Ad Code

Ticker

6/recent/ticker-posts

அறம்பிற செய்யாமை நன்று

 தமிழ் அறிவோம்!


அறம்பிற செய்யாமை நன்று 



இக்கால மக்களிடம் ஆயிரம் ஆயிரமாய் பொருள் ஈட்ட நேரம் இருக்கிறது. ஆனால், அறச்செயல் ஒன்றினைச் செய்வதற்குத்தான் நேரம் இல்லை.  ஓர் அறச்செயல் செய்வதற்குக் கூட ஆயிரம்முறை ஆய்வு செய்பவர்களுக்கும்,  அறச்செயல்கள் செய்ய நேரம் இல்லாதவர்களுக்கும்,  அறச்செயல்கள் செய்ய பொருள் வேண்டுமே ,  அதற்கு என்ன செய்வது? என்று சிந்திப்பவர்களுக்கும் எளிமையான ஒரு வழியைக் காட்டியிருக்கிறார் வள்ளுவர்.


" பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 

செய்யாமை செய்யாமை நன்று. " 


( குறள் - 297)


"பொய் சொல்லாமை என்னும் ஓர் அறத்தை மட்டும் கடைப்பிடித்தால் போதும். பிற அறங்களைச் செய்யாவிடினும் நன்மை உண்டாகும் " என்கிறார் வள்ளுவர்.  மற்ற அறங்களைச் செய்வதற்கு மனம் இல்லாமல் போகலாம். பணம் இல்லாமல் போகலாம். எந்தச் செலவும் இல்லாமல் எல்லோராலும் செய்யக்கூடிய ஓர் அறச்செயல் உண்டென்றால் அது பொய் உரைக்காமல் இருப்பது மட்டுமே.  ஆகையால், வாழ்நாள் முழுக்க பொய் பேசாமல் இருக்க உங்கள் நாவுக்கு அன்போடு ஆணையிடுங்கள். வாய்மையை ( உண்மையை) மட்டும் பேசப் பழக்குங்கள்.  ஒருவேளை பொய் பேச நேரிட்டால் அதனால் நேரும் துன்பங்களை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். 


" பொய்யருக்குப் பொய்உரைத்தால் வெற்றியாம் ;  அவருக்குப் பொய்யாகாத 

மெய்யருக்குப் பொய்யுரைத்தால் தேய்பிறைபோல் தவம்குறையும், மிடியுண்டாகும் ; 

துய்யதாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால் வறுமைபிணி தொலையா; என்றும்

உய்யஅருள் தேசிகற்குப் பொய்யுரைத்தால் நரகமது உண்மைதானே "  


( அந்தகக் கவி வீரராகவர் பாடல்கள்)  


பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவனிடம் பொய் சொன்னால் வெற்றி உண்டாகும். பொய் சொல்வதை விரும்பாத ஒருவனிடம் பொய் சொன்னால்  இதுவரை நாம் செய்த அறச்செயல்களின் பலன்கள் அனைத்தும் நம்மைவிட்டு தேய்பிறைபோல் மெல்ல மெல்ல தேய்ந்து போகும். அதுவும் அல்லாமல் வறுமையும் உண்டாகும். தூய அன்புடைய தாய்தந்தையரிடம் பொய் சொன்னால், நம்மைச் சூழ்ந்திருக்கும் வறுமையும் ,, நோயும் நீங்கவே நீங்காது. நாம் வாழ்வதற்கு நல்வழி காட்டும் ஆசிரியர்களிடம் பொய் சொன்னால் நாம் வாழும் வாழ்க்கையே இருண்டுவிடும். நாம் பொய் சொல்லி வாழ்வதால் நமக்கு ஒருபயனும் கிட்டாது. நம் வாழ்க்கையே இருள் மயமாகிவிடும் என்பதையே இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.


"எந்தத் தவறு செய்தாலும் உண்மையைச் சொல்லி செய்த தவற்றை ஒப்புக்கொள்ளுங்கள்.  ஒருபோதும் பொய் சொல்லாதீர்கள். பொய் சொல்லி வாழ்வதைவிட உண்மையைச் சொல்லி சாவதுமேல் " என்று ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி நம் வீட்டுக் குழந்தைகளை வளர்ப்போம். வருங்காலத் தலைமுறை  வாய்மையோடு வாழ வழியமைத்துக் கொடுப்போம். 


இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்