Ad Code

Ticker

6/recent/ticker-posts

நட்பின் உயர்வு

ங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இரத்த சம்பந்தமில்லாத இருவரிடம் தோன்றும் ஒருவருக்கு ஒருவர் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு இருவரிடையே ஏற்படும் மனப்பிணைப்பே நட்பு என்ற வார்த்தையில் அழைக்கப்படுகிறது. ஆதி காலம் தொட்டு இன்றுவரை காதல் மற்றும் வீரத்தின் பெருமைகளை பறைசாற்றும் இதிகாசங்கள் அனைத்திலும் நட்பின் பெருமையும் கூறப்பட்டு வந்துள்ளது. வான்புகழ் வள்ளுவன் தன்னுடைய பொய்யாமொழி நூலில் நட்பு மற்றும் கூடா நட்பு பற்றி மிக அழகாக எடுத்துரைத்துள்ளார். வர்ணங்களைத் தாண்டிய நட்புக்கு துரியோதனன் மற்றும் கர்ணன் நட்பை கூறலாம். பாண்டவர்கள் தன்னுடைய சகோதரர்கள் என்று தெரிந்தும் இரத்த பாசத்தினால் பிணைக்கப்பட்டவர்கள் என்று பிற்காலத்தில் தெரிந்தும் அவர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்தான் கர்ணன். அதற்கு காரணம் துரியோதனன் தீயவனாக இருந்த போதிலும் நட்பின் வலிமையால் கர்ணன் அவனுடன் பிணைக்கப்பட்டிருந்தான்.மனம் ஒத்த இரு நண்பர்கள் ஒருவருக்கு ஏற்படும் இன்னல்களை போக்க உடனடியாக வருவர் என்பது துரியோதனன் கர்ணன் நட்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். விளையாட்டு அரங்கில் அர்ச்சுனுடன் போட்டியிட கர்ணன் விரும்பியபோது கர்ணனின் பிறப்பறியாத  நிலையில் அவன் தேரோட்டியின் மகன் என கூறப்பட்டு அரச குல இளவல்களுடன் போட்டியிட முடியாது எனக் கூறி கர்ணனை அவமானப்படுத்தினார். அந்நிலையில் துரியோதனன் கர்ணனை அங்க தேச மன்னனாக்கி அரசகுலத்தினருடன் சரிநிகர் சமமாக அமரும்படி செய்தது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாக திகழ்ந்து. மேற்கூறிய இருவரின் நட்பு இடுப்பில் உள்ள ஆடை நழுவி விட்ட நிலையில் ஒருவனது கை அவனை அறியாமலேயே விரைந்து சென்று அவனது மானத்தைக் காப்பாற்றும். அது போல நண்பனுக்குத் துன்பம் வந்த வேளையில் அவனை மன்னனாக்கி அவனுடைய மானத்தைக் காத்தான் துரியோதனன். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மீறிய நட்புக்கு கண்ணன் குசேலன் நட்பை எடுத்துக்காட்டாக கூறலாம். ஒரு அரசனும் ஆண்டியும் என்றும் நட்போடு பழக  இயலாது. அப்படி இருந்த காலத்தில் பிள்ளைப் பிராயத்தில் பள்ளியில் பயின்ற காலத்தில் நட்பாக இருந்த ஏழை குசேலனின் வாழ்க்கைத் தரத்தை பிற்காலத்தில் அரசன் கண்ணன் மிக உயர்த்தினான். அறிவால் பிணைக்கப்பட்ட  நட்பிற்கு அதியமான் மற்றும் அவ்வை பிராட்டியின் நட்பை ஒரு சான்றாக உரைக்கலாம். நீண்ட நாள் ஆயுளைக் கொடுக்கும், ஒரு அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது மொழிக்காக தொண்டு செய்து வரும் அவ்வைப் பிராட்டி நீண்ட நாள் வாழ்ந்து தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அக்கனியை ஔவைக்குக் கொடுத்தவன் அதியமான் ஆவான்.


கண்ணால் பார்க்காமல் மனதால் மட்டுமே நட்பாக இருந்த நிலைக்கு சோழன் மற்றும் பிசிராந்தையார் நட்பையும் நாம் எடுத்துக்காட்டாக கூறலாம். தன்னுடைய நண்பன் வடக்கிலிருந்து உண்ணா நோன்பின் மூலம் உயிர் துறக்க எண்ணியுள்ளான் என்பது அறிந்து அதுவரை அவரை காணாமல் கேள்வி வாயிலாகவே நட்பாக இருந்து வந்த பிசிராந்தையார் தானும் வடக்கிலிருந்து தன் நண்பனுடன் உயிர் நீத்தது நட்பின் இலக்கணத்தை உச்சமாகும்.
'முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு'.
என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப கோப்பெருஞ்சோழனும் தமிழ் புலவர் பிசிராந்தையார் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் நட்பு கொண்டிருந்தனர். வாழ்க்கையில் நிறைவு எழுதியவர்கள் உண்ணா நோன்பிருந்து இறைவனடி சேர விரும்புவர். அவ்வாறு சோழன்
வடக்கிருக்கும் செய்தி அறிந்த பிசிராந்தையார் வருவார் என்று எண்ணிய அவன் பிசிராந்தையாருக்கும் ஒரு இடத்தினை ஒதுக்கும் படி கூறினான். அதேபோல் பிசிராந்தையாரும் அங்கு வந்து மன்னனுடன் சேர்ந்து உயிர் நீத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்