Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை

 


ஜீவாமிர்தம்  என்பது ஒரு மிகசிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. நமது கால்நடைகளின் கழிவுகள்  மற்றும் நிலத்தில் இருந்து கிடைக்கும் கழிவு பொருட்களை வைத்து தயாரிக்கும்  ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். இதனால் இதனை தயாரிப்பதற்கு அதிக செலவுகள்  ஆகாது.பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் அனைத்தும் நிலத்திலேயே உள்ளது. ஏனென்றால் மண் ஒரு அன்னபூரணியாகும். ஆனால் பயிர்கள் நேரடியாக நுண்ணுட்டச் சத்துக்களை பெறமுடியாத விதத்தில் உள்ளது. நுண்ணுட்டச் சத்துக்களை பயிர்களுக்குத் தேவையான விதத்தில் மாற்றிக் கொடுக்கும் வேலையை நுண்ணுயிர்கள் செய்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் நாட்டு மாட்டின் வயிற்றில் கோடிக்கணக்கில் உள்ளது. இந்த நுண்ணுயிர்களை பல லட்சம் கோடியாக மற்றும் வேலையை ஜீவாமிர்தம் செய்கிறது.

பயன்கள்

~ ஜீவாமிர்தத்தை நிலத்திற்கு கொடுக்கும் போது நிலத்தில் நுண்ணுயிர்கள் பல லட்சம் கோடியாக பெருகுகின்றது

~ ஜீவாமிர்தக் கரைசலைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை பெருகும்

~ நிலத்தின் மண் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் நிலத்தில் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி வேலை செய்து கொண்டுள்ளன என்று பொருள்.

~ ஜீவாமிர்தக் கரைசலை வயலில் விடும்பொழுது 15 அடி ஆழத்தில் சமாதி நிலையிலிருக்கும் மண்புழுக்கள் துள்ளி எழுந்து மண்ணைக்கிளறிக் கொண்டு மேலே வரும், அப்படி வரும்போது பயிருக்கு தேவையான மண்ணின் அடியில் உள்ள சத்துகளை பூமியின் மேல் பகுதிக்கு அதாவது பயிரின் வேர்பகுதிக்கு கொண்டு வந்து சேர்க்கும். இதனால் மண் வளம் பன்மடங்கு பெருகும்



தேவையான பொருட்கள்

1. நாட்டு பசு மாட்டு சாணம் 10 கிலோ

2. நாட்டு பசு மாட்டு கோமியம் 10 லிட்டர்

3. நாட்டு சர்க்கரை 1 கிலோ (ரசாயனம் கலக்காதது)

4. பயறு மாவு 1 கிலோ (தட்டை பயறு, கொள்ளு, கொண்டைக் கடலை, உளுந்து, துவரை இதில் ஏதாவது ஒன்று)

5. காட்டின் அல்லது பண்ணையின் வரப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு

6. தண்ணீர் 170 லிட்டர்

தேவையான உபகரணங்கள்

1. பிளாஸ்டிக் டிரம் 1 (200 லிட்)

2. கலக்கி விட மூங்கில் குச்சி 1 (4 அடி)

3. மூடிவைக்க துணி 1(1மீ நீளம் 1மீ அகலம்)

செய்முறை

* மேலே குறிப்பிட்ட பொருட்களை 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளஸ்டிக் டிரம்மில் போட்டு கடிகார திசையில் நன்கு கலக்கவும்.

* கோணிப்பை அல்லது பருத்தி துணியால் மூடி நிழலில் வைக்கவும்

* காலை மாலை இரண்டு வேளையும் குச்சியால் கடிகார திசையில் கலக்கி விடவும்

* 48 மணிநேரத்திற்கு பின்பு பயன்படுத்தலாம்

பயன்படுத்தும் முறை

பாசன நீருடன்

* மாதம் ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 400 லிட்டர் வீதம் பாசன நீருடன் கலந்து கொடுக்கலாம்.

ஜீவாமிர்தம் தெளிப்பு 

* எல்லா பருவகால பயிர்களுக்கும் முதல் தெளிப்பு நட்டு 30 நாட்கள் கழித்து 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கலாம்.

* இரண்டாவது தெளிப்பு முதல் தெளிப்பிலிருந்து 21 நாள் கழித்து       10 லிட்டர் தண்ணீருடன் 750 மில்லி ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும்.

* மூன்றாவது தெளிப்பு இரண்டாவது தெளிப்பிலிருந்து 21 நாள் கழித்து 10 லிட்டர் தண்ணீருடன் 1 லிட்டர் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும்.

* மூன்றாவது தெளிப்பு முடிந்து 21 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருடன் 1 லிட்டர் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும்.



கவனிக்க வேண்டியவை

* சாணம் எவ்வளவு புதிதாக உள்ளதோ அவ்வளவு நல்லது, கோமியம் எவ்வளவு பழையதோ உள்ளதோ அவ்வளவு நல்லது.

* சாணம், நாட்டு சர்க்கரை, பயறு மாவு ஆகியவற்றை தனித் தனியாக கரைத்து ஊற்ற வேண்டும் இல்லை என்றால் கட்டி கட்டியாக ஜீவாமிர்த கரைசலில் கரையாமல் இருக்கும்.

* டிரம்மின் வாய்ப் பகுதியை துணியால் கட்டி வைக்க வேண்டும்

* வெயில், மழை தண்ணீர் படாதவாறு நிழலில் வைக்க வேண்டும்

* பயன்படுத்தும் காலம் வரை தினமும் காலை, மாலை இருவேளையும் கலக்கி விட வேண்டும்

* கலக்கி விட்ட பின்பு கலக்கி விடும் குச்சியை நன்றாக கழுவி வைக்க வேண்டும்

பயன்படுத்தும் காலம்

* 48 மணி நேரத்திற்கு பின்பு 7 நாட்களுக்குள் பயன்படுத்திட வேண்டும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்