Ad Code

Ticker

6/recent/ticker-posts

வள்ளுவன் வாசுகி

 




உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். அவரது காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று அறிஞர் பெருமக்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். திருவள்ளுவரைப் பற்றிய முழுமையான வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ,  திருவள்ளுவரும், அவரது மனைவி வாசுகியும் வாழ்ந்த இல்லற வாழ்க்கை பற்றிய எண்ணற்ற தொன்மக் கதைகள் வழக்கில் உள்ளன.  அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம். 


திருவள்ளுவர்  உணவு உண்பதற்கு முன்பாக ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் கொண்டுவந்து வைக்குமாறு,  தன் மனைவி வாசுகியிடம் சொல்வார். வாசுகியும் அவ்வாறே கொண்டு வந்து வைப்பார். அது ஏன் என்று வாசுகிக்குப் புரியவில்லை.  அதற்கான காரணத்தை ஒருநாளும் வள்ளுவரிடம் வாசுகி கேட்டதில்லை. இதற்கான காரணத்தை  வாசுகி தான் இறக்கும் தருவாயில்தான் வள்ளுவரிடம்  கேட்டார்.  " நான் உண்ணும் போதோ அல்லது நீ எனக்கு உணவு பரிமாறும் போதோ சோற்றுப் பருக்கை கீழே சிந்தினால் அதை ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே  அவை இரண்டையும் அருகில் வைக்கச் சொன்னேன். நீ இதுவரை உணவு பரிமாறுகையில் ஒரு சோற்றுப் பருக்கை கூட சிந்தியதே கிடையாது. அதனால்தான் அவை இரண்டும் தேவைப்படாமல் போய்விட்டன.  நாம் உண்ணும் உணவை வீணாக்குவது பெரும் தவறாகும். " என்று பதிலளித்தார் வள்ளுவர். இதைக்கேட்ட வாசுகி தன் ஐயம் தீர்ந்ததை எண்ணி நிம்மதியுற்றார். இந்த நிகழ்வின் மூலமாக இரண்டு உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒன்று, நாம் உண்ணும் உணவை வீணாக்கக் கூடாது.  இரண்டாவது,  பெரியவர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றால் அதில் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஏன்?  எதற்கு?  என்று கேள்வி கேட்காமல்  அதைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். இதைத்தான் வாசுகி கடைப்பிடித்தாள். வாழ்ந்து காட்டினாள். 


ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து வாளி மூலம்  நீர் இறைத்துக் கொண்டிருக்கையில் வள்ளுவர் வாசுகியை அழைக்கிறார். தன் கணவர் தன்னை அழைக்கிறார் என்றதும் சற்றும் சிந்திக்காமல் இழுத்துக் கொண்டிருந்த கயிற்றை அப்படியே விட்டுவிட்டு தன் கணவரை நோக்கிச் செல்கிறார். தன் கணவர் சொன்ன பணிகளைச் செய்துவிட்டு வாசுகி திரும்பி வரும்வரை நீருடன் இருந்த வாளியைத் தாங்கிய கயிறு அப்படியே நின்று கொண்டிருந்ததாம். இந்த வியப்பான  காட்சியைத் தன் கணவரிடம் தெரிவித்திருக்கிறார் வாசுகி. " தன் கணவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு கடமையாற்றும் மனைவியிடம் இயற்கையே கட்டுப்பட்டு நிற்கும் " என்ற உண்மையைக்  கண்டறிந்தார் வள்ளுவர்.  அதை அப்படியே தன் குறட்பாவில் பதிவு செய்தார். 


" தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 

பெய்யெனப் பெய்யும் மழை.  " 


( குறள் - 55)


தன் கணவன் மீது அளவற்ற அன்பு காட்டும் மனைவி பெய்யென்று சொன்னால் அவள்  சொல்லுக்குக் கட்டுப்பட்டு மனமிரங்கி மழை பெய்யுமாம். " இந்த உலகில் அன்புக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை . இயற்கையும் அதற்கு விதிவிலக்கு அன்று "  என்பதே வள்ளுவர் காட்டும் அறமாகும். 


உண்மையான அன்புக்குக் கட்டுப்பட்டதாலே வள்ளுவரின் வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தாள் வாசுகி. வாழ்நாள் முழுவதும் தன் மீது அளவற்ற அன்பு காட்டிய தன் அன்பு மனைவி வாசுகி மீது தன் மொத்த அன்பையும் காட்டும் வாய்ப்பு வள்ளுவருக்கு ஒருநாள்  கிடைத்தது. அது எப்போது  தெரியுமா? வாசுகியின் இறப்பின் போதுதான். கணவன் தன் மனைவியின் மொத்த அன்பையும் புரிந்து கொள்வது அவள் இறப்புக்குப் பின்புதான். கணவன் தன் மனைவிமீது கொண்ட மொத்த அன்பையும் வெளிக்காட்டுவதும் அவள் இறப்புக்குப் பின்புதான். இதுதான்  இயற்கை உணர்த்தும் உண்மை. வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆம்,  வாசுகி இறந்ததும் அதைத் தாங்க முடியாத வள்ளுவர் தன் மனைவிமீது கொண்ட மொத்த அன்பையும் வடித்து பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த உலகில் மனைவியை இழந்து வாடும் எல்லாக் கணவன்மார்களும் அன்போடும், அழுகுரலோடும் உருகிப்பாட வேண்டிய  பாடலாக அது அமைந்துவிட்டது. அப்பாடலை இங்குக் காண்போம். 


" அடியிற்கு இனியாளே அன்புடை யாளே 

படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி 

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் இனிதாஅய் 

என்தூங்கும் என்கண் இரவு. " 


" அடியவனாகிய எனக்கு இனியவளே! என் அன்பின் திருவுருவே ! என் சொல்லுக்கு மாற்றேதும் பேசாமல் என் சொல்படியே நடந்த பெண்ணே! என் கால்களை வருடி என்னை உறங்க வைத்தவளே! நான் உறங்கிய பின்  நீ உறங்கி,  நான் விழித்தெழுவதற்கு  முன்னர் எழும்பும் பேதைப் பெண்ணே!  என்னைத் தனியாகத்  தவிக்க விட்டுவிட்டு நீ மட்டும் போய்விட்டாயே! உன்னைக் காண முடியாத  உலகை நான்  காண விரும்பாமல் என் கண்களை மூடச்சொல்லி என் இமைகளுக்குக் கட்டளையிட்டேன். அவை மூட மறுக்கின்றன. பகலில் மட்டுமல்ல,  இரவிலும் இமைகள் மூட மறுக்கின்றன. துக்கம் வருகிறது. ஆனால்,  தூக்கம்தான் வருவதில்லை.  நீ இல்லாததால் இனிமையாகத் தூங்குகின்ற வாய்ப்பு, இனி என் கண்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. " என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் வள்ளுவர். உலகிலேயே முதன்முறையாகத் தன் மனைவிக்கு இரங்கற்பா பாடிய முதல் புலவர்  திருவள்ளுவராகத்தான் இருப்பார்.


கடன் வாங்கியவனும், கடன் கொடுத்தவனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது இந்தக் காலத்தில் வாழும் பெரும்பாலான கணவன் மனைவிகளுக்கு இடையேயான உறவு. 

திருக்குறளில் ' இல்வாழ்க்கை ' என்னும்  அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைச் சொல்லிவிட்டு திருமணம் செய்து கொள்வதே தமிழர் திருமண முறையாகும். திருக்குறளை இயற்றிய வள்ளுவரும் அவர் மனைவி வாசுகியும் வாழ்ந்த இல்வாழ்க்கை முறையை வாசித்துவிட்டு அதன்படி வாழ்வதே தமிழர்களின் இல்வாழ்க்கை முறையாகும். 


" வள்ளுவம் ( திருக்குறள்)  பயின்றால் 

வாழ்க்கை செழிக்கும்!

வள்ளுவனையும் , வாசுகியையும் பயின்றால் 

இல்வாழ்க்கை செழிக்கும்! 


இவண் 

ஆ.தி.பகலன், 

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்