" ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு " என்கிறது நியூட்டனின் மூன்றாம்விதி. நம் வாழ்வின் முழு விதியுமே அதுதான். நாம் எதை விதைக்கிறோமோ அதையேதான் அறுவடை செய்வோம். இந்த உலகத்தில் வாழும் மனிதர்களில் சிலர், வளமையின் உயரத்தில் வாழ்கிறார்கள். சிலரோ வறுமையின் துயரத்தில் வாழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் அவர்கள் முற்பகலில் ( முற்பிறவியில் அல்ல) செய்த நல்வினை, தீவினைகளே. நாம் செய்யும் செயல்களால் மற்றவர்களை வளம்பெற செய்தால் நாளை நம் வாழ்வு வளம்பெறும்.
" புத்தியோடு முத்திதரும் புண்ணியத்தால் அன்றியே
மத்தமிகு பாவத்தால் வாழ்வோமோ? - வித்துபயிர்
தாயாகி யேவளர்க்கும் தண்புனலால் அல்லாது
தீயால் வளருமோ ? செப்பு. "
( நீதி வெண்பா - 57)
விதைத்து உண்டாகும் நெற்பயிர் தாயைப் போல இருந்து தன்னை வளர்க்கும் குளிர்ந்த நீரால் வளருமே அன்றி தீயால் வளருமா? நீ சொல்.
அதுபோல, அறிவையும் வீடுபேற்றையும் கொடுக்கும் நல்வினையால் அல்லாமல், அறியாமை மிகுகின்ற தீவினையால் ஒருவருக்கு நல்வாழ்வு உண்டாகுமோ? உண்டாகாது. நாம் செய்கின்ற நல்வினையாலேயே நமக்கு நல்வாழ்வு உண்டாகும்.
இதை உணர்ந்தோர் இருப்பர் உயரத்தில்.
இதை உணராதோர் இருப்பர் துயரத்தில்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்