ஓர் ஊரில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும், பொதி சுமக்க ஒரு கழுதையை வளர்த்து வந்தார். கழுதையை வேலைக்காரன் ஒருவன் கவனித்து வந்தான். அவன் பண்ணையாரிடம் வேலைக்காரனாக பணியாற்றி வந்தான்.
பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு இருந்தது. ஏனென்றால், அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தன் வாலை ஆட்டிக்கொண்டே நன்றியைக் காட்டும். அவர் அமர்ந்திருக்கும் போது உரிமையாகச் சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு இறைச்சித் துண்டுகளையும், சுவையான உணவுகளையும் கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார். நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளைப் பண்ணையார் வழங்குகிறாரே என்று பொறாமைப்பட்டது பண்ணையார் வீட்டு கழுதை. நாய்க்குக் கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெறவேண்டும் என்று நினைத்தது.
நாய்போல் தானும் ஒருநாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் என திட்டம் தீட்டியது. கழுதையின் எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது. அது கழுதையைப் பார்த்து, “நண்பா, எனக்கு கிடைக்கும் சலுகைகளைக் கண்டு நீ பொறாமை படாதே, நான் செய்வதைப் போன்றே நீ செய்தால் பண்ணையார் பொறுத்துக் கொள்ள மாட்டார். உன்னை நன்றாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்” என்று அறிவுரை கூறியது. நாய் சொல்வதை எல்லாம் கழுதை தன் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது நாயைப் பார்த்து, “நண்பா! நடப்பதை நீயே பார். பண்ணையார் என் செயலால் எப்படி மகிழ்ச்சி அடையப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்” என்று கூறியது. அதன் பிறகு நாய் எதுவும் பேசவில்லை. அன்றைக்குப் பண்ணையார் வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி அணிந்துகொண்டு வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். உடனே கழுதை விரைவாக ஓடிச் சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது. தன்னுடைய நாக்கால் பண்ணையாரின் முகத்தை நக்கியது. பின்னர் பெரும் குரல் எடுத்து கத்தியது. பண்ணையாருக்குக் கடுஞ்சினம் வந்தது. அருகில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து அந்த கழுதையை நன்கு அடித்துவிட்டார். வலி தாங்க முடியாத கழுதை கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடியது. நம் உடன் இருப்பவர்கள் நல்ல நிலையில் இருந்தால் நாம் பெருமைப்பட வேண்டுமே தவிர பொறாமைப்படக் கூடாது. திறமை இல்லாதவர்களிடம்தான் பொறாமைக்குணம் இருக்கும்.
"அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்."
( திருவள்ளுவர், திருக்குறள் - 163)
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் ( வளர்ச்சியைக்) கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
Key words
அறனாக்கம் வேண்டாதான், thirukkural explanation in tamil, aranaakkam vendathan meaning, thirukkural first kural, arathupal kurals in tamil, திருக்குறள் விளக்கம், 1வது குறள், மாணவர்களுக்கு திருக்குறள், moral values in tamil
0 கருத்துகள்