங் என்ற கிராமத்தில் தீக்குண்டுகளால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி ( கிம் ஃபுக்) பயந்து அலறிக்கொண்டே ஓடிவந்ததை , நிக் யுட் என்ற புகைப்பட கலைஞர் படம் எடுத்து வெளியிட்டது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் இதற்கு எதிராக மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் ஒன்று திரண்டு கண்டனம் எழுப்பினர். ஒரு சிறிய நாட்டை காரணமே இல்லாமல் கொடுமைப் படுத்துவதா?? .. வேறு வழியில்லாமல் அமெரிக்கா தனது படைகளை விலக்கி கொள்வதாக அறிவித்தது. 1975 ல் மிகப்பெரிய தோல்வியுடன் முழுவதுமாக வெளியேறியது.. இப்போரில் சுமார் 38 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் மக்கள் காயமடைந்தனர். அமெரிக்க படையினர் 58000 பேர் உயிரிழந்தனர். ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களைக் கொன்ற எண்ணிக்கை தான் இது.. ஆனாலும் ஹிட்லரை சர்வாதிகாரி, கொடுங்கோலன் என்று சித்தரிக்கும் மேற்கு ஊடகங்களும், அரசியல்வாதிகளும்..இதை கொஞ்சம்கூட கூச்சமின்றி.. மறைத்து விடுகின்றனர்..இதே குறித்த விபரங்களை தேடினால்.. உங்கள் பகுதியில் நீங்கள் தேடுவது கிடைக்காது.. வாழ்க பணநாயகம்..முதலாளித்துவம்.. எந்த கம்யூனிசம் பரவக்கூடாதென்று அமெரிக்கா இந்த நீண்ட போரை நடத்தியதோ , அது நிறைவேறாமல் போனதோடு ஒன்றிணைந்த வியட்நாம், லாவோஸ் கம்போடியா என அனைத்து பகுதிகளிலும் அது ஆழமாக வேரூன்றி வளர ஆரம்பித்தது..இதுவரை அமெரிக்கா நடத்திய போர்களிலேயே , வியட்நாமில் தான் மிக கேவலமாக தோல்வியைத் தழுவி வெளியேறியது. ஒரு நாட்டின் வெற்றி என்பது ராணுவ வலிமையை விட, மக்களின் வலிமையில் தான் என்பதை அமெரிக்கா உணர்ந்திருக்கவில்லை என்பதை இன்று வரை நிரூபித்துக் கொண்டிருப்பதே நிஜம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்