Ad Code

Ticker

6/recent/ticker-posts

சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை

 


'சங்கராபரணம்' என்ற இசைக்காகவே ஐந்து தேசிய விருதுகளை 1980களில் வாரி குவித்த தெலுங்கு திரைப்படம் சங்கராபரணம். தமிழத்தில் அந்த உன்னதமான இசையின் பெயரால் ஓடக்கூடிய ஆறு சங்கராபரணி.எத்தகைய இசைஅறிவு உடையவர்களாய் இருந்திருந்தால் ஒரு நதிக்கு சங்காரபரணி,பம்பை என்ற இசையின் பெயரை வைத்திருப்பான் தமிழன். ஒரு கல்குதிரையை இசைக்கும் கல்குதிரையாய் சேந்த மங்கலத்தில் மாற்றிப் பார்த்த முகமறியா சிற்பிகள் நிறைந்த பகுதியல்லவா இந்தப் பகுதியிலிருந்து சங்கராபரணி,பம்பை ஆறுமுதல் தென்பெண்ணை,கெடிலம் வரை மறைந்து போன மறந்து போன வரலாற்றை தனது இந்தப் புத்தகத்தின் வழியாக விழுப்புரம் கோ.செங்குட்டுவன் ஒரு யாழை மீட்டி இசைப்பது போல் தொல்லியல் சுவடுகளை படிப்பவர்க்கு விறுவிறுப்பான கதை மொழியில் சுவராசியம் குன்றாமல் சுவையாக எழுதியுள்ளார். 
 



"ஆற்றில்வெள்ளம் வடிவதாகத் தெரியவில்லை.'இனியும் தாமதிக்க வேண்டாம் புறப்படுங்கள் ' கட்டளையிட்டான் தேசிங்கு.இதனையேற்றுக் கொண்ட மகபத்கானும் இன்னும் நூறு பேரும் குதிரைகளுடன் ஆற்றில் இறங்கினர்.ஆழம் அதிகமில்லை.தண்ணீர் தான் வேகம். இதற்கே பயந்து இன்னும் பல வீரர்கள் கரையிலேயே நின்று விட்டனர்.காட்டாறு வெள்ளத்தைக் கட்டறுத்துப் பாய்ந்த தேசிங்கு ராஜனின் குதிரை கடலியில் கால் கொண்டிருந்த ஆற்காட்டுப் படைகளுக்குள் புகுந்தது.அந்த முப்பதாயிரம் பேர்,இந்த நூறு பேர்களைச் சூழ்ந்து கொண்டனர்.எப்படியாக இருந்தாலும் தேசிங்குராஜனை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆற்காடு நவாபின் ஆணை. போர்க்களத்தில் தன் கையில் இருந்த வாளால் எதிரிகளைப் பதம் பார்த்துக் கொண்டிருதான் தேசிங்கு.இதோ,அருகில் வாளைச் சுழற்றிக் கொண்டிருந்த மகபத்கான் வெட்டுப்பட்டுக் கீழே சரிந்து விழுகிறான்.இதனால் உள்ளம் கலங்கினாலும் தேசிங்கின் வேகம் குறையவில்லை.நாவப்பின் படைத்தளபதி,தௌலத்கானைக் குத்திக் கொன்றான்,தேசிங்கு.இந்த நேரத்தில் தேசிங்குக் குதிரையின் முன்னங் கால்களை பாளையக்கார வீரன் ஒருவன் வெட்டிவிட அவனையும் குத்திக் கொல்கிறான் தேசிங்கு.அப்போதுதான் 'அவனைச் சுட்டுத் தள்ளுங்கள்.'என பாளையக்காரர் யச்சம நாயக்கரிடமிருந்து உத்தரவு வருகிறது. அடுத்த சில நிமிடங்களில் சுட்டுக் கொல்லப்படுகிறான் தேசிங்கு ராஜன்.இது நடந்தது ஜெய ஆண்டு ஐப்பசி மாதம் இரண்டாம் நாள் 1714 அக்டோபர் மாதம் மூன்றாம் நாள்." 

 எமன் வழிபாடு, கறுப்பு வழிபாடு, முனி வழிபாடு,போத்த ராஜா வழிபாடு போன்ற வழிபாடு இந்தப் பகுதியில் பிரசித்தம். இதில் ஒன்றான காரனந்தல் கிராமத்தில் போத்தராஜா சிலையை கூறும் போது விரிசடை ஒரு கை குறுவாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொறு கையில் விலங்கின் வெட்டப்பட்ட தலை போத்தராஜா. திரௌபதியின் பாதுகாவலர் தான் போத்தராஜா.கலிங்க தேசத்தை ஆண்ட போத்த ராஜாவின் காலம் மகாபாரதக் காலம் கிருஷ்ணன் போத்த ராஜவை திரௌபதி,பாண்டவர்களுக்கு போர் படைத்தளபதியாக நியமித்தார்.திரௌபதி கட்டளையை நிறைவேற்றியதற்காக கிருஷ்னன் இவருக்கு மலையளவு சோறும் பல ஆடுகளையும் அளித்தார். திரௌபதி பூஜை செய்வதற்கு முன் போத்தராஜாவிற்குதான் முதல் பூஜை. என்ற விவரனையோடும் அனுசரணையோடும் சொல்கிறார். இந்தப் போத்த ராஜா பெயரை பல்லவர்கள் தனது பெயருக்கு முன் இடம்பெறும் வழக்கம் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.இந்தப் பகுதியில் நடைபெறும் முதன்மையான நிகழ்த்துக்கலைகளில் ஒன்று தெருக்கூத்து. கூத்து எல்லாக் காலத்திலும் நடைபெறாது கோவில் திருவிழா நாட்களில் மட்டுமே நடைபெறும்.குறிப்பாக திரௌபதி கோயிலில் நடைபெறும் தீமிதி திருவிழா நாட்களில் ஆறு நாள் முதல் 18 நாள் வரை ஊரில் உள்ள உபயத்தாரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூத்து நடைபெறும் நாளும் திருவிழா எண்ணிக்கையும் மாறுபடும்.

 ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கான லிங்க சிலையும் நந்தி சிலையும் திருவக்கரை யிலிருந்து புறப்பட்டு செல்கின்றனர். லிங்க சிலை தஞ்சை சென்றுவிட்டது. ஆனால் நந்தி சிலையை ஏற்றிச் சென்ற வண்டிமுறிந்து விழுந்து சன்னியாசிக் குப்பத்தில் தங்கிவிட்டார்.தங்கியதுமட்டும் அல்லாமல் ஊர் மக்களுக்கே காவல் தெய்வமாக அமைந்துவிட்டார். ஒரு ஊரைப் பார்த்தோம்.அந்த ஊரில் உள்ள தொல்லியல் வரலாற்றை பதிவு செய்தோம் என்றில்லாமல் மிகுந்த ரசனை உணர்வோடு மக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பை வரலாறு, தொல்லியல் சான்றுகளேடு நிறுவும் பாங்கு பாரட்டிற்குரியது. உடைய நத்தம்-விசிறி பாறை தொடங்கி இங்கே கிடைக்கும் தாய்த்தெய்வம் பற்றி கிடைக்கும் தாய்வழி சமுகப் பண்பாடு. செத்தவரை,கீழ்வாலை,உடையார்நத்தம்-பாறை ஒவியங்கள்.பனை மலை,சித்தாமூர்- சுவரோவியங்கள் என ஓவியப் (அழகியல்)பண்பாடு. மேலச்சேரி,மாவிலங்கை,தளவானூர்,மண்டகப்பட்டு-குடைவரை கோவில்கள் என கட்டடப் பண்பாடு. ஜம்பை,நெகனூர் பட்டி,தொண்டூர்,திரு நாதர் குன்று எனதமிழி கல்வெட்டுகள்,பெருமுக்கல் சித்திரக் குறியீடு உள்ளடங்கிய எழுத்துப் பண்பாடு. கொத்தமங்கலம்,பரிக்கல் பகுதியில் கிடைக்கும் முதுமக்கள் தாழி என நீத்தார் பண்பாடு. பண்பாட்டின் வேர்மூடிச்சே கோவில்களிலும் கோவிலைப் பற்றி எழுதியுள்ள பக்திப் பாடலில் தான் புதைந்து உள்ளது . இதை மிகச் சரியாக இந்தப் பகுதியில் கிடைக்கும் தமிழருக்கான பண்பாட்டு அழகியலுக்கான சுவடுகளை திறந்து வைத்துள்ளார் விழுப்புரம் கோ.செங்குட்டுவன். இவ்வளவு சிறந்த நூல் மிக குறைவான விலையில் வெளிவந்துள்ளது.

 வெளியீடு: P S பப்ளிகேசன்ஸ், விழுப்புரம். விலை-200 வாட்சாப்-9944622046.


கருத்துரையிடுக

0 கருத்துகள்