திறமையான நாற்றங்காலை உருவாக்குவதில்தான் விளைச்சலின் சூட்சமமே அடங்கியிருக்கிறது. ஒரு ஏக்கர் நடவுக்கு, ஒரு சென்ட் நிலம் போதுமானது. நடவு நிலத்துக்கு அருகிலேயே நாற்றங்கால் அமைப்பது நல்லது. நாற்றங்கால் நிலத்தை நன்றாக உழுது, தண்ணீர் பாய்ச்சி, சேறாக்கி, நிலத்தைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். நாற்றங்காலை சுற்றிலும் கரைகளை அமைத்து, மூன்று அடி அகலம், அறுபது அடி நீளம் கொண்ட இரண்டு மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளின் மீது நன்றாக மக்கிய தொழுவுரத்தைத் தூளாக்கி அரை அங்குல உயரத்துக்குத் தூவிவிட வேண்டும். அதன்மீது அளவுக்கு அசோஸ்பைரில்லம் ஒரு கிலோ தூவவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. விதையுடன் இருபது கிராம் சூடோமோனஸ் உயிர் உரத்தை கலந்து, சாக்கில் கட்டி 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் மூட்டைகளை ஈரத்தோடு அடுக்கி வைத்து விடவேண்டும். 12 மணி நேரம் கழித்து விதைகள் முளைக்கத் துவங்கிவிடும். இப்படி முளைகட்டிய விதைகளை கைகளால் அள்ளி, பாத்தியில் பரவலாக விதைக்க வேண்டும். விதைகள் வெளியே தெரியாதபடி தொழுவுரத்தை பொடி செய்து தூவவேண்டும். இதன் மீது வைக்கோலை மூடாக்காகப் பரப்பி உயிர்த் தண்ணீர் தெளிக்க வேண்டும். இரண்டு நாளைக்கு காலை, மாலை இருவேளையும் நாற்றங்காலில் ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். மழைக்காலமாக இருந்தால் ஒருவேளை தெளித்தால் போதும். இரண்டு நாள் கழித்து வைக்கோல் மூடாக்கை எடுத்துவிட வேண்டும். முளைத்த நாற்று இரண்டு அங்குலம் அளவுக்கு இரும்பு ஆணியைப் போல் திடமான நாற்றாக வளர்ந்து விடும்.
நாற்றுக்கு வயது 15 நாள்!
0 கருத்துகள்