ஆழ்கூள முறை
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.
ஊட்டமேற்றிய ஆட்டு எரு
தேவையான பொருட்கள்
நன்கு தூளாக்கப்பட்ட ஆட்டுஎரு - 100 கிலோ.
பஞ்சகவியம் - 1லிட்டர்
மீன்அமிலம்- 1லிட்டர்
பழக்காடி - 1லிட்டர்
வெல்லம் - 2 கிலோ.
பயறுமாவு - 5 கிலோ
சாணிப்பால் - 10 லிட்டர்
கோமியம் -.10 லிட்டர்.
அசோஸ்பைரில்லம் - 1 கிலோ.
பாஸ்போபாக்டீரியா - 1கிலோ.
சூடோமோனஸ் - 1கிலோ
கடலைபுண்ணாக்கு -.10 கிலோ
எள்ளுபுண்ணாக்கு - 10 கி
ஆமணக்கு புண்ணாக்கு - 10 கி.
செய்முறை
#ஆட்டு எருவை, டிராக்டர் விட்டு மிதித்து, நன்கு தூளாக்கி கொள்ளவும்.
# தூளாக்கப்ட்ட எருவை பரப்பி அதன் மேல் பஞ்சகவியம், மீன்அமிலம், பழக்காடி ஆகியவற்றுடன் சமபங்கு தண்ணீர் கலந்து எரு மேல் தெளிக்கவும். #கடலைபுண்ணாக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே தண்ணீரில் ஊறவிட்டு, புளிக்க விடவும்.
# எள்ளு, ஆமணக்கு புண்ணாக்கு, ஆகியவற்றை எரு மேல் பரவலாக தூவவும்.
# வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து கரைசலாக்கிய பின்னர், எருவின் மேல் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்களை தூவி, நுண்ணுயிரிகள் பல்கி பெருக பயறுமாவையும் தூவவும்.
# இடுபொருட்கள் தூவப்பட்ட எருவின் மேல் கடலைபுண்ணாக்கு, வெல்லம், கோமியம், சாணிப்பால் கலந்த கரைசலை எரு முழுவதும், நன்கு நனையும்படி தெளித்து, எருவை நன்கு கலந்து குலியலாக சேர்த்து மரநிழலில் தென்னஓலை போட்டு மூடி 7 நாட்கள் வைக்கவும்.
தினமும் எருவின் மேல் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து எரு மேல் தெளித்து வரவும்.
# 7 நாட்களுக்கு, பிறகு ஆட்டு எரு, இயற்கை இடுபொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கி பெருகி, ஊட்டமேறிய உரமாக தயாராகி இருக்கும்.
இந்த ஊட்டமேற்றிய ஆட்டுஎருவை, பயிரின் வளர்பருவம், பூக்கும்பருவம், காய்க்கும் பருவம் என அனைத்து நிலைகளிலும் தரலாம்.ஊட்டமேற்றிய ஆட்டு எரு போட்டவுடன் பயிரில் உடனடி மாற்றத்தை காணலாம்.நெற்பயிரில் நடவுக்கு முன் அடியுரமாகவும், வளர் பருவத்தில் 15 நாட்கள் இடைவெளி விட்டு இரண்டு முறையும்,
தொண்டைபருவத்தின் போது ஒரு முறை என நான்கு முறை, ஊட்டஉரம் தரும்போது, சிறப்பான மகசூலை அடையலாம்.ஊட்டஉரத்தை பயன்படுத்துதற்கு முன் வயலில் ஈரப்பதம் இருப்பது அத்தியாவசியம்.ஈரப்பதம் இல்லா மண்ணில் நுண்ணுயிர் பெருக்கம் சிறப்பாக நடக்காது.வயலுக்கு ஊட்டஉரம் இடுவதற்கு முன்னர் பயிர்களில், வேரழுகல், பூஞ்ஞான் நோய்களை கட்டுபடுத்த,வேப்பம் புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு தலா 10 கிலோ ஊட்டஉரத்துடன் கலந்து பயன்படுத்தலாம்.இவ்வாறாக சிறப்பாக ஊட்ட எருவை பயன்படுத்தும்போது பயிரின் பாதுகாப்பும், வளர்ச்சியும் நிலைபடுத்தப்படுகிறது.
0 கருத்துகள்