Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஹிட்லரின் இதயத்தை ஈரப்படுத்தியவள்

1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி அதிகாலை. இவா ப்ரெளன் என்னும் இனிமையான பெயர் கொண்ட அந்த அழகிய பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அந்த அதிகாலை.ஏறக்குறைய 16 ஆண்டுகளாக அவள் அந்த தங்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.ஆம்! 16 ஆண்டுகளாக அவள் உயிருக்கு உயிராக காதலித்து கொண்டிருந்த அவளது காதலன், அவளை அந்த தருணத்தில் மணம் புரிந்துகொள்ளப் போவதாக வாக்களித்திருந்தார். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில், ஒரு மாபெரும் மாளிகையில் ரகசிய திருமணம் என்று முடிவாகியிருந்தது. அதிகாலைப் பொழுதில் திருமணத்தை நடத்தி வைக்க பாரதியார் ஒருவர் ரகசியமாக மாளிகைக்கு
அழைத்துவரப்பட்டார்.இவா ப்ரெளன் மணப் பெண்ணுக்கு உரிய பளபளப்பான கரிய நிற ஆடையை மகிழ்வுடன் அணிந்து கொண்டாள். மணமகனும் அலங்கரித்துக் கொண்டான். இருவரையும் பாதிரியார் அருகருகே நிற்க வைத்து திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டார். இவா ப்ரெளன் உதிர்த்த 'சம்மதம்' என்ற ஒற்றை வார்த்தையில் ஆயிரம் சம்மதம் இணைந்து இருந்தது அவளது காதலன் ஒப்புதல் அளித்தான்.

 பாதிரியார் மணமக்களிடம் மோதிரம் மாற்றிக் கொள்ளச் சொன்னார். இவா ப்ரெளன் மிகவும் நெகிழ்ந்திருந்த தருணம் அது.  கண்களில் கரை கட்டியிருந்த நீரை வெளிப்படுத்தாமல் காதலனின் விரலில் மோதிரத்தை மாட்டினாள். அவளது காதலனும் அவளது விரலில் மோதிரத்தை மாட்டினான்.  அந்தத் திருமணம் வெகு ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகனுக்கு மிகவும் நெருக்கமான இரு நண்பர்கள் மட்டும் அங்கே கூடியிருந்தனர். சோகம் கப்பிய முகத்துடன் காட்சியளித்த அவர்கள்  சோகையாக கைதட்டினார்கள்.
திருமணம் நடந்தேறிய முப்பது மணிநேரத்தில். அந்த புது மணமகனும் மணமகளும் கொடிய சயனைடு விஷமருந்தி அதே மாளிகையில் தற்கொலை செய்துகொண்டு மடிந்தனர்.
ஒரு தற்கொலையில் தனது மகத்தான வாழ்க்கையை முடித்துக் கொண்ட அந்த மணமகன் அடால்ப் ஹிட்லர்!.உலகின் மிகப்பெரும் சாபக்கேடு என்று வர்ணிக்கப்பட்ட ஜெர்மானிய கொடுங்கோலன். 1930 மற்றும் 40-களில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை நசுக்கி, அப்பாவி மக்களை இலட்சக்கணக்கில் சித்ரவதைக்கு உள்ளாகிக்  கொன்றவன்.
அவன் வாழ்விலும் ஒரு காதலா? அந்த  சர்வாதிகாரியை, உலகின் மிகக் கொடூரமான கொலைகாரனை அவ்வளவு ஆழமாக நேசிக்கும் ஒருத்தி இருந்தாளா? அவளுக்குள் எப்படி நிகழ்ந்தது காதல் என்னும் அந்த ரசவாதம்?

கான்வென்ட் படிப்பை முடித்து பள்ளியிலிருந்து அப்போதுதான் வெளியே வந்துயிருந்தாள். இளமை அவளை உலக அழகியாக ஊருக்கு காட்டியது. அவளிடம் தங்களது காதலை சொல்லி ஏமாந்து போனவர்கள் எவ்வளவோ பேர்! யாரையும் அவள் ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. தன்னுடைய பதினேழாவது வயதில், ஹிட்லரின் அந்தரங்கப் புகைப்படக்கலைஞர் ஹாப்மேன் என்பவனின் உதவியாளராக அவள் பணியாற்ற துவங்கினாள். அதுவரை ஹிட்லர் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருந்தாளே தவிர, ஒரு நாளும் அவளை பார்த்ததில்லை. ஒரு நாள் அவளைவிட 23 வயது மூத்த ஹிட்லருடன் அந்த எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது.அந்த சந்திப்பில்தான் இவா ப்ரெளனின் வாழ்க்கை தடம் புரண்டது. வாழ்க்கை என்று எனக்கு இனி ஒன்று இருந்தால். அது  ஹிட்லருடன்தான் என்று அந்த முதல் சந்திப்பிலேயே அவள் முடிவு செய்தாள். அந்தக் காதலுக்கு நிச்சயம் உடல் கவர்ச்சி ஒரு காரணமல்ல. பின், அந்தத் தருணத்தில் அவளது உள்ளத்தில் ஹிட்லர் மேல் அப்படி ஒரு ஆவேசமான காதல் அரும்பியது எதனால்? இவா ப்ரெளனுக்கே அந்த கேள்விக்கான பதில் தெரியவில்லை!. அதன் பிறகு, இவ்வுலகில் இருந்த அடுத்த 16 ஆண்டுகளும் அந்தப் பேதைப்பெண் வாழ்ந்தது ஹிட்லருக்காக மட்டும்தான். அவள் மடிந்ததும் அவனுக்காகத்தான். பெற்றோர்களின் எதிர்ப்பு, சமுதாயத்தின் நிராகரிப்பு என எதனாலும் அவளை மாற்ற இயலவில்லை, அவள் மனதை கலைக்க முடியவில்லை.

ஜெர்மானிய அரசியலில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ஹிட்லர், மக்களிடம் தன் செல்வாக்கை நிலைநாட்டிக்கொள்ள அவளுடனான உறவை வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருந்தான். இவா ப்ரெளனுக்கு அது கொச்சையாக தெரியவில்லை. ஜெர்மானிய அதிபரின் 'பட்டமகரிஷி' என்ற கௌரவமும், ஹிட்லருடன் பகிரங்கமாக பவனி வரும் அதிர்ஷ்டமும் அவளுக்கு இல்லை. மனித உருவில் வலம் வரும் ஆட்கொல்லி மிருகம் என்று உலகமே அவள் காதலனைத் தூற்றியதையும் அவள் பொருட்படுத்தவில்லை. ஹிட்லர் பல நேரங்களில் இவா ப்ரெளனை தன்னை விட எல்லா வகையிலும் தாழ்ந்த பிறவியாக கருதினான். அவள் மீது சாதாரண பரிவு காட்டுபவனாகக்கூட நடந்துகொள்ளவில்லை. இருப்பினும் இவா ப்ரெளவின் காதலும் விசுவாசமும் எள்ளவும் குறையவில்லை. கொலை முயற்சி ஒன்றிலிருந்து ஹிட்லர் தப்பித்த போது அவள் அவனிடம் சொன்னாள். "அன்பே, நான் வாழ்வது உன் மீதுள்ள காதலினால் மட்டும்தான். என் வாழ்வும், நீ மூச்சை நிறுத்தும் வரைதான்". ஹிட்லரின் இதயத்தை நனைய வைத்தது இந்த ஈர வார்த்தைகள்தான். அவனது இரும்பு இதயத்தை அடர்த்தி குறையாத  பாதரசமாக உருகியதும் இதே ஈர வார்த்தைகள்தான்.

1945 உலகை உலுக்கிய இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. மனித குலத்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த ஹிட்லரின் ஜெர்மானியப் படை போரில் பெரும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தது. ரஷ்யப் படைகள் ஜெர்மனி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி, தலைநகர் பெர்லினைச் சுற்றி வளைத்துக்கொண்டன. ஹிட்லரை எப்படியாவது உயிருடன் பிடிக்க வேண்டும் என்பது அந்த  செம்படையின் ஒரே நோக்கம். எஞ்சியிருந்த ஹிட்லரின் தோழர்கள் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தனர். மரணம் தன் கைகளை அகல விரித்து காத்திருந்த அந்த நேரத்தில், ஹிட்லர் இவா ப்ரெளனிடம்  தன்னை விட்டு விலகச் சொன்னான். இவா ப்ரெளன் சம்மதிக்கவில்லை. ஹிட்லரின் இதயம் இன்னும் இளகியது. இவா ப்ரெளனிடம் தனது காதலைத் தெரிவித்தான். அவளை மணந்துகொள்ள சம்மதித்தான். ஹிட்லரின் மாளிகையின் பாதாள நிலறையில், இரண்டே இரண்டு பேர் சாட்சியாக இருக்க, இவா ப்ரெளன்,ஹிட்லரை கைப்பிடித்தாள். பளபளக்கும் கருப்பு நிற ஆடையில் வெட்கத்திலும், முகம் நிறைந்த புன்னகையிலும் ஜொலித்த அந்த புது மணப்பெண் திருமண சான்றிதழில்"இவா ஹிட்லர்"  என்று மிகப் பெருமிதத்துடன் கையெழுத்திட்டாள். தன் உயிர்க் காதலனுடன் ஒரு நாள், ஒரே ஒரு நாள் திருமண வாழ்க்கை நடத்திய நிறைவுடன், அடுத்த நாள் பகலில் ஹிட்லருடன் சேர்ந்து விஷமருந்தி உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். அப்போது, அவளுக்கு வயது 33 யாருக்காக வாழ்ந்தாலோ அவனுக்காகவே, அவனுடனேயே  அவள் வாழ்க்கையும் முடிந்தது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. இதைப் படிக்கும் போது மனது மிகவும் கனமாக இருக்கிறது.காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது சரிதான். காதல் யார் மேல் எப்படி வரும் எப்பொழுது வரும் என்று சொல்லமுடியாது.

    பதிலளிநீக்கு