Ad Code

Ticker

6/recent/ticker-posts

கல்லறையில் உறங்கும் ஆபிரகாம் லிங்கனின் காதல்

காதலின் காரணமாக மெழுகாக உருகி வாழ்க்கையை தொலைப்பது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான். ஒரு பெண்ணை உயிரை விட மேலாக நேசித்து அதன் காரணமாக வாழ்க்கை முழுவதும் வாடிய ஓர் உன்னத காதலன் ஆபிரகாம் லிங்கன்! உலக வரலாறு கண்ட மாமனிதர்களில் ஒருவர். மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வளர்ந்து, சுயமுயற்சியால் கல்வியறிவு பெற்று, அரசியல் உலகில் கால்பதித்து, போராடி வெற்றி கண்டு, அதிபராக உயர்ந்து சரித்திரத்தில் தனக்கென ஓர் இடம் பிடித்தவர். அமெரிக்காவில் பலகாலம் நிலவிவந்த அடிமை முறையை முடிவுக்கு கொண்டு வந்து. அதனால் மூண்ட பெரும் உள்நாட்டுப் போரை அடக்கி, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டியவர். உறுதியும், கொள்கைப் பிடிப்பும், தளராத தன்னம்பிக்கையும், போராடும் குணமும் கொண்ட கடுமையான மனிதர் என்று உருவகப்படுத்தப்பட்ட லிங்கனுக்கும் ஒரு மென்மையான மறுபக்கம் இருந்தது.

ரசியல் உலகில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள இளைஞர் லிங்கன் போராடிக் கொண்டிருந்த காலம் அது! சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒருமுகப்பட்ட உணர்வுடன் உழைத்துக் கொண்டிருந்த லிங்கனின் மனதில், அழகியதொரு சலனத்தை ஏற்படுத்தினால் ஆன் மேய்ஸ் ரட்லெட்ஜ்.1813 ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் நாள் அவள் பிறந்த போது, அவளது தந்தை மகளுடைய அழகிய கண்களை பார்த்து," ஏய்.. என் நீலக் கண்ணழகி..." என்று பெருமை பொங்க அழைத்தார். அவரது தந்தை அப்போது நியூ சலேம் நகரில் விடுதி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்.ஊரில் அப்போது பள்ளிக்கு சென்று படித்த பெண்களே கிடையாது. நியூ சலேம் நகரின் அந்த அவலத்தை மாற்ற எண்ணம் கொண்டார்  ஆன் மேய்ஸ் ரட்லெட்ஜ் தந்தை. தனது பிரிய மகளை பள்ளிக்கு அனுப்பினார்.  ஆன் மேய்ஸ் ரட்லெட்ஜ் பள்ளிக்குச் சென்று வந்த நேரம் தவிர, தந்தை நடத்தி வந்த பயணியர் விடுதியை நிர்வகுப்பதிலும்  உதவி புரிந்த வந்தாள். கம்பளிப்பூச்சியை அழகிய பட்டாம்பூச்சியாக காலம் உருமாற்றுவது போல, பயணியர் விடுதியை நடத்தும் ஒரு சாதாரண மனிதரின் ஒரு சாதாரண பெண்ணான ஆனையும் புத்திசாலியான அழகிய இளம்பெண்ணாக மாற்றியது.பொன்னிறக் கூந்தல், நீல நிற கண்கள், சிரித்த முகம், நட்பான பார்வையுடன் பார்ப்பவரை வசீகரிக்கும் தோற்றம், அவள் ஒரு நல்ல பெண்ணாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த மாணவியாகவும் மற்றவர்களால் பாராட்ட பெற்றாள். அப்போது நகருக்கு புதிதாக வந்து சேர்ந்தார் லிங்கன். சில காலம் ஆனின் தந்தை நடத்திய விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தார். லிங்கனுக்கும் ஆனுக்கும்  இடையே நட்பு மலர்ந்தது.

லிங்கனின் புத்திசாலித்தனம், உள்ளூர இருந்த போராட்ட குணம், புன்னகை மாறாத முகம், யாரையும் புண்படுத்தாத பேச்சு எல்லாமே அந்த நீல கண்ணழகியைக் கவர்ந்தன. பாடங்களில் சந்தேகம் என்ற ஒரு சாக்கை வைத்துக் கொண்டு லிங்கனுடனான சந்திப்புகளை அடிக்கடி ஏற்படுத்தி கொண்டாள். லிங்கன் மீது தனக்கு காதலா? இல்லை வெறும் இனக்கவர்ச்சியா? என்பதை அவளால் அப்போது பகுத்து உணரமுடியவில்லை. லிங்கனும் தன் மேல் படர துடித்த அந்த தளிர்கொடியின் உள்ளக்கிடைக்கையை உணர்ந்து கொண்டார். அவளது உள்ளத்தில் அவர் மீது காதலெனும் புஷ்பம் விகசிக்கும் முன்பே அவர் இதயத்தில் அந்தப் பூ முழுமையாக மலர்ந்து விட்டிருந்தது. தனது காதலை அந்த நீல கண்ணழகியிடம் ஓர் ஆண்மகனாக கம்பீரமாக ஒருநாள் எடுத்துரைத்தார்.லிங்கனின் உண்மையான அணுகுமுறை ஆன் ரட்லெட்ஜை அந்த கணமே தணலில் இட்ட மெழுகாக உருகி விட்டது. லிங்கனின் உண்மை காதலை அவள் என்றாள். அந்த உன்னதமான தருணத்திலேயே அவளது இதயம் முழுக்க லிங்கன் நிறைந்திருந்ததை உணர்ந்தாள். அந்தப் பறவைகளுக்கு காதல் சுகமானதோர் புது அனுபவமாக இருந்தது. இளம் காதலர்கள், தங்களின் தனி உலகில் சிறகடித்துப் பறந்தன. லிங்கன் சட்டக் கல்வியில் பட்டம் பெற்ற பின், 1833 இல் இருமனங்கள் இணையும் திருமண விழாவை ஊர் உலகை சாட்சியாக வைத்து நடத்தலாம் என்று தீர்மானித்தனர். பறவைக்கூடுகள் நிறைந்த மரங்களுக்கிடையே கட்டப்பட்ட இல்லத்தில் வாழ்க்கை. அந்த இல்லத்தைச் சுற்றி சுற்றி ஓடி வர அவர்கள்  பெற இருந்த மழலைகள் என ஆசை, ஆசையாக மனக்கோட்டைகள் கட்டினார்.

னால் 1835-ல் ஆன் திடீரென டைபாய்டு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடினாள். அவளது நிலைமை மோசமானது. கட்டிலில் கயிறாக கிடந்த அவள் லிங்கனைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். லிங்கன் அவளை சென்று பார்த்தார் "அன்பே, என்னை ஒரு முறை 'நீலக் கண்ணழகி' என்று அழைப்பீர்களா"என்று கேட்டாள்.லிங்கன் தனது இதயத்தில் பொங்கிய காதலையெல்லாம் திரட்டி, உருகவைக்கும் குரலில், "என் அன்பே, நீலக்கண்ணழகி" என விளித்தார்.ஆன் திருப்தியான புன்னகைசெய்தாள். அன்பே இன்னுமொரு வேண்டுகோள்.
"'என் காதல் ஆப்ரஹாம் லிங்கனுடன் இணைந்த துணைவியான ஆன் ரட்லெட்ஜ, மரணம் தந்த பிரிவால் இந்த கல்லறையில் உறங்குகிறேன்' என்று எனது கல்லறையில் பொறித்து வைப்பீர்களா?" என்று கேட்டாள்.வேதனை முட்கள் லிங்கனது இதயத்தை இண்டு, இடுக்கு விடாமல் கீறி ரத்தக்களறியாக்கின. அவர் குலுங்கினார். ஆன் அவரது கைகளைப் பற்றி ஆறுதல் அளித்தாள். புன்னகை மாறா முகத்துடன் விடைகொடுத்தாள். லிங்கன் வெளிறிப்போன முகத்துடன் வெளியே வந்தார். நடைப்பிணமாக நடந்தார். ஆனின் சகோதரி நான்சி தங்கையின் காதலன் பொலிவிழந்து நடைப்பிணமாக சென்றதை துக்கம் முட்டும் நெஞ்சுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த சந்திப்புதான் லிங்கன், நீலக்கண்ணழகியைச் சந்தித்த  இறுதி சந்திப்பாக அமைந்தது.
1835 ஆகஸ்ட் 25 ஆம் நாள் தனது 22வது வயதில் ஆன் என்னும் அந்த வாடாமலர் உதிர்ந்தது. லிங்கன் துடித்து போனார். அவள் கல்லறையிலேயே நாட்கணக்காக பழியாகக் கிடந்தார். காதலி விரும்பியபடி அவளது இதயத்தில் இடம் பெற்றிருந்த எழுத்துக்களை கல்லில் பொறிக்கச் செய்தார். எளிதில் உணர்ச்சிவசப்படாதவர், வாய்திறந்து தனது துன்பங்களை வெளியிடாதவர், அரசியல் வாழ்வில் தான் பெற்ற பெரும் தோல்விகளைக் கூட அமைதியாக ஏற்றுக் கொண்டவர் என்றெல்லாம் பெயர் பெற்றவர் லிங்கன். ஆனால், ஆனின் மறைவினால் ஏற்பட்ட துக்கம் மடை திறந்த வெள்ளமாகப் பாய்ந்த காரணத்தினால்," ஐயோ, கல்லறையிலுள்ள என் ஆன், இப்போது பெய்யும் இந்த மழையில் நனைகிறாளே" என்று நண்பர்களிடம் கதறினார். தற்கொலைக்கு கூட துணிந்துவிட்ட லிங்கனிடமிருந்து   கத்தி போன்ற அபாயகரமான பொருட்களை நண்பர்கள் மறைத்து வைத்தார்கள். சிறு வயதில் தாயை இழந்து, அதனால் தன்னலமற்ற அன்பிலிருந்து வஞ்சிக்கப்பட்ட லிங்கன், அதை மீண்டும் பெற்றது காதலி ஆன் ரட்லெட்ஜிடமிருந்துதான். வேம்பின் கசப்பும், தேனின் இனிப்பும் அடி நாக்கிலேயே    மிச்சமிருப்பது போல் அவளது நினைவும் காதலும் லிங்கனின் வாழ்நாள் முழுவதும் அவரிடம் மிச்சமிருந்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்