"ஒரு பெரிய இலக்கை நோக்கி நடக்கிறவன் வழியில் தன்னை பார்த்து குரைக்கும் தெருநாய்கள் மேல் கல் எறியகூடாது. அப்படி செய்தால் அவன் போய் சேரவேண்டிய இடத்துக்கு போய்சேரமாட்டான்" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.


1532-இல் ஆட்டொமான் படைகள் வியன்னா மேல் படை எடுக்கின்றன. போரில் முக்கியமானது படைகள் என நினைத்தாலும், போருக்கு மிகவும் முக்கியமானது நேரம் தான். மழைக்காலம் முடிந்து ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் படைகள் துருக்கியில் இருந்து கிளம்ப முடியும். 1 லட்சம் பேர் கொண்ட அப்படை, உணவுப்பொருட்கள் மற்றும் சப்ளைகளை ஏற்றிக்கொண்டு வரும் வண்டிகள் மெதுவாக நகர்வதால் நாள் ஒன்றுக்கு 10 கிமி தான் பயணிக்க முடியும்.


இஸ்தான்புல்லில் இருந்து வியன்னா வரை உள்ள சுமார் 1,400 கிமி தொலைவை இப்படிக் கடந்து வியன்னா சென்றடைய ஆகஸ்டு மாதமாகிவிடும். அதுவரை மழை பெய்தால் வெடிமருந்துகள் நனையாமல் பாதுகாக்க வேண்டும். அக்டோபரில் குளிர்காலமும் பனிப்பொழிவும் துவங்கிவிடும் என்பதால், அவர்களுக்கு கிடைத்த அந்த இரண்டு மாத இடைவெளியில் கோட்டையைக் பிடித்தாக வேண்டும்.


ஆஸ்திரிய பேரரசு அவர்களை வழியிலேயே முடக்க ஒரு திட்டத்தை தீட்டியது. வழியில் இருந்த கெஸக் கோட்டை சுவர்களை கற்சுவர்கள் ஆக்கி, பல லேயர்களில் கல்சுவர்களை அமைத்தார்கள்.ஏராளமான ஆயுதங்களை கொடுத்து,, 800 பேரை மட்டுமே அங்கே நிறுத்தினார்கள். "ஒரே வாரம் தாக்கு பிடியுங்கள். வியன்னா முற்றுகை நேரத்தில் ஒரு வாரம் குறையும். அவர்கள் அதை கணக்குபோட்டுக்கொண்டு இங்கே வரமாட்டார்கள்" என்றார்கள்.


கெஸக் கோட்டையை ஆட்டொமான் படைகள் புறக்கணித்துவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் சரணடையச் சொன்னபோது கோட்டை கேப்டன் நிக்கோலா யூரிசிச் அதை மறுக்க, அதில் வந்த கோபத்தில் ஓரிரு நாளில் பிடித்துவிடலாம் என நினைத்து ஆட்டோமான் படைகள் முற்றுகையிட்டன. அந்த கோட்டை ஒரு வாரம் அல்ல, ஒரு மாதம் தாக்குபிடித்தது. அதன்பின் வியன்னாவை பிடிக்க இருந்த நேரத்தில் ஒரு மாதம் குறைந்ததால், ஆட்டொமான் படைகளால் இலக்கை அடைய முடியாமல் இஸ்தான்புல் திரும்பின.


1941 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் மேல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது ஜப்பான். அதன்பின் அமெரிக்கா ஜப்பான் மேல் தாக்குதல் நடத்தும் என தெரியும். ஆனால் அமெரிக்காவில் இருந்து நேரடியாகச் சென்று ஜப்பானை தாக்க அன்றைய விமானங்களிடம் போதிய பறக்கும் திறன் இல்லை.


பசிபிக் கடலில் இருக்கும் சிறு தீவுகளை பிடித்து, அங்கே படைதளம் அமைத்துதான் தாக்கமுடியும்.இதை உணர்ந்த ஜப்பான், பசிபிக் கடலில் இருக்கும் நூற்றுக்கணக்கான சிறுதீவுகளை பிடித்து ஒவ்வொன்றிலும் பத்தாயிரக்கணக்கில் படைவீரர்களை இறக்கியது. தீவுகளில் குழிதோண்டி, சுரங்கம் அமைத்து, டன்கணக்கில் கேன் உணவுப்பொருட்கள், ஆயுதங்களுடன் காத்திருந்தார்கள்.


பத்தாயிரக்கணக்கில் உயிர்களை பலிகொடுத்துதான் ஒவ்வொரு தீவையும் பிடிக்கமுடியும் என்ற நிலை வந்தபோது, அமெரிக்கா ஆட்டோமான் படைகள் செய்த தவறை செய்யவில்லை. அவர்கள் ஜப்பான் வலுவாகப் பாதுகாத்த அனைத்துத் தீவுகளிலும் தரையிறங்கவில்லை. 'தீவு தாவுதல்' (Island Hopping) என்ற உத்தியைப் பயன்படுத்தி, தேவையற்ற தீவுகளை முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள்.


அந்தத் தீவுகளுக்கு உணவு மற்றும் ஆயுதச் சப்ளை செய்த ஜப்பானிய கப்பல்களைக் கடற்படையால் வழிமறித்து அழித்தார்கள். சப்ளை இன்றி தீவுகளில் இருந்த ஜப்பானிய படைகள் முடங்கின. அமெரிக்கா தேவையற்ற மோதல்களைத் தவிர்த்து, நேரடியாக ஜப்பானுக்கு அருகில் இருந்த மிக முக்கியத் தீவுகளை மட்டும் கைப்பற்றி, அங்கிருந்து விமானத் தளங்களை அமைத்து தாக்குதல் நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.


போரிலும் வாழ்விலும், நம் முன்னே வரும் அனைத்துச் சவால்களோடும் போரிட வேண்டிய அவசியமில்லை.  நம் முக்கிய இலக்கை ஒருபோதும் மறக்கக் கூடாது; 


தெருச்சண்டைகளில் கவனத்தைச் சிதறவிட்டு நேரத்தையும் ஆற்றலையும் வீணடிப்பதைக் காட்டிலும், இலக்கை நோக்கி நேராகச் செல்வதே உண்மையான உத்தி.