கடையெழு வள்ளல்களுள் ஒருவன்தான் காரி. திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவன். திருக்கோவீலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியையே ' மலாடு ' என்பர் . மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படுபவன்தான் வள்ளல் காரி. இரவலரிடம் எப்போதும் அருள்நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினன். வறியோர்க்கு அள்ளிக்கொடுப்பதில் நிகரற்றவன். அவனது கொடைத்தன்மையைப் போற்றும் கபிலரின் பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
" நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே "
( புறநானூறு - 123)
ஒரு மன்னன் கள்ளுண்டு மகிழ்ச்சியாக இருக்கும்போது புலவர்களுக்குத் தேர்களை அளிப்பது வழக்கம். அவ்வாறு , கள்ளுண்டு மகிழாது தெளிந்த அறிவோடும், குறையாத புகழோடும் வள்ளல் திருமுடிக்காரி இருக்கும்போதே , புலவர்களுக்கு அளித்த வேலைப்பாடுகள் நிறைந்த நெடிய தேர்கள் பயனுள்ள முள்ளூர் மலைமேல் பெய்த மழைத்துளிகளைவிட மிகுதியென்று காரியின் வள்ளல் தன்மையைப் போற்றி புகழ்கிறார் கபிலர்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்