Ad Code

Ticker

6/recent/ticker-posts

பிருதிவிராஜ் சந்யோகிதா காதல் சரித்திரம்

1191-ம்ஆண்டு பாரதத்தை சூறையாடும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்படையுடன் நம் மண்ணில் கால் பதித்தான் முகமது கோரி. பஞ்சாபிலுள்ள படிண்டா கோட்டை முகமது கோரியின் முற்றுகைக்கு உள்ளாகியது. அப்போது படிண்டாவையும் வட பாரதத்தின் பெரும் பகுதிகளையும் ஆண்டு வந்தவன் மாவீரன் பிருதிவிராஜ் சௌஹான். அந்நியப் படைகளை எதிர்த்து நாட்டைக் காக்க தன்னுடன் சேர்ந்து போராடுமாறு தனது மாமனாரும் அண்டைப் பகுதி மன்னனுமாகிய ஜெய்சந்த்தியிடம் அவன் எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பிருதிவிராஜிக்கு இது எந்தவிதமான வியப்பையும் அளிக்கவில்லை. அந்நிய படையெடுப்பும் மாமனாரின் பாராமுகமும் காதலுக்காக தான் கொடுக்க வேண்டிய விலைதான் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பிருதிவிராஜ் 1168 ஆம் ஆண்டு வீரம் செறிந்த ராஜபுத்திர குலத்தில் தோன்றினான். இளம் வயதிலேயே கல்வியிலும் வில் வாள் வித்தைகளிலும் சிறந்து விளங்கினான். தாக்க வேண்டிய இலக்கை கண்களால் பார்க்காமல், ஒலியை கேட்டே, இலக்கு இருக்கும் இடத்தை உணர்ந்து அதை அம்பு எய்து தாக்கவல்ல 'ஸ்ப்த பேதி பாண வித்யா' எனப்படும் பெரும் வில் வித்தை திறனையும் அவன் கொண்டிருந்தான். தனது தந்தையை வஞ்சித்த குஜராத்தின் அரசன் பீம்தேவ் சோலங்கியை போர்க்களத்தில் வென்ற போதும் எதிர்பாராமல் எதிர்த்து வந்த பெரும் சிங்கம் ஒன்றை வெறும் கைகளினால் போராடி கொன்ற போதும் அவன் வெறும் 12 வயது பாலகன்! இளம் வயதிலேயே அவனுக்கு இருந்த வீரத்தையும், அரசியல் சாணக்கியத்தையும் அறிந்த அவனது பாட்டனாரான தில்லி அரசர் தனக்குப் பின் நாட்டை பிருதிவிராஜிக்கு அளித்தார். அவன் வயதொத்த குழந்தைகள் விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்க 12 வயதிலேயே டெல்லி மன்னனாக முடி சூடினான் பிருதிவிராஜ். ஆனால் இந்த சாதனைகள் எல்லாம் ஒரு மோசமான எதிரியையும் அவனுக்கு உருவாக்கிவிட்டன. டெல்லி சிம்மாசனத்தை அடைய ஆசை கொண்டவர்களில் பிரிதிவிராஜன் பாட்டன் வழி உறவினரான ஜெய்சந்தும் ஒருவன் அப்போது ஜெய்சந்த் கன்னோஜ் பகுதியை ஆண்டு கொண்டிருந்தான். பிருதிவிராஜ் அரியணை ஏறியது தகுதியின் அடிப்படையிலேயே என்ற உண்மையை ஏற்க மறுத்த ஜெய்சந்த், பிரிதிவிராஜைத் தன் எதிரியாகவே கருதத் தொடங்கினான்

பிருதிவிராஜ் வாழ்க்கையில் அப்போதுதான் அந்த திருப்பம் நிகழ்ந்தது. தனக்கு எதிராக குஜராத்தில் துளிர் விட்டுக் கொண்டிருந்த சதிகளை முறியடிக்க ஒரு சாதாரண குடிமகனாக வேடமிட்டு குஜராத் பகுதிக்கு சென்றால் பிருதிவிராஜ். கானகப்பகுதி ஒன்றை அவன் கடந்துகொண்டிருந்தபோது வழிப்பறிக் கொள்ளையரிடம் ஒரு பேதைப் பெண் சிக்கியிருந்ததைக் கண்டான். அவனது வீரம்தான் அர்ச்சுனனையும் மிஞ்சியது ஆயிடற்றே. கொள்ளையர்களிடமிருந்து அவளை காப்பாற்றினான். வெகு எளிமையான ஆடைகளை அணிந்திருந்த அந்த அழகுப் பெட்டகம், மென்குரலில் தனது பெயரை நந்தினி என்று உச்சரித்து கூடவே கொள்ளையரிடம் இருந்து காப்பாற்றியதற்காக நன்றியும் தெரிவித்து. அவளது அடக்கமான பேரழகு அவனை பெரிதும் கவர்ந்தது. கொள்ளையரிடமிருந்து காப்பாற்றிய அவன் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டாள் அவள். பிரியா விடை பெற்று பிரிந்தனர் அவர்கள். ஆயினும் ஒருவர் நினைவில் மற்றவரால் மறக்க முடியவில்லை.

ன்று அரசவையில் கொலுவிருந்த மன்னன் முன் அரசகுமாரி ஒருத்தியின் பேர்ழகை வர்ணித்து கவிதை பாடினான் அரசவை கவிஞனும் பிரிதிவிராஜன் தோழனுமாகிய சந்த்பர்தாயி. கூடவே அந்த சுந்தரியின் பேரெழில் ஓவியத்தையும் மன்னனுக்கு காட்டினான். அதை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போனான் பிருத்திவிராஜ். ஓவியத்தில் காட்சி அளித்தவள் அவனது மனதை கவர்ந்த எழிலரசிதான். தன்னை எதிரியாக நினைக்கும் ஜெய்சந்த்தின் மகள் சத்யோகிதான் அவள் என்று அறிந்தும் அவன் மனம் மாறவில்லை. அந்தக் கணம் முதல் அவள் மீது மாறாத காதல் கொண்டான். அங்கு கன்னோஜ் அரண்மனையின் அந்தப்புரத்தில், பிருதிவிராஜின் வீர தீரப் பிரதாபங்களை தோழிகள் பேசக் கேட்டு அவனை சந்திக்க துடித்தாள் இளவரசி சந்யோகிதா. தோழி ஒருத்தி அவன் ஓவியத்தை காட்ட தன்னை காப்பாற்றி. மனதில் இடம் பிடித்த இளைஞன்தான் பிருதிவிராஜ் என்றறிந்து அவன் மேல் தீராத நேசம் கொண்டாள் அந்தப் பேதை. மனம் ஒத்த காதலை அணை போட்டுத் தடுக்க இயலுமா என்ன? தூதுவர்கள் மூலம் காதல் செய்திகளை இரகசியமாக பரிமாறிக் கொண்டார்கள். மாறு வேடத்தில் அவளை சந்திக்க முடிவு செய்தான் பிருத்விராஜ். கன்னோஜ் அரண்மனைக்கு இரகசியமாக வந்த பிருதிவிராஜை தனிமையில் சந்தித்தாள் சந்யோகிதா ஒருவர் முன் ஒருவர் தோன்றியதும் மடைதிறந்த வெள்ளமாக காதல் பெருகியது. தன் வாழ்வின் பயனே அவளுடன் இணைவதுதான் என்று உணர்ந்தான் பிருத்விராஜ். இனி வாழ்க்கை என்று ஒன்றிருந்தால் அது அவனோடுதான் என்று உருகினார் சந்யோகிதா.

ற்றர்கள் மூலம் நடப்பதை அறிந்த ஜெய்சந்த் தன் மகள் சந்யோகிதாவின் சுயம்வரத்துக்கு உடனே ஏற்பாடு செய்தான். சுயம்வரம் விழாவுக்கு பல நாட்டு மன்னர்களும் அழைத்தான். ஆனால் தன் எதிரி பிருதிவிராஜிக்கு அழைப்பை விடுக்காதது மட்டுமல்ல அவனை அவமதிக்க பிரிதிவிராஜைப் போன்ற உருவ பொம்மை ஒன்றை செய்து, அதை காவலாளி போல விழா மண்டபத்தின் வாயிலில் நிற்க வைத்தான். கையில் மணமாலையுடன் மண்டபத்தில் பிரவேசித்தாள் சந்யோகிதா. மன்னர்கள் நிறைந்திருந்த அவையில் தன் காதல் தலைவனைத் தேடின அவளது கண்கள். அவனைக் காணாது ஏமாற்றமடைந்த அவளது விழிகளில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிருதிவிராஜின் உருவபொம்மை தென்பட்டது. சற்றும் தயக்கமின்றி அதன் கழுத்தில் மணமாலையை அணிவித்தாள். அப்போது அந்த அதிசயம் நடந்தது உருவ பொம்மையின் பின்னால் பதுங்கியிருந்த பிரிதிவிராஜ், சரேலென்று வெளிப்பட்டு தனது உயிருக்கு உயிரான காதலியை அருகிலிருந்த குதிரையில் ஏற்றிக்கொண்டு பறந்தான்.விரைவிலேயே திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் ஈருடலும் ஓருயிருமாகக் கலந்தனர். பூமியிலேயே தங்களது சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் பல நடைபெறத் தொடங்கின. அரசுரிமையையும் மறுத்து, தன் மகளையும் பறித்துச் சென்ற பிருதிவிராஜைப் பழிவாங்கத் துடித்தான் ஜெய்சந்த். அதன் காரணமாக பாரதத்தின் மீது கண் வைத்திருந்த முகமது கோரியை படையெடுத்து வரத் தூண்டினான். கோரி படையெடுத்து வந்தான். அவன் படையெடுப்புக்கு மாமனாரே காரணம் என்பதை உணராமல் நாட்டைக் காக்க தன்னுடன் சேர்ந்து போராடுமாறு அவருக்கு கோரிக்கை விடுத்தான். அவன் எழுப்பிய கோரிக்கை ஜெய்சந்த்தால் நிராகரிக்கப்பட்டது.1191-ஆம் ஆண்டு தரைன் என்ற இடத்தில் கோரியின் அந்நியப் படைகளை பிருதிவிராஜின் ராஜபுத்திர வீரப்படை சந்தித்தது. பிரமிக்கத்தக்க வீரத்துடன் போர் புரிந்த பிருதிவிராஜின் சாகசத்துக்கு முன் எதிரிகள் தோற்றோடினர். கைதியாக சிறைப்பிடிக்கப்பட்டு தன் முன் நிறுத்தப்பட்டு உயிர் பிச்சை கேட்ட முகமது கோரியை மன்னித்து அவன் நாட்டுக்கு திரும்ப அனுமதித்தான் பிருதிவிராஜ். ஆனால் அடுத்த ஆண்டே பெரும்படையுடன் மீண்டும் போர் தொடுத்தான் கோரி இம்முறை வஞ்சகமாக இரவு நேரத்தில் தாக்குதல் தொடுத்து பிருதிவிராஜின் படைகளைத் தோற்கடித்து. அவனையும் சிறைப்பிடித்தான். கணவன் சிறைப்பட்டான் என்பதை அறிந்தாள் சந்யோகிதா தன் கற்பை சூறையாட எந்த வினாடியிலும் எதிரிகள் அரண்மனைக்குள் நுழைவர் என்று அவளது இதயம் சிட்டுக்குருவியின் சிறகு போல் படபடவென்று அடித்துக்கொண்டது. உயிரை விட மானமே பெரிது! என்று முடிவுக்கு வந்தாள் சந்யோகிதா அந்தப்புர பணிப்பெண்களிடம் தீ வளர்க்க உத்தரவிட்டாள் அழுகையும் கதறலுமாக அந்த உத்தரவுக்கு அடிபணிந்த அவர்கள் மறுத்தனர். சந்யோகிதா தானே தீ வளர்த்தாள் தீ நாக்குகள் அவளை 'வா' 'வா' என ஆசையுடன் அழைத்தன. இமைக்கும் நேரத்துக்குள் தீயில் பயந்தாள். ஒரு முக்கல் முனகல் இன்றி முகத்தில் வேதனையின் சுவடே இன்றி முழுவதுமாக எரிந்து சாம்பலானாள். அந்த அழகிய காதல் சரித்திரத்தின் மென்மையான பகுதி தீயில் கருகி முடிவுற்றது. தன் காதல் மனைவியின் முடிவை அறிந்து, வாழ வேண்டும் என்ற ஆசையையே இழந்தான் பிருத்திவிராஜ்.

னால் சோக சரித்திரம் தொடரத்தான் செய்தது. கைதியாக விலங்கிடப்பட்டு கோரியின் தலைநகருக்கு இழுத்துச் செல்லப்பட்ட பிருதிவிராஜ் அங்கு அவமதிக்கப்பட்டு குருடாகப்பட்டான். பிருதிவிராஜைத் தேடிக்கொண்டு மாறுவேடத்தில் அந்த நகரத்துக்கு வந்த அவனுடைய நண்பனும் புலவனுமான சந்த்பர்தாயி தன் கவிதை திறனால் முகமது கோரியின் மதிப்பைப் பெற்றான். பிருதிவிராஜனால் ஒலியைக் கேட்டே அம்பு எய்ய முடியும் என்று கோரியிடம் சொன்ன சந்த் பர்தாயி அம்பு எய்ய பிருதிவிராஜூக்கு உத்தரவிடுமாறு வேண்டினான். கோரி உத்தரவிட்டான் அவன் குரல் வந்த திசையை நோக்கி பெரும் திறனுடன் பாயந்த பிருதிவிராஜின் அம்பு கோரியைக் கொன்று தீர்த்தது.கொடுங்கோலன் கோரியின் கதையை முடிப்பதற்கு தான் வகுத்துக் தந்த திட்டத்துக்கு உதவிய தோழன் சந்த் பர்தாயியைக் கட்டி தழுவினான் பிருதிவிராஜ். மற்றவர்கள் கையினால் உயிர் துறக்க விரும்பாத நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வாளால் குத்திக்கொண்டு தங்கள் இன்னுயிரை நீத்தனர்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. அருமையான வரலாற்று பதிவு ... எனக்கு வரலாறு மிகவும் பிடிக்கும் ... ஒரு வரலாறு காதலில் துளிர்விட்டு வீரத்தில் தழைத்து சோகத்தில் முடிந்துபோனது வேதனை ... தங்களுடைய எழுத்துநடை மிக அருமை ... தங்களுடைய அனைத்து பதிவுகளையும் படித்துவிட ஆவல் ...!! தொடர்கிறேன் !!! https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு