பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலுள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் பிசி, எம்பிசி, சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருப்போருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2021-22ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை நேரில் அணுகியோ விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் மேற்படி 2021-22ஆம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினைப் பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30.11.2021-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண்: 044-28551462″ என்று சொல்லப்பட்டுள்ளது.
0 கருத்துகள்