Ad Code

காதலுக்காக சாம்ராஜ்ஜியத்தையே தூசு என உதறித்தள்ளிய மன்னன்

 ருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி.'The sun never sets in the British Empire'என்று பெருமையாக வர்ணிக்கப்பட்ட ஆங்கிலேய சாம்ராஜ்ஜியம். கடலாக விரிந்திருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இங்கிலாந்து மட்டுமல்ல, இந்தியா போன்ற பல அடிமை நாடுகளும் அடக்கம். இத்தகைய பிரம்மாண்டமான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை புகழ்பெற்ற ராஜ பரம்பரை ஒன்று பல நூற்றாண்டுகளாக சம்பிரதாய முறைப்படி ஆண்டு வந்தது. அந்த ராஜ பரம்பரையில் ராஜகுமாரன் எட்டாம் எட்வர்ட் பிறந்தது 1894 ஆம் ஆண்டில். ஓர் இளவரசனாக ராஜ வாரிசுக்கு உரித்தான அனைத்து உரிமைகளையும் ஆண்டு அனுபவித்து  எட்வர்டு இளைனானபோது முதலாம் உலக போர் மூண்டது. எட்வர்ட் போரில் பங்கேற்று சாகசங்கள் பல புரிந்து உயிருடன் மீண்டு நாடு திரும்பினான். அன்றிலிருந்து அவன் நாட்டு மக்களால் மாபெரும் வீரனாகவும், துடிப்புள்ள இளைஞனாகவும் போற்றப்பட்டான். அவனது முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று மக்கள் தினமும் அரண்மனை வாசலில் கூடினர்.எட்வர்டும் தினம் தினம் பாரம்பரிய அரச உடை தரித்து. அரண்மனையிலிருந்து கம்பீரமாக வெளிப்பட்டு மக்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்தான். இங்கிலாந்து மக்களிடம் மட்டுமின்றி பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஆளுகையில் இருந்த அனைத்து தேச மக்களின் நன்மதிப்பையும் பெறவேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. அதன் காரணமாகவே தங்கள் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள் பலவற்றிலும் நீண்ட நல்லெண்ண பயணங்கள் மேற்கொண்டு மக்களை சந்தித்தான். நல்ல மன்னன் தங்களுக்கு கிடைக்கவிருக்கிறான் என்று மக்கள் மகிழ்ந்து கொண்டு இருந்தபோதுதான், அவன் வாழ்க்கையிலும் இங்கிலாந்தின் சரித்திரத்திலும் அந்த எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
     வாலிஸ் சிம்ஸன் என்பவள் அமெரிக்க நாட்டின் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் இதர சாதாரண பெண்களைப் போன்ற வாழ்ந்து வந்த அந்த அமெரிக்க அழகி இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு வினோதமான இடத்தைப் பிடிக்கப் போகிறோம் என்பதை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள் ஆனால் வாழ்க்கை என்பது விந்தையான பல நிகழ்வுகளின் தொகுப்புதானே! ஒரு நாள் தற்செயலாக மற்ற குடிமக்களைச் சந்திப்பது போலதான் வாலிஸ் சிம்ஸனையும் சந்தித்தான் எட்வர்ட்.அவளது ஏக்கம் நிறைந்த பார்வை எட்வர்டின் இதயத்தை ஊடுருவியது. அவனுள் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. மறுநாள், மறுநாள் என்று வாலிஸின் வரவை அவன் எதிர்பார்க்க தொடங்கினான். அவளது குழந்தை முகத்தையும் ஏக்கம் நிறைந்த கண்களையும் பார்த்து விட்டால் போதும், மழை மேகங்களை கண்ட மயில் போல் அவனது உள்ளம் ஆனந்தக் கூத்தாடும்.வாலிஸைத் தன் இதயம் நாடுவதை உணர்ந்தான்.'ச்சீ அது தப்பு' என்று கட்டுப்படுத்த பார்த்தான். ஆனால் தன்னை அறியாமலேயே எட்வர்ட் மீளா காதலில் விழுந்தான். கண்ணுக்குத் தெரியாத அந்த காதல் மின்சாரம் வாலிஸின் இதயத்தையும் தாக்கியது. அவளும் இளவரசன் எட்வர்ட் மீது காதல் கொண்டாள். மறைத்து வைக்கப்பட்டிருந்த காதல் ஒரு நாள் நீரில் அழுத்தப்பட்ட பந்தாக திமிரிக்கொண்டு வெளிப்பட்டது. அவ்வளவுதான் இருவரும் இதயங்களும் காதல் தீயில் பற்றி எரியத் தொடங்கின. எட்வர்டும் காதல் பறவைகளாக வட்டமிட தொடங்கினர். மெதுவாக அவர்கள் காதல் வெளி உலகிற்கு தெரிய தொடங்கியது. இந்த நிலையில் தான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்தது!

வனுடைய தந்தையான, இங்கிலாந்து அரசர் மரணம் அடைந்தார் இங்கிலாந்தின் அடுத்த சக்கரவர்த்தியாக சாம்ராஜ்ஜியத்தின் அரியணையில் 1936 ஜனவரி 20ஆம் நாள் ஏறினான் எட்வர்ட் முடிசூட்டுவிழா உலகே வியக்கும் அளவுக்கு கோலாகலமாக நிகழ்ந்தது. எட்வர்ட் பெரும் சக்கரவர்த்தியாக பொறுப்பேற்றது அவர்களது காதலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆழ்ந்த அன்பில் ஒருவரோடு ஒருவர் இணைபிரியாமல் சேர்ந்திருந்த அந்த அரசனையும் ஆண்டியையும், ஏற்றத்தாழ்வுகள் எந்த விதத்திலும் பிரிக்கவில்லை. 1936-ன் கோடைகாலத்தில் மத்திய தரைக் கடலில் படகு ஓட்டி விளையாடி மகிழ்ந்தார்கள் காதலர்கள். ஆனால், அவர்களின் தூய அன்பையும் நேசத்தையும் காதலையும் உலகம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள். ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவது காதலில் ஒருமிப்பது. திருமணத்தில் இணைவது போன்றவை எல்லாம் சாதாரணமாக எந்நாட்டிலும் நடைபெறும் நிகழ்வுகள்தாம். ஆனால் எட்வர்ட் அரச குலத்தைசேர்ந்தவன் நாட்டை ஆளும் மன்னன் என்ற ஒரே காரணத்தினால் அந்த ஜோடிக்கு காதல் வாழ்வில் இணைந்து மகிழும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலை உருவாகத் தொடங்கியது. நாட்டின் பெயராலும் மதத்தின் பெயராலும் அரசியலின் பெயராலும் சமுதாயத்தின் பெயராலும் பலம்வாய்ந்த சக்திகள் பல அவர்கள் உறவுக்கு எதிராக கிளம்பின. ஆங்கிலேய சக்கரவர்த்தியானவன் இங்கிலாந்து நாட்டின் சம்பிரதாயமான தலைவன் மட்டுமல்ல. சக்திவாய்ந்த இங்கிலாந்து தேவாலயங்களை நிர்வகிக்கும் அதிகாரியும்கூட! சாதாரணமான பெண் ஒருத்தியுடன் தங்களது தலைவன் உறவு கொள்வதையோ, அன்னிய நாட்டவரான அவளை இங்கிலாந்தின் மகாராணியாக ஏற்பதையோ மதவாதிகள் விரும்பவில்லை. அதனால் அவர்கள் அரசனின் காதலை கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் சுமுகமான உறவு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க பெண் ஒருத்தியை இங்கிலாந்தின் அரசியாக தங்கள் மன்னன் அரியணை ஏற்றுவதை நாட்டு நலனுக்கும், தேசபக்திக்கும் ஒவ்வாத செயலாக மக்களும் கருதத் தொடங்கினர். பாரம்பரியமிக்க இங்கிலாந்து அரச குலத்தில் எளிய சூழ்நிலையில் இருந்து வந்த பெண்ணொருத்தி இணைவதா என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வாலிஸ் இங்கிலாந்தின் அரசி ஆகக்கூடாது என்பதாலேயே அவள் கொடிய நாஸி இயக்கத்தின் கைக்கூலி என்று முத்திரை குத்தப்பட்டாள். தூற்றப்பட்டாள். இந்த குழப்பமான வேலையில் அரசியல் ஆதாயம் தேட முயன்ற சிலர் அவனுக்கு எதிராகவும் காதலி வாலிஸீக்கு எதிராகவும் அவன் தாயிடமே குறை சொல்லத் தொடங்கினர். இங்கிலாந்தே அவர்களுக்கு எதிராகவும் அவர்கள் காதலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தது. அந்த சூழ்நிலையில் எட்வர்டுக்கு முன் பூதாகரமாக உருவெடுத்து நின்ற கேள்வி இதுதான் 'சாதாரணப் பெண்ணுடன் காதலா அல்லது பிரமாண்டமான ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் அரச பதவியா?'அவர்களுடைய காதலையும் திருமணத்தையும் எதிர்த்தவர்கள் தங்கள் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி அரசன் காதலை மறப்பான் காதலியை துறப்பான் என்று எதிர்பார்த்தனர். பாவம், அவர்கள் காதலின் மகத்துவத்தை புரிந்து கொள்ளாதவர்கள்! 1936 டிசம்பர் 10 ஆம் தேதி ஆங்கிலேயே சரித்திரத்தில் முக்கியமான ஒரு நாள். அன்று இங்கிலாந்தின் பெல்விடேர் கோட்டையில், தன்னுடைய மூன்று இளைய சகோதரர்களின் முன்னிலையில் அரச பதவியை துறக்கும் சாசனத்தை படித்து கையெழுத்திட்டான் எட்டாம் எட்வேர்ட் மன்னன்.ஆம்! காதலுக்காக, சாம்ராஜ்ஜியத்தையே தூசு என உதறித் தள்ளினான் அந்த காதலன். மதிப்பே மற்ற சிறு உடைமைகளை இழப்பதற்கே பெரிதாக வருத்தப்படும் உலகத்தார் முன்னே, பதவி, புகழ், அதிகாரம், கௌரவம் ஆகிய அனைத்தையும் ஒரு நொடியில் விருப்பத்துடன் தியாகம் செய்த அவன் செயல், சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது! இந்த அசாதாரணமான தியாகத்தை செய்ய தூண்டிய காதல் உணர்வானது அவன் உள்ளத்தில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்க வேண்டும்? காதலுக்குத்தான் எப்பேர்ப்பட்ட இடத்தை தன் வாழ்க்கையில் அவன் அளித்திருக்க வேண்டும்? காலியான அரச பதவியில் அவனுடைய இளைய சகோதரன் ஆறாம் ஜார்ஜ் அடுத்த மன்னனாக அரியணை ஏறினான். அரசனாக இல்லாவிட்டாலும் அரச குலத்தைச் சேர்ந்தவன் ஆகையால் டியூக் ஆப் வின்ட்ஸ்ர் என்ற பட்ட பெயருடன் எட்வர்ட் இங்கிலாந்தை விட்டே புறப்பட்டு சென்றான். நாட்டை விட்டு பிரிவதற்கு முன் மக்களுக்கு அவன் விடுத்த உருக்கமான செய்தி 'அவளில்லாமல் நான் இல்லை' அரச பதவி என்ற விலங்கு மறைந்ததும் அந்த அபூர்வ காதலனும் காதலியும் 1937 ஜூன் 3ஆம் நாள் பிரான்ஸ் தேசத்தில் ஆனந்தமாக திருமண வாழ்வில் இணைந்தனர். தத்தம் சுய சரிதங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிரான்ஸ் நாட்டிலேயே வாழ்க்கையைக் கழித்தார்கள். காதலின் முழு பரிணாமத்தையும் வாழ்ந்து காட்டிய எட்வர்ட் 1972-ல் இவ்வுலக வாழ்க்கையை நீத்தான். அவன் காதல் மனைவி வாலிஸ் சிம்ஸன் 1986 அவனைப் பின்தொடர்ந்தாள்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. இவரது செயலை பாராட்டலாம். ஆனால் காதலுக்காக அரசபதவியை மட்டுமல்ல மக்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பையும் நழுவவிட்டது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்துகிறது.நன்றி! உங்கள் எழுத்துக்கு நான் புதிய வாசகன் ... வாழ்த்துக்கள் !!! https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு