Ad Code

Ticker

6/recent/ticker-posts

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே | Wealth is the Fulfillment of Mind | Tamil Motivational & Spiritual Quotes 2025

 



" செல்வம் என்பது சிந்தையின் நிறைவே "


மகிழுந்தில் சிலர் மகிழ்ச்சியாகச் செல்வதைக் காணும்போதும்,  சிலர் வசதியாக வாழ்வதைக் காணும்போதும் "இவர்களின் வாழ்க்கை மட்டும் இவ்வளவு செழிப்பாக இருக்கிறது. ஆனால்,  நம் வாழ்க்கை மட்டும் ஏனோ  சீரழிந்துபோய் இருக்கிறதே "   என்று நாம் ஏங்குவதுண்டு . எப்போதுமே மற்றவர்கள் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.  அவரவர் வாழ்க்கை அவரவர் வினைப்பயன்.  அதனால் மற்றவர்கள் வாழ்க்கையைப் பார்த்து நாம் எப்போதுமே பொறாமைப்படக் கூடாது.  அவர்கள் செல்வாக்கோடு வாழ்கிறார்களே நாம் மட்டும் செல்லாக்காசாய் வாழ்கிறோமே என்று எண்ணி ஒருபோதும் வருத்தப்படக்கூடாது. அப்படிப்பட்ட சூழலில் "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு " என்ற கண்ணதாசன் பாடலைத்தான்  நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பாடலோடு சேர்த்து  குமரகுருபரர் எழுதிய இந்தப் பாடலையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


"கொடியும் முரசும் கொற்றவெண் குடையும்

பிறர்கொளப் பொறாஅன், தானே கொண்டு

பொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கி,

செவியிற் கண்டு, கண்ணில் கூறி,

இருநிலம் புரக்கும் ஒருபெரு வேந்தன்


மிக்கோன் ஒருவன் வெறுக்கை நோக்குழித்

தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற,

இழப்புறு விழுமம் எய்தி, அழுக்கறுத்து

மற்றது பெறுதற்கு உற்றன தெரீஇ

அயிற்சுவை பெறாயன், துயிற்சுவை யுறாஅன்,


மாணிழை மகளிர் தோள்நலங் கொளாஅன்,

சிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து,

கவலை உற்று அழிவதூஉங் காண்டும், விறகெடுத்து

ஊர்தொறும் சுமந்து விற்று, கூலிகொண்டு,

புற்கையும் அடகும் மாந்தி, மக்களொடு


மனையும் பிறவு நோக்கி, அயன்மனை

முயற்சியின் மகனை இழித்தனன் எள்ளி,

எனக்கு இணை இலையென இனையன் மற்றொருவன்

மனக்களிப்பு உறீஇ மகிழ்வதூஉம் காண்டும், அதனால்

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே,

அல்கா நல்குரவு அவா எனப்படுமே. " 


( குமரகுருபரர், சிதம்பர மும்மணிக் கோவை )


அரசன் ஒருவன்,  தன்னுடையதை விட, பிற அரசனுடைய செல்வம் மிகுந்து இருப்பதாக எண்ணினான். தன்னிடத்தில் உள்ள பொருளை இழந்தால் உண்டாகக் கூடிய துன்பத்தை, அதை இழக்காது உள்ளபோதே வருவித்துக் கொண்டான். பொறுமையை அவன் இழந்து, பொறாமை வடிவம் ஆயினான். மேலான செல்வத்தைப் பெறுவதற்கு உரிய வழிகளை ஆராய்ந்தான். அது அவனுக்குக் கவலையையே உண்டாக்கியது. உண்டு மகிழ்ந்து இருந்ததையும், உறங்கி மகிழ்ந்து இருந்ததையும் மறந்தான். தனது மனைவியிடத்து அடையும் மகிழ்ச்சியையும் மறந்தான். அவன் விடுவதோ பெருமூச்சு. அதனால் வழங்குவதோ சிறுகாற்று. எவ்வளவு முயன்று பெருமூச்சு எறிந்தாலும், அது பெருங்காற்று ஆகாது.  இப்படிக் கவலையினாலேயே ஒரு பெருஞ்செல்வந்தன் அழிவதும் உண்டு.


     நாள்தோறும் விறகு வெட்டி அதைக் கட்டிச் சுமந்து கொண்டுபோய், ஊர்தோறும் விற்றுக் கூலி வாங்கிக் கொண்டு, அதனைக் கொண்டு, புல்லரிசிக் கூழும் இலையுணவும் உண்டு மகிழ்வான். தனித்து உண்ணமாட்டான். மனைவி மக்களுடன் உண்டு களிப்பான். தன் வீட்டு நிலையை, அயல் வீட்டு நிலையோடு எண்ணிப் பார்ப்பான். தன் முயற்சியையும், அதன் விளைவால் தனக்கு உண்டாகும் பயனையும் எண்ணுவான். இந்த நிலைமை அயல் வீட்டானிடத்தில் இல்லை என்பதையும் அறிவான். எனக்கு இணையாக யாரும் இல்லை என்று எண்ணி மனமகிழ்ச்சி அடைந்து ஒரு ஏழையானவன் இருப்பதும் கண்டோம். அதனால், செல்வம் என்பது ஒருவனுடைய சிந்தை நிறைவே ஆகும். குறையாத வறுமை என்பது அவா (பொறாமை ) உடைமையே  ஆகும்.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)


Key words 

Wealth mindset quotes ,Positive thinking Tamil ,Motivational quotes in Tamil ,Law of attraction Tamil ,Success motivation Tamil ,Spiritual wealth meaning ,Mind power and success ,Tamil inspirational thoughts ,Money and mindset growth ,Wealth creation through thoughts“How to attract wealth with positive thoughts”“Mind power success in Tamil”“Law of attraction Tamil explanation”“Spiritual way to become rich”“Positive mindset for success”

கருத்துரையிடுக

0 கருத்துகள்