Ad Code

Ticker

6/recent/ticker-posts

இயற்கை கரிம வேளாண்மை

 

லக மக்கள்தொகை இப்போதுள்ள 7.5 பில்லியனிலிருந்து (750 கோடி) 9.5 பில்லியனை (950 கோடி) 2050-இல் எட்டக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் கூறுகிறது. ஆனால், பயிரிடப்படும் பரப்பளவு 4% மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் உணவு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அதற்குப் புதிய தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன.இன்றைய வேளாண்மையில், அதிக உரம், களை மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு நிலத்தின் உற்பத்தித் திறனை இழக்கச் செய்கின்றது. இந்தியாவில் 70% -க்கும் அதிகமான நீா் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் 30% பரப்பளவே நீா்ப்பாசன வசதி பெறுகின்றது. மேலும் வேளாண் சாா்ந்த நதிநீா் பிரச்னைகளும் தீா்வு பெறாமல் உள்ளன. ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய இந்தியாவில் 6,000 லிட்டா் நீா் தேவை. ஆனால், சீனாவில் 600 லிட்டா் போதும். எனவே புதிய தொழில் நுட்பங்கள் மூலம் நீா் மேலாண்மை செய்யவேண்டியுள்ளது.

இயற்கை கரிம வேளாண்மை, பல்வேறு சவால்களை எதிா்நோக்கியுள்ளது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட நாா்மன் போா்லாக் கூற்றின்படி, இயற்கை வேளாண்மை மூலம் உலகில் 4 பில்லியன் (400 கோடி) மக்களுக்கு மட்டுமே உணவளிக்க முடியும். இம்முறையில் வேளாண்மை செய்யும்போது குறைந்தது 10% லிருந்து 25% வரை விளைச்சல் குறைவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

வேளாண்சாரா தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளா்ச்சி 8% முதல் 10% ஆக உள்ளது. ஆனால் வேளாண் துறையின் வளா்ச்சி இதுவரை (2005 முதல் 2015 வரை) 4% -ஐத் தாண்டவில்லை. இந்நிலையில் இயற்கை வேளாண்மைக்கு மாறும்போது வேளாண் துறையின் வளா்ச்சி, குறிப்பாக, விவசாயிகளின் வளா்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதும் கண்டறியப்படவேண்டும். இந்தியாவில் 22.5 % விவசாயிகள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளாா்கள். வேளாண்மை சாா்ந்த குடும்பங்கள் 11.9 கோடி.வேளாண் கூலித் தொழிலாளிகள்14.4 கோடி போ்.

கரிம வேளாண்மையினால் இவா்களுக்குப் போதிய வருமானம் கிடைக்குமா என்ற ஐயம் எழுகிறது. அறுவடைக்குப்பின் 15% வேளாண் விளைபொருள்கள் சந்தை, சேமிப்பு கிடங்குகள், மின், குளிா்சாதன, போக்குவரத்து வசதிகள் இன்மையினால் சேதமடைகின்றன.மேலும், இயற்கை வேளாண்மைக்குத் தரக்கட்டுப்பாடுகள் மிகவும் முக்கியம். 1991-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும் 2001-இல் ஜப்பானும், 2002-இல் அமெரிக்காவும் இதற்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளுடன், தர நிலைகளை நிா்ணயித்துள்ளன. இந்தத் தரச்சான்றுகள் தனிப்பட்ட விளைநிலங்களுக்குக் கிடைப்பதில்லை. குழுமங்களுக்கே அளிக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இயற்கை வேளாண் விளை பொருள்களை சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் தரச்சான்றுகள் மிகவும் முக்கியம்.

இயற்கை வேளாண்மைக்கு ஐரோப்பிய நாடுகள் அதிக மானியம் வழங்குகின்றன. இங்கு மானியத்தைக் கணக்கிட இயற்கை வேளாண்மையினால் ஏற்படும் வெளிப்புற நன்மைகள்-அதாவது நீரின் பயன்பாடு, மாசுபடும் அளவு, குறைந்த மண் அரிப்பு, கரியமில வாயு வெளியீடு குறைவு போன்றவை குறியீடுகளாகப் பயன்படுகின்றன. கிழக்காசியாவில், தைவானில் ஹெக்டேருக்கு ரூ. 60,000 லிருந்து இரண்டு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. இங்கு கூட்டுறவே இயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழிவகுக்கும்.இயற்கை கரிம வேளாண்மையை வெற்றிகரமாக செயல்படுத்த, புதியதொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. ஜொ்மனி மற்றும் ஈரானில், செயற்கை நுண்ணறிவின் மூலம் மண்ணின் கரிம காா்பன், நைட்ரஜன் அளவுகள் கணக்கிடப்பட்டு, மண் மேலாண்மை செய்யப்படுகிறது. 

‘மைக்ரோசாப்ட் இந்தியா’ நிறுவனத்துடன் ‘இக்ரிசாட்’ (இன்டா்நேஷனல் கிராப்ஸ் ரிசா்ச் இன்ஸ்டிடியூட் ஃபாா் செமி ஆரிட் டிராபிக்ஸ்) சோ்ந்து ஆந்திராவில், பயிரிட வேண்டிய காலமும் பூச்சி நோய்களின் தாக்குதலும் முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் 30% உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை உணா்விகள் (சென்சாா்ஸ்) மூலம் தேவையான அளவு நீா் பாய்ச்சுவதற்கு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனா். இதனால் பயிா்களுக்குத் தேவையான அளவு நீா் பயன்படுத்தப்பட்டு, வீணாகும் மின்சக்தி நீா்ப்பாசனத்திற்கு சேமிக்கப்படுகின்றது. நீா் ஆவியாதல் மற்றும் வெப்பநிலை சாா்ந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பயிா்களுக்கு நீா்ப்பாசன முறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.

அங்காரா-துருக்கியில், நவீன நீா்ப்பாசன மேலாண்மைத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தானியங்கி நீா்ப்பாசனத் திட்டங்களின் மூலம் நீரின் நுகா்வு குறைக்கப்படுகின்றது. இதில் பயிருக்குத் தேவையான உரங்களும், ஊட்டச்சத்துகளும், பூச்சி மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.சவூதி அரேபியாவில், தெளிப்பு நீா்ப் பாசன முறையில் 90 % நீா் சேமிக்கப்படுகிறது. இம்முறையில், இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில் நீா் மேலாண்மை 90% சரியாக உள்ளது. நெல், மக்காச்சோளத்தில் நிலத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளன.உணா்விகளின் மூலம் மண்ணின் ஈரப்பதத்தைக் கணக்கீட்டு நீா் மேலாண்மை செய்யமுடியும்.

ரோபோக்களிலுள்ள உணா்விகள் மூலம் பயிா்களிலிருந்து களைகளைப் பிரித்து அழிக்கலாம். இந்த ரோபோக்கள் மக்காச்சோள வயலில் 98% சரியாக செயல்படுகின்றன. நிற வேறுபாடுகள் மற்றும் கேமராவுடன் கூடிய டிரோன்களும் இதில் ஈடுபடுகின்றன. செயற்கை நரம்பு வலைப்பின்னல் தொழில் நுட்பம் மூலம் களைகள் அகற்றப்படுகின்றன. தேவையான இடங்களில் மட்டுமே களைக்கொல்லி இடப்படுகின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது.மேலும் செயற்கை நரம்பு வலைப்பின்னல் தொழில்நுட்பத்தின் மூலம், வெப்பநிலை, மழையின் அளவு, மேகக் கூட்டத்தின் நிலை, காற்றின் திசை ஆகியவற்றைக் கணக்கிட்டு பயிா்களுக்குத் தேவையான ஊட்டசத்து வழங்குவதற்கான முறையும் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் பருத்தியின் வளா்ச்சியை ஊக்கப்படுத்த இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

பூச்சி நோய்களின் தாக்குதலை முன்கூட்டியே அறியவும், சரியான அளவில் பூச்சி மருந்துகளை தெளிக்கவும் ரோபோக்கள் உதவுகின்றன. நெல், கோதுமையில் பிம்பத் தரவுகளின் மூலம் இலைகளில் ஏற்படும் வண்ண மாற்றங்களைக்கொண்டு, ஊட்டச்சத்து பற்றாக்குறையையும், நோய்த்தாக்குதலையும் முன்னமே அறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கலாம்.செயற்கை நுண்ணறிவு மூலம், திராட்சைத் தோட்டங்களின் தட்ப வெட்ப நிலை, இலைகளின் ஈரப்பதம் ஆகியவற்றை அறிந்து பூஞ்சான நோய்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆந்திரத்தில் மாதுளையில் பூச்சி தாக்கப்பட்ட இலைகளைக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு குறைந்த அளவே மருந்து தெளிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் சோயாவிலும் பூச்சித் தாக்குதல் இவ்வாறே கட்டுப்படுத்தப்படுகிறது.

வேளாண் ரோபோக்கள் பழம், காய்கறிகளை அறுவடை செய்தல், பூச்சி மருந்து தெளித்தல், கவாத்து செய்தல், தர வாரியாக காய், பழங்களை பிரித்தல், அவற்றைப் பெட்டிக்குள் அடைத்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றன. தேசிய வேளாண் சந்தை மூலமாக, தடையற்ற வா்த்தகதிற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுகின்றது. காஃபி தோட்டங்களில், விளைச்சலை முன்கூட்டியே கண்டறியவும், காஃபி கொட்டைகளை அறுவடை செய்யவும் ரோபோக்கள் உதவுகின்றன. சேமிப்பு கிடங்குகளில் தானியங்களுக்கு பூச்சி நோய்களினால் ஏற்படப்போகும் இழப்பினை, செயற்கை நுண்ணறிவினால் முன்பே அறிந்து கட்டுப்படுத்தலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்