தமிழ் அறிவோம்!
" சலியாத கற்ப தரு "
கேட்டதை எல்லாம் கொடுக்கும் மரத்தையே "கற்பகத்தரு " என்பார்கள். பொதுவாக மரங்கள் எல்லாமே கற்பகத்தருதான். இந்த மண்ணுலகம் வாழ தன்னையே தாரைவார்த்துக் கொடுப்பவை மரங்கள் மட்டுமே. மரத்தின் ஒவ்வொரு உறுப்பும் ( பூ, காய், கனி, இலை, வேர், பட்டை) மனிதர்களுக்குப் பயன்படுகின்றன. ஆம், மரத்தின் உறுப்புகள் ஒவ்வொன்றும் உணவில் விருந்தாகவும், உயிர் காக்கும் மருந்தாகவும் மனிதர்க்குப் பயன் தருகின்றன. ஓரறிவு உடைய மரங்கள் பல்வேறு பயன்களைத் தரும்போது ஆறறிவு உடைய மனிதர்கள், இந்த மண்ணுலகிற்கு என்ன பயன் தருகிறார்கள்? மரங்களைப் போல மனிதர்களும் பயன்தர வேண்டும். " மரங்களின் உறுப்புகளைப் போல மனிதர்களின் உறுப்புகளும், உணர்வுகளும் மற்றவர்களுக்குப் பயன் தந்தால், அவர்களும் கற்பகத் தருவைப் போல போற்றப் படுவார்கள் " என்கிறது நீதிநெறி விளக்கம்.
"கண்நோக்கு அரும்பா நகைமுகமே நாள்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை
பலமா நலம்கனிந்த பண்புடையார் அன்றே
சலியாத கற்ப தரு.
(குமரகுருபரர், நீதிநெறி விளக்கம் -36)
தன்னிடம் பொருள்வேண்டி நிற்பவரைக் காணும்போது அவர்களைக் கண்ணால் பார்க்கும் குளர்ந்த பார்வையே அரும்பாகவும், அவரிடத்துக் காட்டும் புன்முறுவலோடு கூடிய முகமே அப்பொழுது மலர்ந்த புது மலராகவும், அவரிடம் உண்மையோடு பேசும் இனிய சொல்லே இன்சுவை மிக்க காயாகவும், அவருக்குக் கொடுக்கும் பெருங்கொடையே பழமாகவும் கொண்டு விளங்கும் நன்மை மிகுந்த பெருந்தன்மையுடைய செல்வந்தர்களே என்றும் கொடுத்தலில் தளராத கற்பக மரத்தை போன்றவர்கள் ஆவர். "இறைக்கிற கிணறுதான் சுரக்கும் " என்பார்கள். வறியோர் வாழ்க்கை வளம்பெற தன்னிடம் உள்ள செல்வங்களை வாரி இறைக்கும் செல்வந்தர்களிடமே செல்வம் மேலும் மேலும் சேரும். இந்த மண்ணுலகில் என்றென்றும் செல்வந்தர்களாக வாழ நீங்கள் விரும்பினால் உங்களிடம் இருப்பதை ஏழை எளியோர்க்கு அள்ளிக் கொடுங்கள். அது பன்மடங்காக உங்களிடம் திரும்ப வரும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்