தென்னை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ.12,000 கூடுதல் வருவாய் ஈட்ட, ஊடுபயிராக மருந்துப் பொருளான திப்பிலியைப் பயிரிடலாம்.உணவு, மருந்து, வாசனப்பொருள்கள் மற்றும் மதுபானங்களில் திப்பிலி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து இருமல் மருந்துகளிலும் திப்பிலி சேர்க்கப்படுகிறது. திப்பிலியில் இருந்து எய்ட்ஸ் மற்றும் தொழுநோய்க்கு அண்மையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது திப்பிலி. இந்தியாவில் திப்பிலியின் ஆண்டுத் தேவை 700 டன்களாக இருப்பதால், இதனை சாகுபடி செய்து விவசாயிகள் தங்கள் வருவாயை ஈட்டிக்கொள்ளலாம்.
பயிரிடுவது எப்படி?
திப்பிலிக் கொடி, செடி என்ற இருவகைகள் கொண்ட நீண்டகாலப் பயிர். கருமிளகைவிட அதிக காரத்தன்மையும் கொண்டது திப்பிலி. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெருமளவில் திப்பிலி பயிரிடப்படுகிறது. இதைப் பயிரிடுவதற்கு நிழல் அவசியம்.எனவே சமவெளிப் பகுதிகளில் தென்னந்தோப்புகளிலும், பாக்குமரத் தோப்புகளிலும் பயிரிட ஏற்றது. வாழைத் தோப்புகளிலும் சவுக்குத் தோப்புகளிலும்கூட திப்பிலியைப் பயிரிடலாம்.
திப்பிலி கணுக்கள் கொண்ட தண்டுகள் மூலம், பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. கொடிகளில் நுனி மற்றும் நடுப் பகுதி தண்டுகளில் உள்ள கணுக்கள் பயிர் பெருக்கத்துக்குச் சிறந்தவை. நட்டு 60 நாளில் வேர் பிடிக்கும். தோப்புகளில் 3 அடி இடைவெளியில் பார் அமைத்து, ஒரு அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.ஆண்டுக்கு இருமுறை ஹெக்டேருக்கு 100 கிலோ தழைச்சத்து, 80 கிலோ சாம்பல் சத்து கொண்ட உரமிட வேண்டும். தென்னந்தோப்புகளில் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். தென்னைக்கு பாய்ச்சும் நீர், அளிக்கும் உரம் ஆகியவையே திப்பிலிக்கும் போதுமானது.
மகசூல்
திப்பிலி நட்ட முதலாம் ஆண்டில் 750 கிலோவும், 2-ம் ஆண்டு முதல் 1500 கிலோவும் மகசூல் கிடைக்கும். அதிக செலவு இல்லாமல், தென்னை சாகுபடியில் ஏக்கருக்கு, ஆண்டுக்கு 12 ஆயிரம் வரை கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு சேர்த்துத் திரிகடுகம் என்று அழைக்கப்படுகிறது.
திப்பிலியின் மருத்துவப் பயன்கள்
பச்சைத் திப்பிலி கபத்தை உண்டாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது.
திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 தேக்கரண்டி அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும்.
திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும்.
திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.
0 கருத்துகள்