ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையால் மாணவர்களின் கல்வி திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மாணவர்களிடம் கல்வி திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் மாணவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. பள்ளி முடிந்த பின்பு பள்ளி வளாகத்தில் நுழைந்து கட்டிடங்களை சேதப்படுத்துவது, ஆபாச வார்த்தைகள் எழுதுவது என ஒழுங்கீனத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்; ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது.
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது. ஆசிரியர்களுக்கு தொந்தரவாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து இருக்கிறோம். வரும் கல்வியாண்டில் நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திய பின் பாடங்கள் நடத்தப்படும் என கூறினார்.
0 கருத்துகள்