ஒரு சிலையை செதுக்க சிற்பி தேவை. அதுபோல ஒரு குழந்தையை சிறுவயதில் இருந்தே உருவாக்கி அன்புள்ள, அறிவுள்ள, சமூக அக்கறை உள்ள மனிதர்களாய் மாற்றுபவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களுள் நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவராக தலைவராக இருந்து, கல்வியில் புரட்சி செய்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளே (செப்டம்பர் - 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் என்ற வார்த்தையை பிரித்தால் ஆசு+ இரியர் என்று வரும். ஆசு என்றால் மாசு என்று பொருள். இரியர் என்றால் அகற்றுபவர் என்று அர்த்தம். குழந்தைகளின் உள்ளத்தில் இருக்கிற குற்றங்களை அகற்றி நல்ல மனிதர்களாக உருவாக்குகிற அற்புதப்பணியை செய்பவர்கள் ஆசிரியர்கள். குழந்தைகளை வழிநடத்துகிற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் குழந்தைகளை அணுக வேண்டும். அவர்களுடைய கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை ஆர்வம் தருவதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாற்ற வேண்டும்.
குழந்தைகள் அழுவார்கள், மகிழ்வார்கள், கோபப்படுவார்கள். அதை புரிந்து கொண்டு அவர்களை சிறந்த மாணவர்களாக மாற்றும் திறமை கொண்டவர்கள் ஆசிரியர்கள்
ஒவ்வொரு குழந்தைக்குள் இருக்கிற தனித்திறமையை அறிந்து கொண்டு' அவர்களது இலக்கை நோக்கி வழி நடத்துவது ஆசிரியரின் கடமை ஆகும்.
நமது குழந்தை பருவத்தில் இருந்து நம்மால் மறக்க முடியாத ஆசிரியர்களை நன்றியுடன் நினைத்து பார்ப்போம்.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரும் நேரிலோ, தொலைபேசியிலோ நம்முடைய ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் சொல்வோம்.
இந்த உலகில் சாதனை புரிந்த பலருக்கு பின்னாலும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களால் இந்த உலகம் செதுக்கப்பட்டு இருக்கிறது.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மட்டும் அல்ல, நம் வாழ்க்கை யிலும், பலர் நம்மை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கொண்டாடுவோம். ஆசிரியர் பணி செய்ய முன்செல்வோம். அன்பும், அமைதியும் நிறைந்த உலகை உருவாக்குவோம்
0 கருத்துகள்