தமிழகத்தில் கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை (கி.பி 590-ம் ஆண்டு வரை) ஏறக்குறைய முன்நூறு முதல் நாநூறு ஆண்டுகள் தமிழகத்தின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரை அடக்கியாண்ட களப்பிரர் வரலாறு மிகவும் மர்மமான முறையில் தமிழக வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது தமிழக வரலாற்றின் ஒரு மிகப்பெரிய மர்மமாகும்.
அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எப்படி மூவேந்தர்களையும் வென்றார்கள்? எப்படி ஆண்டார்கள்? என்ற எந்த தகவலும் இல்லாமல் திட்டமிட்டு அவர்களின் வரலாறு அழிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட இந்த முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலான கால வரலாறை இருண்ட காலம் என்று எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் பல தேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள். களப்பிரர்கள் ஆட்சி தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனவும் கூறப்படுகிறது.
இவர்கள் குறிஞ்சித்திணை தமிழின போர்க்குடியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் ஒரு நம்பிக்கை. இவர்கள் கலகம் செய்து ஆட்சியை பிடித்திருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. சங்ககாலம் முடிவுறும் காலகட்டத்தில் இவர்கள் ஆண்டதால் பல சங்க கால நூல்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டுள்ளன. ஐம்பெரும் காப்பியங்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பட்டது என்பதும் ஒரு நம்பிக்கை. சேரநாட்டு பதிற்றுப்பத்து பாடல்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். மேலும் பதிணெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்பதையும் நம்மால் காண முடிகிறது. சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் காணாமல் போனது இவர்களின் தகவல்களை மறைக்கத்தானோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.
இவர்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. சமணத்தையும், சைவத்தையும் ஒரு போல் சிறப்புற வளர்த்திருக்கிறார்கள். (தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் தமிழகத்தின் பௌத்த மற்றும் சமண மதத்தினரால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது)
தமிழகத்தில் தமிழுக்கு தொண்டு செய்த, தமிழ் வளர்த்த, தமிழின போர்குடி மைந்தர்கள் எப்படி அந்நியர்களாக சித்தரிக்கப்பட்டனர்? எப்படி அவர்கள் காலம் இருண்ட காலமானது? ஐம்பெரும் காப்பியங்கள் தந்த ஆட்சி காலம் ஒருபோதும் தமிழர்களின் இருண்ட காலமாக இருக்க முடியாது. எனில், அவர்களின் காலம் யாருக்கு இருண்ட காலம்?
அவர்களை கொடியவர்களாக சித்தரித்தது ஏன்? ஏன் அவர்களின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது? ஏன் அவர்களின் கல்வெட்டுகள் உடைக்கப்பட்டன? ஏன் அவர்கள் கட்டிய புத்தப்பள்ளிகளும், கோவில்களும் பின்னர் அழிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டன? இவை எல்லாமே பெரிய மர்மம் தான்.
Cheran pandian
0 கருத்துகள்